"என்ன மச்சான் இது? நீங்க எந்தக் காலத்தில இருக்கீங்க? அத்தை பொண்ணைக் கட்டிக்கறது, மாமன் மகனைக் கட்டிக்கறதெல்லாம் இந்தக் காலத்தில சரியா வருமா? சினிமாவிலதான் இதையெல்லாம் இன்னும் தூக்கிப் புடிச்சுக்கிட்டிருக்காங்க. உறவுக்குள்ள கல்யாணம் செஞ்சுக்கிட்டா, அவங்களுக்குப் பிறக்கற குழந்தைங்களோட ஆரோக்கியம் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கறதா விஞ்ஞான ரீதியாக் கண்டு பிடிச்சிருக்காங்க" என்றான் பரமசிவம்.
"உன் பொண்ணைக் கொடுக்க இஷ்டம் இல்லேன்னு சொல்லு. அதை விட்டுட்டு இல்லாத கதையெல்லாம் ஏன் சொல்ற?" என்றான் தண்டபாணி, கோபத்துடன்.
"என்ன மச்சான், மாப்பிள்ளைங்கற மரியாதை கூட இல்லாம பேசறீங்க?" என்றான் பரமசிவம், பொறுமையுடன்.
"உனக்கெல்லாம் என்னடா மரியாதை? உன் பொண்ணு யாரையோ காதலிக்கறா. அதை மறைக்கறதுக்காக, இல்லாத கதையெல்லாம் சொல்ற. பொண்ணை ஒழுங்கா வளர்க்கத் தெரியல. நீ எனக்கு விஞ்ஞானப் பாடம் எடுக்கறியா?" என்றான் பரமசிவம்.
"என்னடா சொன்ன?" என்றபடியே, பரமசிவம் தண்டபாணியின் சட்டையைப் பிடிக்க, சுமதி வேகமாக வந்து இருவரையும் விலக்கினாள்.
கோபமாக வெளியேறினான் தண்டபாணி.
அன்றே இரு குடும்பங்களுக்கும் இடையிலான உறவு முறிந்தது.
"இனிமே நீ உன் மகளைப் பாக்கப் போறேன்னு அந்த வீட்டுக்குப் போறதா இருந்தா, இங்கே திரும்பி வராதே!" என்று தன் தன் அம்மா பாக்கியலட்சுமியிடம் உறுதியாகச் சொல்லி விட்டான் பரமசிவம்.
"உனக்கும் மாப்பிள்ளைக்கும் சண்டைன்னா, அதுக்கு நான் ஏண்டா என் பொண்ணைப் பாக்காம இருக்கணும்?" என்று பாக்கியலட்சுமி கூறினாலும், மகனின் கோபத்துக்கு பயந்து, அவள் மகளைப் பார்க்கப் போகவில்லை.
பரமசிவமும் தன் மனைவி சுமதி தன் அம்மாவைப் பார்க்க தண்டபாணி வீட்டுக்குப் போகக் கூடாது என்று கூறி விட்டதால், அவளும் அம்மாவைப் பார்க்க வரவில்லை.
சில மாதங்கள் கழித்து, சுமதிக்கு உடல்நிலை சரியில்லை என்று பரமசிவத்திடமிருந்து செய்தி வந்தது. தண்டபாணி, அவன் மனைவி சாரதா, தாய் பாக்கியலட்சுமி ஆகிய மூவரும் பரமசிவத்தின் வீட்டுக்கு விரைந்தனர்.
கட்டிலில் சோர்வாகப் படுத்திருந்த மகள் சுமதியைப் பார்த்ததும், "என்னடி ஆச்சு உனக்கு?" என்று வெடித்து வந்த அழுகையுடன் கேட்டபடியே, சுமதியின் தலையில் ஆதரவாகக் கையை வைத்தாள் பாக்கயலட்சுமி.
சுமதியின் கண்களில் நீர் வழிந்தது. ஏதோ பேச நினைத்து முடியாமல், அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டாள் அவள்.
"என்ன ஆச்சு மாப்பிள்ளை?" என்றான் தண்டபாணி, பரமசிவத்தைப் பார்த்து.
"கொஞ்ச நாளாவே கொஞ்சம் சோர்வா இருந்தா. அம்மாவைப் பார்க்க முடியலியேன்னு வருத்தமா இருக்கும்னு நினைச்சேன். சரி, உன் அண்ணன் வீட்டுக்குப் போய் உன் அம்மாவைப் பாத்துட்டு வான்னு சொல்லலாம்னு நினைச்சேன். ஆனா அதுக்குள்ள, ஒருநாள் திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டா. அவளுக்கு ஏற்கெனவே சர்க்கரை வியாதி இருந்ததா, கொஞ்ச நாளா சரியா சாப்பிடாததால, சர்க்கரை அதிகமாயிடுச்சு. ஆஸ்பத்திரியில சேத்தேன். அங்கே ஒரு வாரம் சிகிச்சை கொடுத்து அனுப்பி இருக்காங்க. சர்க்கரை அதிகமா இருக்கறதால, இனிமே தினம் ரெண்டு வேளை இன்சுலின் ஏத்தணும், உடம்பை ஜாக்கிரதையாப் பாத்துக்கணும். இல்லேன்னா உயிருக்கே ஆபத்தாயிடும்னு டாக்டர் சொல்லி இருக்காரு" என்றான் பரமசிவம். பேசும்போதே அவன் குரல் தழுதழுத்தது.
"அடப்பாவிங்களா! உங்களுக்குள்ள போட்ட சண்டையால, என் பொண்ணு உயிருக்கே ஆபத்து ஏற்படற நிலைக்குக் கொண்டு வந்துட்டீங்களே! ஏன் மாப்பிள்ளை, ஆஸ்பத்திரியில சேத்தப்பறம் கூடவா எனக்கு சொல்லி அனுப்பக் கூடாது? உயிரே போயிடுங்கற நிலைமை வந்தாதான், நீங்க மனசு மாறுவீங்களா?" என்று அழுகையுடனும், ஆத்திரத்துடனும் கத்தினாள் பாக்கியலட்சுமி.
தண்டபாணியும், பரமசிவமும் ஏதும் பேசாமல் தலைகுனிந்து நின்றனர்.
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 89
உட்பகை
குறள் 885:
உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்.
No comments:
Post a Comment