Wednesday, July 5, 2023

882. நள்ளிரவில் நிகழ்ந்த மாற்றம்!

மாநில சட்டமன்றத் தேர்தலில், இரண்டு முக்கிய கட்சிகளுக்குமே பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் கிடைக்கவில்லை. இரு கட்சிகளும் கிட்டத்தட்ட சமமான அளவில் இடங்களைப் பெற்றிருந்தன.

அந்த நிலையில், ம.ஜ.க கட்சியின் தலைவர் திருமூர்த்தி விரைவாகச் செயல்பட்டு, மூன்று சிறிய கட்சிகளின் ஆதரவைப் பெற்று, பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை உருவாக்கி விட்டார்.

திருமூர்த்தி தன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலை ஆளுனரிடம் கொடுத்துத் தன்னை முதல்வராகப் பதவி ஏற்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று கோரினார். அவர் கோரிக்கையைப் பரிசீலித்து விரைவிலேயே முடிவை அறிவிப்பதாக ஆளுனர் அறிவித்தார்.

"ஆளுனர் நாளைக்கு என்னை முதல்வரா நியமிச்சுக் கடிதம் கொடுத்துடுவார்னு நினைக்கறேன். நாளைக்கே பதவி ஏற்பு விழாவை வச்சுக்கலாம். ரொம்பக் கஷ்டப்பட்டு, இந்த முறை ஆட்சியைப் பிடிச்சிருக்கோம். எல்லாம் நல்லபடியா நடக்கணும். கட்சியில எனக்குப் போட்டியா இருந்த தனபால் என் தலைமையை ஏத்துக்கிட்டாலும், அவன் எப்ப என்னைக் கவுத்துடுவானோன்னு எனக்கு ஒரு பயம் இருந்துக்கிட்டிருக்கு. அவன் மேல மட்டும் ஒரு கண் வச்சுக்க" என்றார் திருமூர்த்தி, அவரது  வலது கரம் என்று கருதப்படும் ஆறுமுகத்திடம்.

"என்ன ஆறுமுகம்? எதுக்கு இந்த அதிகாலையில ஃபோன் பண்ற?" என்றார் திருமூர்த்தி, அதிகாலை உறக்கத்திலிருந்து எழுப்பப்பட்ட எரிச்சலுடன்.

"தலைவரே! குடி முழுகிப் போச்சு! நம்ம கட்சி எம் எல் ஏக்கள் 20 பேர்  நள்ளிவில ஆளுனரைச் சந்திச்சு, இ.ம.க. கட்சித் தலைவர் பரந்தாமனுக்கு ஆதரவு கொடுக்கறதாக் கடிதம் கொடுத்திருக்காங்க. அதனால, ஆளுனர் இ.ம.க.வுக்குப் பெரும்பான்மை இருக்குன்னு தீர்மானிச்சு, பரந்தாமனுக்கு அதிகாலையிலேயே பதவிப் பிரமாணம் செஞ்சு வச்சுட்டாரு!" என்றான் ஆறுமுகம், பரபரப்புடன்.

"இது எப்படி நடந்தது? நான் சந்தேகப்பட்டது சரியாப் போச்சு. தனபால் தன் புத்தியைக் காட்டிட்டான். கட்சிக்கு துரோகம் பண்ணி..."

"ஐயா! ஒரு நிமிஷம். தனபால் இப்பவும் நம்ம கட்சியிலதான் இருக்காரு. உங்களுக்கு ஆதரவாத்தான் இருக்காரு. துரோகம் பண்ணினது அவர் இல்ல, உங்க தம்பி பையன்தான்!" என்றான் ஆறுமுகம்.

"என்னது? சதீஷா?" என்றார் திருமூர்த்தி, அதிர்ச்சியுடன்.

"ஆமாம். அவர்தான் நம்ம கட்சியிலேந்து 20 எம் எல் ஏக்களைக் கூட்டிக்கிட்டுப் போய் ஆளுனரைச் சந்திச்சவரு. அதுக்குப் பரிசா, அவருக்குத் துணை முதல்வர் பதவி கொடுத்திருக்காங்க!" என்றான் ஆறுமுகம்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 89
உட்பகை

குறள் 882:
வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.

பொருள்: 
வாளைப் போல் வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை, ஆனால் உறவினரைப் போல் இருந்து, உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...