Saturday, July 1, 2023

880. முன்னாள் பார்ட்னர்

"தம்பிதுரை என் பார்ட்னரா இருந்தவர்தான். அவரு கணக்கில மோசடி பண்ணி என்னை ஏமாத்தினானதைக் கண்டுபிடிச்சு, அவரை நீக்கிட்டு நான் இந்த நிறுவனத்தைத் தனியா நடத்திக்கிட்டிருக்கேன். ஆனா வெளியில போனதிலேந்து அவரு எனக்கு தொந்தரவு கொடுத்துக்கிட்டே இருக்காரு" என்றார் சிவசுப்பிரமணியன்.

"என்ன மாதிரி தொந்தரவு?" என்றார் சண்முகம். சண்முகம் சிவசுப்பிரமணியனின் நிறுவனத்துக்கு மூலப்பொருட்கள் சப்ளை செய்பவர்.

"பலவிதமான தொந்தரவு. உதாரணமா, எனக்கு நிறைய கடன் இருக்கு. என்னால சப்ளையர்களுக்குப் பணம் கொடுக்க முடியாதுன்னு ஒரு வதந்தியை சந்தையில பரப்பி இருக்காரு. இது உண்மையான்னு தெரிஞ்சுக்க நீங்க என்னைப் பார்க்க நேரில வந்திருக்கீங்க. எத்தனை பேரு இந்த வதந்தியை நம்பி என்னோட வியாபாரத் தொடர்பே வச்சுக்க வேண்டாம்னு முடிவு செஞ்சிருக்காங்களோ!"

"வேற என்ன தொந்தரவுகள்ளாம் கொடுப்பாரு?"

"வியாபாரத்தைக் கெடுக்க என்னென்ன செய்ய முடியுமோ அதெல்லாம் செய்வாரு. என் வாடிக்கையாளர்கள்கிட்ட போய் சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் நான் கடன்ல பொருட்களை சப்ளை பண்றதா சொல்லி அவங்களுக்கும் அது மாதிரி கடன்ல பொருட்களை சப்ளை பண்ணச் சொல்லி எங்கிட்ட கேட்கச் சொல்லித் தூண்டி விடுவாரு. நான் கணக்கில காட்டாம வியாபாரம் செய்யறதா இன்கம் டாக்ஸ், சேல்ஸ் டாக்ஸ் அதிகாரிகளுக்கெல்லாம் மொட்டைக் கடுதாசி எழுதிப் போடுவாரு. நான் குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு வச்சிருக்கேன்னு லேபர் டிபார்ட்மென்ட்டுக்கு எழுதுவாரு."

"அடப்பாவமே!"

"அதோடயா'? என் ஆஃபீஸ்ல வேலை செஞ்ச ஒரு பொண்ணோட எனக்குத் தொடர்பு இருக்கறதா ஒரு பொய்யைப் பரப்பினாரு. என் மனைவி இதை நம்பல. ஆனா அந்தப் பொண்ணு பாவம் அந்த அவதூறுக்கு பயந்து வேலையை விட்டுப் போயிட்டாங்க."

"இப்படிப்பட்ட எதிரிகளை விட்டு வைக்கக் கூடாது சார்!"  என்றார் சண்முகம்.

"என்ன செய்ய முடியும்?"

"போலீஸ்ல புகார் கொடுக்கணும். அல்லது ஏதாவது செஞ்சு அவரை முடக்கணும். இந்த மாதிரி எதிரிகளோட வாழறது உயிர்க்கொல்லி நோய்களோட வாழற மாதிரி. நம்ம வாழ்க்கைக்கே அச்சுறுத்தலானவங்க இவங்க!" என்றார் சண்முகம்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 88
பகைத்திறந்தெரிதல் (பகையின் தன்மையை அறிதல்)

குறள் 880:
உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்.

பொருள்: 
பகைவரின் சக்தியை அழிக்க முடியாதவர்கள் மூச்சு இருக்கும் வரை உயிர் வாழ்வார்கள் என்று கூற முடியாது.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1062. கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்!

செல்வகுமார் தன் மனைவி கோமதியுடன் காரில் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தபோது வழக்கம் போல் காரில் பழைய திரைப்படப் பாடல்களைப் போட்டுக் கேட்டுக்...