Saturday, July 1, 2023

879. இலக்கிய அணிச் செயலாளர்

நன்மாறன் அந்தக் கட்சியில் சேர்ந்த சிறிது காலத்துக்குள்ளேயே கட்சித் தலைவரின் நன்மதிப்பைப் பெற்று விட்டான். அவனுடைய பேச்சுத் திறமை கட்சி மேடைளில் உரையாற்ற அவனுக்கு நிறைய வாய்ப்புக்களைப் பெற்றுத் தந்தது.

"தலைவர் நன்மாறனுக்கு ரொம்பவும்தான் இடம் கொடுக்கறாரு. போற போக்கைப் பாத்தா அவன் நம்மையெல்லாம் தாண்டிப் போயிடுவான் போல இருக்கே!" என்றார் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏழுமலை.

"தலைவருக்கே சவாலாக வந்தாலும் ஆச்சரியப்படறதுக்கில்ல!" என்றார் மற்றொரு தலைவரான நாகப்பன்.

"தலைவர் அதுக்கெல்லாம் இடம் கொடுக்க மாட்டார்" என்றார் கரிகாலன் என்ற மற்றொரு மூத்த தலைவர்.

இந்த நிலையில் நன்மாறன் கட்சியில் தனக்கென்று ஒரு ஆதரவு அடித்தளத்தை அமைத்துக் கொண்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகின

"தலைவர் இன்னுமா வேடிக்கை பாத்துக்கிட்டிருக்காரு? அவனைக் கட்சியை விட்டுத் தூக்க வேண்டாம்?" என்றார் ஏழுமலைஆவேசத்துடன்.

"இப்ப அவனைக் கட்சியை விட்டுத் தூக்கினா கட்சிக்குள்ள அவன் வளருவதைப் பொறுக்காமதான் தலைவர் அவனைக் கட்சியை விட்டு நீக்கிட்டதா சொல்லுவாங்க. அதோட அவன் மேல அனுதாபம் வரும். நம்ம கட்சியிலேந்தே சில பேர் அவன் பின்னால போவாங்க. அதானால தலைவர் அப்படிச் செய்ய மாட்டாரு" என்றார் நாகப்பன்.

"சட்டமன்றத் தேர்தல்ல அவனுக்கு சீட் கொடுத்து அவன் ஜெயிச்சான்னா அவனுக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பாப்பாரோ என்னவோ!" என்றார் ஏழுமலை கேலியாக.

"ஆபத்தானவங்களைப் பக்கத்தில வச்சுக்கறது கூட ஒரு நல்ல உத்திதான்!" என்றார் நாகப்பன்.

"நீங்க யாருமே தலைவரைப் புரிஞ்சுக்கல. தலைவரோட அணுகுமுறையே வித்தியாசமா இருக்கும். கட்சியில தன்னிச்சையா செல்படறவங்களை அவர் விட்டு வைக்க மாட்டார். அவங்க தனக்குச் சவாலா வருவாங்கன்னு அவருக்குத் தெரியும். அவங்களை முளையிலேயே கிள்ளி எறிஞ்சுடுவாரு. இதுக்கு எத்தனையோ உதாரணங்களை என்னால சொல்ல முடியும்!" என்றார் கரிகாலன்.

'நீங்களே ஒரு உதாரணம்தானே! கட்சியில இரண்டாம் இடத்தில இருந்துக்கிட்டு தலைவரைக் கவிழ்க்கப் பாத்த உங்களை ஒண்ணுமில்லாம ஆக்கி எங்களோட உக்காந்து பேசிக்கிட்டிருக்கிற நிலைக்குக் கொண்டு வந்துட்டாரே!' என்று நினைத்துக் கொண்டார் நாகப்பன்.

சில நாட்கள் கழித்து நன்மாறன் கட்சியின் இலக்கிய அணிச் செயலாளராக நியமிக்கப்பட்டதாகச் செய்தி வந்தது.

அந்தக் கட்சியில் ஒருவர் இலக்கிய அணிச் செயலாளராக நியமிக்கப்பட்டால் கட்சிக்குள் அவருடைய அரசியல் செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாகப் பொருள். அவரிடமிருந்து ஒதுங்கியே இருக்க வேண்டும் என்று கட்சியில் அனைவருக்கும் கொடுக்கப்படும் சமிக்ஞை அது.

"நான் சொன்னேன் இல்ல, தலைவர் அவனை விட்டு வைக்க மாட்டார்னு? இனிமே அவன் ஆள் இல்லாத அரங்குகள்ள 'தலைவரோட வெற்றிக்குக் காரணம் அவரது அரசியல் ஆளுமையா அல்லது நிர்வாகத் திறமையா?' ன்னு பட்டிமன்றப் பேச்சாளர்களை வச்சு பட்டிமன்றங்கள் நடத்திக்கிட்டிருக்க வேண்டியதுதான். கூட்டச் செலவுக்குக் கூடக் கட்சியில பணம் கொடுக்க மாட்டாங்க!' என்று சொல்லிச் சிரித்தார் கரிகாலன்.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 88
பகைத்திறந்தெரிதல் (பகையின் தன்மையை அறிதல்)

குறள் 879:
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.

பொருள்: 
முள் மரத்தை இளையதாக இருக்கும்போதே வெட்ட வேண்டும், காழ்ப்பு ஏறி முதிர்ந்த போது வெட்டுகின்றவரின் கையை அது வருத்தும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...