"ஏதோ உணர்ச்சி வசப்பட்டுப் பேசி இருப்பார்னு நினைக்கறேன். விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புங்க. வருத்தம் தெரிவிச்சார்னா, மன்னிச்சு விட்டுடலாம்!" என்றார் கட்சித் தலைவர் மாசிலாமணி.
"என்னங்க இது? இவ்வளவு மென்மையா இருக்கீங்க? இப்படிப் பேசினதுக்கு, அவரைக் கட்சியை விட்டே தூக்கணும். அப்பதான் மத்தவங்களுக்கு ஒரு பயம் இருககும்."
"எப்பவாவது உணர்ச்சி வசப்பட்டுத் தப்பா எதையாவது பேசறது எல்லாருக்கும் இயல்புதான். அவர் கட்சியில ரொம்ப வருஷமா இருக்காரு. நல்ல உழைப்பாளி. ஒரு வாய்ப்புக் கொடுக்கலாம். மறுபடி இப்படிப் பேசினார்னா, அப்ப நடவடிக்கை எடுக்கலாம். ஆனா, அப்படி நடக்காதுன்னு நினைக்கறேன்!" என்றார் மாசிலாமணி, சிரித்தபடி.
"தங்கப்பன் பேசினதைப் பாத்தீங்க இல்ல?" என்றார் மாசிலாமணி.
"கொஞ்சம் அதிகமாத்தான் பேசி இருக்காரு. உடனே வருத்தம் தெரிவிச்சுட்டாரே!" என்றார் அன்பரசன்.
"வருத்தம் தெரிவிச்சா சரியாப் போச்சா? கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, கட்சிப் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தற மாதிரி பேசினார்னு சொல்லி, அவரைக் கட்சியிலேந்து நீக்கிடுங்க!" என்றார் மாசிலாமணி.
"என்னங்க இது? அன்னிக்கு ராஜவேல் விஷயத்தில அவ்வளவு மென்மையா நடந்துக்கிட்டீங்க. அவர் உங்களையே தாக்கிப் பேசினாரு. இவர் கட்சியோட செயல்பாடு பற்றிப் பொதுவாத்தான் பேசி இருக்காரு. ராஜவேல் பேசினதோட ஒப்பிடச்சே, தங்கப்பன் பேசினது ஒண்ணுமே இல்லை. ஏன் தங்கப்பன் விஷயத்தில இவ்வளவு கடுமை காட்டறீங்க?" என்றார் அன்பரசன், புரியாமல்.
"ராஜவேல் என்னைத்தான் விமரிசனம் செஞ்சார். அது பரவாயில்ல. தங்கப்பன் கட்சிக்கு எதிராப் பேசி இருக்காரு. அதை மன்னிக்க முடியாது" என்றார் மாசிலாமணி.
கட்சிக்குள் மாசிலாமணிக்கு எதிரான ஒரு குழுவை உருவாக்கிக் கொண்டிருந்த தங்கப்பனைக் கட்சியிலிருந்து எப்படி வெளியேற்றுவது என்று யோசித்துக் கொண்டிருந்த மாசிலாமணி, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டதை அவர் அன்பரசனிடம் வெளிப்படையாகச் சொல்லவில்லை!
பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 89
உட்பகை
குறள் 883:
உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்.
No comments:
Post a Comment