Friday, July 7, 2023

886. சேகர் பிரதர்ஸ்

"நீங்களும், உங்க தம்பியும் பத்து வருஷமா ஒற்றுமையாத் தொழில் செய்யறீங்க. மார்க்கெட்ல முன்னணியில இருக்கீங்க. இப்ப பங்கு பிரிச்சுக்கிட்டு தனித் தனியாத் தொழில் செய்யணும்னு நினைக்கறது புத்திசாலித்தனம் இல்ல. இது உங்க தொழிலை பாதிக்கும்" என்றார் ஆடிட்டர் குமார்.

"இல்லை, சார். இந்தத் தொழில் வெற்றிக்கு முழுக் காரணம் என்னோட உழைப்புதான். என் தம்பி ராஜசேகரோட பங்களிப்பு எதுவுமே இல்ல. ஆனா, அவன் அதிகாரம் செலுத்தறதில மட்டும் குறியா இருக்கான். இதை என்னால அனுமதிக்க முடியாது. எங்களுக்கு இருக்கற தொழிற்சாலைகள், கடைகள் எல்லாத்தையுமே அவனுக்கு, எனக்குன்னு பிரிச்சுடப் போறேன். அவன் பங்குக்கு வரதை மட்டும் அவன் பாத்துக்கட்டும்!" என்றார் தனசேகர், உறுதியாக.

"உங்க விருப்பம்!" என்றார் ஆடிட்டர்.

"சேகர் பிரதர்ஸை வீழ்த்தணும்னு இவ்வளவு வருஷமா முயற்சி செஞ்சுக்கிட்டிருக்கேன், முடியல. இப்ப அவங்களே எனக்கு வழி விட்டுருக்காங்க!" என்றார் அருண் என்டர்பிரைசஸ் அதிபர் அருணன்.

"அவங்க க்ரூப் ரெண்டாப் பிரிஞ்சதைச் சொல்றீங்களா? தனசேகரோட நிறுவனம் வலுவாத்தான் இருக்கும்னு நினைக்கறேன். ராஜசேகர்தான் கொஞ்சம் பலவீனமானவர். அவரால நிலைச்சு நிற்க முடியாது" என்றார் அருணின் நண்பர் மூர்த்தி.

"தனசேகரும் அடி வாங்குவாரு. ரொம்ப வலுவா இருந்து, குடும்பத் தகராறால பிரிஞ்ச பல நிறுவனங்கள் இருந்த இடம் தெரியாம போனதை நாம பாத்திருக்கமே! ரெண்டு வெவ்வேற நிறுவனங்கள் தொழில்ல போட்டி போடறதை விட, அண்ணன் தம்பி போட்டி ரொம்ப ஆக்ரோஷமா இருக்கும். அவங்களே ஒத்தரை ஒத்தர் அழிச்சுப்பாங்க. என்ன நடக்கப் போகுதுன்னு நீங்களே பாருங்களேன்!" என்றார் அருண்.

அருண் கணித்தபடியே, அடுத்த சில ஆண்டுகளில் தனசேகர், ராஜசேகர் ஆகிய இருவருடைய நிறுவனங்களும் பெரும் இழப்பைச் சந்தித்த பின், மூடப்பட்டன.

பொருட்பால்
நட்பியல்
அதிகாரம் 89
உட்பகை

குறள் 886:
ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது.

பொருள்: 
ஒருவனுடைய உற்றாரிடத்தில் பகைமை ஏற்படுமானால், அந்த உட்பகையால் அவன் அழியாமலிருத்தல் எப்போதும் அரிது.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...