"புதுசா கட்சி ஆரம்பிச்சு, தேர்தல்ல ஜெயிச்சு, ஆட்சியைப் பிடிக்கறதுங்கறது சாதாரண விஷயம் இல்ல. சாதிச்சுட்டடா!" என்றான் தாமு.
"டேய்! நாமெல்லாம் நண்பர்கள்தான்னாலும், பரணி இப்ப முதல்வரா ஆகப் போறான். இனிமே, அவனை வாடா போடான்னு பேசறது சரியா இருக்காது. முதல்வருக்குரிய மரியாதையோடதான் பேசணும். நான் பரணியை விடவும், உங்க எல்லாரையும் விடவும் வயசில பெரியவன்னாலும், நானே இனிமே பரணிகிட்ட மரியாதையாதான் பேசுவேன்" என்றான் சக்ரபாணி.
"என்ன மாமா! துணை முதல்வர் பதவிக்காக, பரணியைக் காக்கா புடிக்கறீங்களா?" என்றான் நடராஜன், விளையாட்டாக.
"சக்ரபாணி அண்ணன் சொல்றது சரிதான். சின்னப் பசங்க விளையாட்டா கட்சி ஆரம்பிச்சு, மக்கள் ஒரு மாற்றம் வேணும்னு ஓட்டுப் போட்டதால, ஆட்சிக்கு வந்துட்டாங்கன்னு ஏற்கெனவே பல பேர் வெளிப்படையாவே பேசறாங்க. அதனால, நாம சின்னப் பசங்க மாதிரி நடந்துக்காம, பொறுப்பா நடந்துக்கணும். அதோட, நாம ஆறு பேர் சேர்ந்து இந்தக் கட்சியை ஆரம்பிச்சாலும், பல பிரபலங்களும், மற்ற கட்சிகளிலிருந்து வந்த சில தலைவர்களும் நம்ம கட்சியில சேந்திருக்காங்க. அதனால, இந்தக் கட்சி நமக்கு சொந்தம்னு நினைக்காம, நாம கொஞ்சம் அடக்கியே வாசிக்கணும்" என்றான் அரவிந்தன்.
"அப்ப, மாமாவுக்கு துணை முதல்வர் பதவி இல்லையா?" என்று சுரேஷ் கேட்க, மாமா என்று அழைக்கப்பட்ட சக்ரபாணி உட்பட அனைவரும் சிரித்தனர்.
"உங்களோட உழைப்பாலதான் நம் கட்சி சீக்கிரமே இவ்வளவு பெரிசா வளர்ந்து, நாம தேர்தல்ல ஜெயிச்சு, ஆட்சிக்கு வந்திருக்கோம். உங்களோட முயற்சியாலேயும், ஆதரவாலேயும்தான், கட்சி என்னை முதல்வராத் தேர்ந்தெடுத்திருக்கு. நம் நட்பு எப்பவுமே வலுவாத்தான் இருக்கும். ஆனா நீங்க எல்லாரும் சொன்ன மாதிரி, கட்சியில இருக்கற மத்தவங்ககிட்டேயும், மக்கள்கிட்டேயும் நாம நல்ல பேர் வாங்கணும். அப்பதான், நாம நினைச்சபடி சிறப்பா செயல்பட முடியும். அதனால, நீங்க எல்லாரும் நான் செய்யற விஷயங்களைப் புரிஞ்சுக்கிட்டு, எனக்கு ஆதரவா இருக்கணும்" என்றான் பரணி.
ஆறு மாதங்கள் கழித்து, சக்ரபாணியைத் தனியாகச் சந்தித்த பரணி, "என்ன அண்ணே! எல்லாம் எப்படிப் போய்க்கிட்டிருக்கு?" என்றான்.
"ரொம்ப நல்லா போய்க்கிட்டிருக்கு பரணி. உன் அணுகுமுறையும், திட்டங்களும் மக்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. நம் மாநிலம் எல்லாத் துறைகளிலேயும் நல்ல முன்னேற்றங்களை அடைஞ்சுக்கிட்டிருக்கு. எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு!" என்றான் சக்ரபாணி.
"அண்ணே! நம் நண்பர்கள்ள, அரவிந்தனைத் தவிர, வேற யாருக்கும் நான் மந்திரி பதவி கொடுக்கல. உங்களைத் துணை முதல்வர் ஆக்குவேன்னு பலரும் எதிர்பார்த்தாங்க."
"ஆனா நான் எதிர்பாக்கலியே!" என்றான் சக்ரபாணி, இடைமறித்து.
"உங்களுக்கு வருத்தம் ஏதும் இல்லையே?" என்றான் பரணி, தயக்கத்துடன்.
"நிச்சயமா இல்ல. நான்தான் அதை எதிர்பாக்கவே இல்லேன்னு சொன்னேனே!"
"கோபத்திலேயோ, வருத்தத்திலேயோ சொல்றீங்களா?"
"இல்லவே இல்லே. உண்மையாத்தான் சொல்றேன். உன்னோட சிந்தனை எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியும். நாம எல்லோருமே அரசியல்ல அனுபவம் இல்லாதவங்க. நீ முதல்வரானது இயல்பான விஷயம். ஏன்னா, நீ தலைவன். ஆனா, மத்த அமைச்சர்களா விஷயம் தெரிஞ்சவங்களையும் அனுபவம் உள்ளவங்களையும்தானே நியமிக்கணும்? அப்படித்தான் நீ செய்வேன்னு எதிர்பார்த்தேன். நம்ம குழுவில, அரவிந்தன் ஒரு ஜீனியஸ்னு எல்லாருக்கும் தெரியும். அதனால, அவனை மட்டும் அமைச்சர் ஆக்கினது சரிதான்."
"நீங்க என்னைப் புரிஞ்சுக்கிட்டிருக்கீங்க. ஆனா, மத்த நண்பர்கள் எல்லாம் தப்பா நினைப்பாங்களோன்னு எனக்கு ஒரு பயம் இருக்கு. நீங்க எதையும் சரியாப் புரிஞ்சுக்கறவர்ங்கறதால, உங்ககிட்ட வெளிப்படையாப் பேசினேன். ஆனா, மத்தவங்ககிட்ட பேசி, அவங்களுக்குப் புரிய வைக்க முடியுமான்னு தெரியல."
"உனக்கு அந்தக் கவலையே வேண்டாம், பரணி. எல்லாரும் உன்னை சரியாத்தான் புரிஞ்சக்கிட்டிருக்காங்க. அதோட, நீ எங்க எல்லாருக்கும் கட்சியில பொறுப்புக்கள் கொடுத்திருக்க. அதுவும், யாருக்கு என்ன திறமை இருக்குன்னு பாத்து, அதுக்கேத்த பொறுப்பைக் கொடுத்திருக்க. நீ விருப்பு வெறுப்பு இல்லாம செயல்பட்டு, எது சரின்னு யோசிச்சு செய்யறதைப் பாத்து, நாங்க எல்லாருமே உன் நண்பர்களா இருக்கறதில பெருமை உள்ளவங்களா இருக்கோம். நீ தயங்காம யாரை வேணும்னாலும் கூப்பிட்டுப் பேசு. அவங்க எல்லாரும் இதையேதான் சொல்லுவாங்க" என்றான் சக்ரபாணி, பெருமை ததும்பம் குரலில்.
குறள் 528:
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.