"இன்னும் எவ்வளவு நாள் இருக்கு?" என்றாள் சுகன்யா
"இன்னும் ஒரு வாரம்தான். அதுக்குள்ள நாம வேற வீடு பாத்துக்கிட்டு, இந்த வீட்டை விட்டுட்டுப் போகணும்" என்றான் அழகேசன்.
"எப்படிங்க? என்ன செய்யப் போறோம்? பள்ளிக் கூடத்தில படிக்கிற ரெண்டு பிள்ளைங்க வேற இருக்காங்க!" என்றாள் சுகன்யா. அவளுக்கு அழுகை வந்து விடும் போல் இருந்தது.
சில மாதங்கள் முன்பு வரை அவர்கள் வசதியான வாழ்க்கைதான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
சில வருடங்களாகவே தன் தொழில் சரிந்து கொண்டிருப்பதைப் பற்றி அழகேசன் சுகன்யாவிடம் சொல்லவில்லை. நிலைமை எவ்வளவு மோசமாக இருந்தாலும், எல்லாம் எப்படியோ சரியாகி விடும் என்று பொதுவாக எல்லா மனிதர்களுக்கும் இருக்கும் குருட்டு நம்பிக்கையில் அழகேசனும் இருந்தான்.
ஆனால், தவிர்க்க முடியாத நிகழ்வு நடந்தே விட்டது. இனியும் தொழிலை நஷ்டத்தில் நடத்த முடியாது என்ற நிலை வந்ததும், தொழிலை மூடுவது என்று முடிவு செய்த பிறகுதான், நிலைமை எந்த அளவுக்கு மோசமாகப் போய் விட்டது என்பது அவனுக்குப் புரிந்தது.
எல்லாமே போய் விட்டது - குடியிருந்த சொந்த வீடு உட்பட. ஒரு வாரத்தில் வீட்டைக் காலி செய்து, கடன் கொடுத்த வங்கியிடம் ஒப்படைக்க வேண்டும்.
நகைகள் உட்பட அநேகமாக எல்லாப் பொருட்களையும் விற்றாகி விட்டது. வீட்டைக் காலி செய்யும்போது எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள் என்று எதுவுமே இல்லை என்ற நிலை!
"என்ன செய்யப் போறோம்?" என்றாள் சுகன்யா, கவலையுடன்.
'என்ன செய்யப் போறீங்க?' என்று கேட்காமல் "என்ன செய்யப் போறோம்?" என்று கேட்ட மனைவியின் அன்பையும், பொறுப்புப் பகிர்வையும் உணர்ந்து நெகிழ்ந்த அழகேசன், "கவலைப்படாதே! ஏதாவது வேலை பார்த்து குடும்பத்தைக் காப்பாத்திடுவேன்!" என்றான்.
"அது எனக்குத் தெரியும். வீட்டைக் காலி பண்ணிட்டு எங்கே போகப் போறோம்? வாடகைக்கு வீடு பாத்தா, அட்வான்ஸ் கொடுக்கக் கூட நம்மகிட்ட பணம் இல்லையே!" என்றாள் சுகன்யா.
"அதுதான் எனக்கும் புரியல. ஆனா ஒரு நல்ல விஷயம். நம்மகிட்ட சாமான்கள் எதுவும் இல்லை. நம் உடைகளை மட்டும் பெட்டியில வச்சுக்கிட்டுக் கிளம்ப வேண்டியதுதான்" என்று சொல்லிச் சிரித்தான் அழகேசன்.
மனம் உடைந்து விடும் சோகத்தில் இருக்கும் கணவன், தன் வருத்தத்தைக் குறைப்பதற்காகத்தான் இவ்வாறு நகைச்சுவையாகப் பேசுவது போல் பேசுகிறான் என்ற உணர்வு சுகன்யாவின் துக்கத்தை இன்னும் அதிகரித்தது.
"ஏங்க? நீங்க சொன்ன வாடகையை விட ஆயிரம் ரூபா குறைச்சுக் கேட்டாரு. அதுக்கு ஒத்துக்கிட்டிருக்கலாம் இல்ல? மாட்டேன்னுட்டீங்களே!" என்றாள் சுமதி.
"எதுக்குக் குறைக்கணும்? இந்த ஏரியாவில இந்த மாதிரி வீட்டுக்கு நியாயமான வாடகை என்னவோ அதைத்தானே நான் கேட்டேன்? இவங்க இல்லாட்டா, வேற யாராவது வருவாங்க!" என்றான் அவள் கணவன்.
"என்னவோ போங்க! நல்லவங்களா இருந்தாங்க. ஆயிரம் ரூபாய் குறைக்கச் சொல்லிக் கேட்டதுக்கு, ஐநூறு ரூபாயாவது குறைச்சிருந்தா, அவங்க ஒத்துக்கிட்டிருப்பாங்க!"
"எதுக்குக் குறைக்கணும்?"
"சொல்லு அன்பு! எப்படி இருக்கே?" என்றான் அழகேசன், இயந்திரத்தனமாக.
"நான் நல்லாத்தான் இருக்கேன். நீ என் அத்தை பையன்னுதான் பேரு. ஆனா, நாம பாத்துக்கிட்டே பல மாசங்கள் ஆச்சு. நம் சொந்தக்காரங்க கல்யாணம், காது குத்தல் மாதிரி விழாக்கள்ள பாத்தாதான் உண்டு. உன் ஃபோன் நம்பர் கூட எங்கிட்ட இல்ல. முருகன்கிட்டதான் வாங்கினேன்" என்றான் தொலைபேசியின் மறுமுனையில் பேசிய அன்பு.
"ஆமாம் அன்பு. உன் ஃபோன் நம்பர் கூட எங்கிட்ட இல்ல."
"சரி. விஷயத்துக்கு வரேன். உனக்கு தொழில்ல ஏதோ பிரச்னை அதனால உன் வீட்டை வித்துட்டே, வாடகைக்கு வீடு பாத்துக்கிட்டிருக்கேன்னு கேள்விப்பட்டேன்."
"ஆமாம்..."
"நீ தப்பா நினைச்சுக்கலேன்னா, நான் ஒண்ணு சொல்லுவேன். என் வீடு ஒண்ணு காலியா இருக்கு. அதை நான் வாடகைக்கு விட வேண்டாம்னுதான் இருந்தேன். நீ இப்போதைக்கு அந்த வீட்டில இருந்துக்கலாம்."
"ரொம்ப நன்றி அன்பு. ஆனா...."
"எனக்குத் தெரியும் அழகேசா! நீ இப்போதைக்கு வாடகை எதுவும் கொடுக்க வேண்டாம். அஞ்சாறு மாசம் கழிச்சு உன் நிலைமை சரியானப்பறம், வாடகையைப் பத்திப் பேசலாம். இல்ல, அப்ப நீ வேற வீடு பாத்துக்கிட்டுப் போறதானாலும் சரிதான்!"
"அன்பு! எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. இது ஒரு பெரிய உதவி. நான் சீக்கிரமே ஏதாவது ஒரு வேலையில சேர்ந்துடுவேன். அப்புறம் உனக்கு மொத்த வாடகையையும் கொஞ்சம் கொஞ்சமாக் கொடுத்துடறேன்" என்றான் அழகேசன், தழுதழுத்த குரலில்.
"அதைப் பத்தி இப்ப என்ன? சும்மா போட்டு வச்சிருக்கிற வீட்டைத்தானே உனக்குக் கொடுக்கப் போறேன்! நீ இப்பவே என் வீட்டுக்கு வந்து சாவியை வாங்கிக்க!" என்று சொல்லித் தொலைபேசி அழைப்பை முடித்தான் அன்பு.
"ஏங்க, வீட்டை வாடகைக்குக் கேட்டவங்க, வாடகையில ஆயிரம் ரூபாய் குறைச்சுக்கச் சொல்லிக் கேட்டப்ப, முடியாதுன்னு சொல்லி அவங்களை அனுப்பிச்சுட்டீங்க. இப்ப, உங்க அத்தை பையனுக்கு வீட்டை சும்மாவே கொடுக்கறீங்க! வாடகைக்கு விடாம காலியா இருக்கிற வீடுன்னு வேற சொல்றீங்க!" என்றாள் சுமதி.
"அதான் நீயே சொல்லிட்டியே, என் அத்தை பையனுக்குக் கொடுக்கிறேன்னு! ஒத்தருக்கு ஏதாவது கஷ்டம் வந்தா, அவங்க சொந்தக்காரங்கதானே உதவி செய்யணும்? அவனுக்கு உதவி செய்யறதுக்காக நாம வாடகையை இழக்கிறோம்னு தெரிஞ்சா, அவன் இந்த உதவியை ஏத்துக்க மாட்டான்.அதனாலதான் வாடகைக்கு விடறதா இல்லேன்னு சொன்னேன்!" என்றான் அன்பு.
குறள் 521:
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள.
No comments:
Post a Comment