Saturday, October 16, 2021

525. பணக்கார உறவினர்கள்

கல்யாண மண்டப வாசலில் கார் வந்து நின்றதும், உள்ளிருந்து பலரும் ஓடி வந்து காரிலிருந்து இறங்கிய மூர்த்தியையும் அவர் மனைவி மீனாட்சியையும் மரியாதையுடன் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்று மண்டபத்தில் அமர வைத்தனர்.

"வாங்க டிஃபன் சாப்பிட்டுட்டு வந்துடலாம்" என்று பணிவுடன் அவர்கள் இருவரையும் சாப்பாட்டு அறைக்கு அழைத்துச் சென்றார் ஒருவர். 

யாரும் உட்காராத ஒரு வரிசையில் அவர்களை உட்கார வைத்து, பரிமாறுபவர்களை அழைத்து, "இங்கே டிஃபன் போடுங்க" என்றார்.

தனியாக உட்கார வைக்கப்பட்டிருப்பவர் முக்கியமானவர் என்று உணர்ந்தது போல் பரிமாறுபவர்கள் சிற்றுண்டி வாளிகளை எடுத்துக் கொண்டு விரைந்து வந்தனர்.

அவர்களை அழைத்து வந்தவர் அங்கேயே நின்று அவர்களுக்கு எல்லாம் முறையாகப் பரிமாறப்படச் செய்து கொண்டிருந்தார்.

"நீங்க போய் வேலையைப் பாருங்க. நாங்க சாப்பிட்டுக்கறோம்" என்று மூர்த்தி சொன்னபோதும், "பரவாயில்லை. இருக்கட்டும்" என்றார் அவர்.

இதற்குள் ஒவ்வொருவராக ஐந்தாறு பேர் சாப்பாட்டு அறைக்கு வந்து மூர்த்தியை விசாரித்து விட்டுப் போனார்கள்.

மணப்பெண்ணின் தந்தை வேலுவும் வந்தார்.

"வாப்பா மூர்த்தி! ரொம்ப சந்தோஷம்!" என்றார் வேலு.

"நீ பெண்ணோட அப்பா. நீ ஏன் கல்யாண வேலையை விட்டுட்டு இங்க வரே?" என்று மூர்த்தி கேட்டாலும், தனக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் பற்றி அவர் மகிழ்ச்சியடைந்தது அவர் முகத்தில் தெரிந்தது.

"இருக்கட்டும்!" என்றார் வேலு.

"சிவராமன் வந்துட்டானா?" என்றார் மூர்த்தி.

"வந்துட்டான். டிஃபன் சாப்பிட்டுட்டு மண்டபத்தில உக்காந்திருக்கான்" என்றார் வேலு.

"சரி, நீ போய் உன் வேலையைப் பாரு" என்று மூர்த்தி மீண்டும் சொன்னதும், "நீ வந்ததில ரொம்ப சந்தோஷம். முகூர்த்தம் முடிஞ்சதும் பாக்கறேன்" என்று சொல்லி விட்டு அகன்றார் வேலு.

அவர் சென்றதும், "ஏன் சிவராமன் வந்துட்டாரான்னு கேட்டீங்க?" என்றார் மீனாட்சி, மூர்த்திக்கு மட்டும் கேட்கும் குரலில்.

"உனக்குத் தெரியாதா என்ன? வேலுவோட சொந்தக்காரங்கள்ள நானும் சிவராமனும் மட்டும்தான் வசதியானவங்க. மத்தவங்கள்ளாம் சாதாரண நிலையிலதான் இருக்காங்க. ஆனா நாங்க ரெண்டு பேருமே எங்க சொந்தக்காரங்களை மதிச்சு அவங்க வீட்டு விசேஷங்களுக்குத் தவறாம ஆஜராயிடுவோம். அதனால சிவராமனும் வருவான்னு தெரியும். வந்துட்டானான்னு தெரிஞ்சுக்கத்தான் கேட்டேன்" என்றார் மூர்த்தி.

திருமண நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு வந்ததும்,"ஒரு விஷயம் கவனிச்சேன். உங்க சொந்தக்காரங்க எல்லாரும் உங்ககிட்ட ரொம்ப மரியாதையாத்தான் நடந்துக்கிட்டாங்க. ஆனா சிவராமன் கிட்டதான் அவங்க ரொம்ப நெருக்கமா இருக்கற மாதிரி தெரிஞ்சுது. இதை நீங்க கவனிச்சிருக்கீங்களா?" என்றாள் மீனாட்சி.

"ஆமாம். நான் கூட கவனிச்சிருக்கேன். என் சொந்தக்காரங்க வசதிக் குறைவானவங்களா இருந்தாலும், அவங்க வீட்டு நிகழ்ச்சிகளுக்கெல்லாம் தவறாம போறேன். அவங்களுக்கு உதவியா இருக்கட்டுமேன்னு, ஏதாவது ஒரு பொருளைப் பரிசாக் கொடுக்காம ஒரு கணிசமான தொகைக்கு கிஃப்ட் செக் கொடுப்பேன். நம் வீட்டு நிகழ்ச்சிகளுக்கும் எல்லாரையும் கூப்பிட்டு நல்லபடியா உபசரிச்சு அனுப்பறேன். 

"அதைத் தவிர யாராவது எங்கிட்ட ஏதாவது உதவி கேட்டா, இல்லேன்னு சொல்லாம செய்வேன். சிவராமனும் அப்படித்தான்னு நினைக்கறேன். ஆனாலும் சிவராமன் கிட்ட அவங்க கொஞ்சம் கூடுதலாவே நெருக்கமா இருக்கறதாத்தான் தோணுது. ஒரு தேர்தல்ல நாங்க ரெண்டு பேரும் போட்டி போட்டா என் சொந்தக்காரங்ள்ளாம் சிவராமனுக்குத்தான் ஓட்டுப் போடுவாங்கன்னு நினைக்கறேன்! ஆனா இந்தக் கூடுதல் நெருக்கத்துக்குக் காரணம் என்னன்னு எனக்குப் புரியல. ஒருவேளை சிவராமன் கிட்ட ஏதாவது கவர்ச்சி இருக்கோ என்னவோ!" என்றார் மூர்த்தி சிரித்துக் கொண்டே.

'அவரு எல்லார்கிட்டேயும் இனிமையாப் பேசறாரு. நீங்க எங்கிட்டயும், நம்ம புள்ளைகள்கிட்டேயுமே இனிமையாப் பேசறதில்லையே! சொந்தக்காரங்க கிட்ட எப்படிப் பேசுவீங்க? இது உங்களுக்குப் புரியப் போறதும் இல்லை!' என்று நினைத்துக் கொண்டாள் மீனாட்சி. 

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 53
 சுற்றந்தழால்

குறள் 525:
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்.

பொருள்:
ஒருவன் தன் சுற்றத்தார்க்கு வேண்டியதைக் கொடுத்தும், அவர்களிடம் இனிய சொற்களைச் சொல்லியும் வருவான் என்றால், பல்வகைச் சுற்றத்தாராலும் அவன் சூழப்படுவான்.
 அறத்துப்பால்                                                                              காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...