Friday, October 1, 2021

522. உறவுகள் வாழ்க!

ராஜு என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் வெள்ளிவிழா ஆண்டு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.

நிறுவனத்தின் மூத்த ஊழியர்கள், நிறுவனத்தின் நீண்டகால வாடிக்கையாளர்கள், இன்னும் நிறுவன வளர்ச்சிக்கு உதவிய பலர் ஆகியோருக்கு நிர்வாக இயக்குனர் ராஜு பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.

நிறுவனத்தைச் சிறிய அளவில் துவங்கி, தன் உழைப்பாலும் திறமையாலும் அதை ஒரு பெரிய நிறுவனமாக வளர்த்து நடத்திக் கொண்டிருக்கும் ராஜுவைப் பாராட்டிப் பலரும் பேசினர்.

கடைசியில் ராஜு பேசினார்.

"இந்த நிறுவனம் 25 வருடங்கள் வெற்றிகரமாகச் செயல்படவும், வளர்ச்சி பெறவும் உதவிய ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என்று சிலரை இந்த விழாவில் கௌரவிக்கும் வாய்ப்புக் கிடைத்தது பற்றி எனக்கு மகிழ்ச்சி. 

"ஆனால் இந்த நிறுவனத்தின் செயல்பாட்டுக்கும், வளர்ச்சிக்கும் பல விதங்களிலும் உதவிய வேறு பலரை என்னால் கௌரவிக்க முடியவில்லை. அவர்கள் இரண்டு வகை. ஒரு வகை வங்கி, அரசுத்துறைகள் போன்றவை. இவை சார்பாகத் தனி மனிதர்களை கௌரவிப்பது பொருத்தமாக இருக்காது. இரண்டாவது வகை என் உறவினர்கள்."

அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் சற்று வியப்புடன் அவனைப் பார்த்தனர். வெற்றி அடைந்த எல்லோருமே தங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைக் குறிப்பிட்டுப் பேசுவது இயல்புதான். ஆனால், இவர் உறவினர்கள் என்று யாரைச் சொல்கிறார் என்பதை அறிய ஆர்வமாக இருந்தனர்.

"உறவினர்கள் என்று நான் குறிப்பிடுவது என் குடும்ப உறுப்பினர்களை மட்டுமல்ல. என் வழியிலும், என் மனைவி வழியிலுமான பல சொந்தக்காரர்களையும்தான். 

"இந்த நிறுவனத்தைத் துவக்கியபோது நான் ஒரு பெரிய நிறுவனத்தில் நல்ல வேலையில் இருந்தேன். வாழ்க்கையில் செட்டில் ஆவது என்று சொல்வார்களே, அது போன்ற ஒரு நிலைமை. திருமணமாகி ஐந்து வயதில் ஒரு மகன் இருந்தான். சொந்த வீடோ, வேறு சொத்துக்களோ இல்லை. 

"அந்த நல்ல வேலையை விட்டு விட்டுக் கையில் இருந்த சேமிப்பை முதலீடாகப் போட்டு இந்த நிறுவனத்தைத் துவக்கினேன். என் மனைவி, அம்மா போன்றவர்களுக்கு என் முடிவில் உடன்பாடில்லை. கடுமையாக எதிர்த்தார்கள். இது இயல்புதான். 

"ஆனால், வேடிக்கை என்னவென்றால் என் முடிவு பற்றித் தெரிந்த பல உறவினர்களும் இதை எதிர்த்தனர். என் வீட்டுக்கு அதிகம் வராத சில உறவினர்கள் என் வீட்டுக்கு வந்து என் முடிவை மாற்றிக் கொள்ளும்படி எனக்கு ஆலோசனை கூறினார்கள்.

"இது போல் நல்ல வேலையை விட்டு விட்டுத் தொழில் துவங்கிய சிலர் ஒரு சில வருடங்களிலேயே நடுத்தெருவுக்கு வந்த கதைகளைச் சிலர் கூறினார்கள். அவர்கள் மீதெல்லாம் எனக்குக் கோபம்தான் வந்தது. எனக்கு யோசனை சொல்ல இவர்கள் யார் என்று நினைத்தேன்.

"நான் தொழில் தொடங்கிய ஒரு சில வருடங்களில் தொழிலில் பல நெருக்கடிகள் ஏற்பட்டன. தொழிலை மூடி விட்டு ஏதாவது ஒரு வேலைக்குப் போக வேண்டியதுதான் என்று கூட நினைத்தேன். ஆனால் என் மனைவியும் அம்மாவும் என்னை ஊக்கப்படுத்தினார்கள். 'தன்னம்பிக்கையோடதானே இதை ஆரம்பிச்சீங்க? தைரியமா தொடர்ந்து நடத்துங்க. உங்களால எல்லா பிரச்னைகளையும் சமாளிக்க முடியும்' என்றாள் என் மனைவி. 

"என் மனைவியும், அம்மாவும் என்னை ஊக்கப்படுத்தியதில் வியப்பில்லை. ஆனால் நான் தொழில் துவங்கியபோது வேண்டாம் என்று எனக்கு யோசனை கூறிய என் உறவினர்கள் கூட அந்த சந்தர்ப்பத்தில் எனக்கு தைரியம் கொடுத்தனர். 

"என் தொழிலில் பிரச்னைகள் இருப்பதாகக் கேள்விப்பட்டதும், 'நான் அப்பவே சொன்னேனே, கேட்டியா?' என்று சொல்லாமல், 'எல்லாம் சரியாயிடும்' என்று எனக்கு தைரியம் சொன்னார்கள். பிசினஸ்னா ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும்' என்று சிலர் தத்துவம் கூறி என்னை ஊக்கப்படுத்தினார்கள்!

"சொந்தத் தொழில் ஆரம்பித்து நடுத்தெருவுக்கு வந்தவர்களின் கதைகளை முன்பு கூறியவர்கள்,தொழிலில் பல சரிவுகளைச் சந்தித்து முன்னேறியவர்களின் கதைகளை இப்போது பகிர்ந்து கொண்டார்கள்! 

"முதலில் அவர்கள் எனக்கு ஆலோசனை கூறியபோது, எனக்கு ஆலோசனை சொல்ல இவர்கள் யார் என்று கோபமடைந்த எனக்கு, அவர்கள் என் மீது இருந்த அக்கறையினால்தான் இப்படிக் கூறினார்கள் என்பது அப்போதுதான் புரிந்தது. என் மீது அன்பும் அக்கறையும் கொண்டுள்ள அந்த உறவினர்களுக்கும் என் நன்றியை இப்போது தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க உறவுகள்!"

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 53
 சுற்றந்தழால்

குறள் 522:
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும்.

பொருள்:
அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால், அது மேன்மேலும் வளர்ச்சி குறையாத ஆக்கம் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும்.
 அறத்துப்பால்                                                                              காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...