பெருமாள் வீட்டுக்கு வந்தபோது, அவன் மனைவி சீதா அவன் வரவை எதிர்பார்த்து வாசலிலேயே அமர்ந்திருந்தாள்.
பெருமாளின் சோர்வான முகத்தைப் பார்த்ததுமே, அவளுக்கு விஷயம் தெரிந்து விட்டது.
'பெருமாளுக்கு இன்று வருமானம் எதுவும் கிடைக்கவில்லை.'
வீட்டுக்குள் வந்து சோர்வுடன் அமர்ந்த பெருமாளைப் பார்த்து, "காப்பி, டீ ஏதாவது குடிச்சீங்களா?" என்றாள் சீதா.
நாள் முழுவதும் பட்டினியாக இருந்து விட்டு, இரவு உணவுக்கும் வழியில்லை என்றபோதும். தன் மீது அக்கறை காட்டும் மனைவியைப் பார்த்ததும், பெருமாளுக்கு அழுகை வந்து விடும் போல் இருந்தது.
"கீதா தூங்கிட்டாளா?" என்ற பெருமாள், சீதா தலையை ஆட்டியதும், "பட்டினியாவே தூங்கிட்டாளா?" என்றாள்.
"அழகம்மை வீட்டுக்கு விளையாடப் போனப்ப, அழகம்மை அவளுக்கு ரெண்டு தோசை கொடுத்தாங்களாம்!" என்ற சீதா, "அவங்களுக்கு நம்ம நிலைமை தெரியுமே! நாம வாங்கிக்க மாட்டோம்னு தெரியும். இல்லேன்னா, நமக்கும் ஏதாவது சாப்பாடு கொடுத்தனுப்பி இருப்பாங்க!" என்றாள், பெருமூச்சுடன்.
சட்டென்று எழுந்த பெருமாள், "ஒரு பாத்திரம் இருந்தா கொடு" என்றான்.
இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து அவன் பெருமாள் கோவிலை அடைந்தபோது, அர்ச்சகர் சடகோபன் சன்னிதியை மூடும் தருவாயில் இருந்தார்.
பெருமாளைப் பார்த்ததும், "அட! பெருமாளே கோவிலுக்கு வந்துட்டாரே!" என்றார் சடகோபன், தன் சிலேடையைத் தானே ரசித்தபடி.
"எங்கே சடகோபா! நான் தினமும் வீட்டுக்க வரப்ப, ராத்திரி ஒன்பது மணி ஆயிடும். எங்கே கோவிலுக்கு வரது, அதுவும் ரெண்டு கிலோமீட்டர் நடந்து!" என்றான் பெருமாள்.
பெருமாளும், சடகோபனும் அந்த ஊர் ஆரம்பப் பள்ளியில் இணைந்து படித்தவர்கள். அதற்கு மேல் படிக்காமல், இருவருமே அதே ஊரில் நிலைபெற்று விட்டார்கள்.
"உன் தொழில் எப்படிப் போய்க்கிட்டிருக்கு?" என்றார் சடகோபன்.
"தரகுத் தொழில் அன்றாடங்காய்ச்சித் தொழில்தானே! ஒருநாள் வருமனம் வந்தா, நாலு நாள் எதுவும் வராது. இன்னிக்குக் கூட நிலைமை மோசம்தான். உனக்கு தட்டுல காசு விழுந்துக்கிட்டிருக்கா?"
"எங்கே? பெரும்பாலான சமயங்கள்ள, கோவில்ல நானும் பெருமாளும் மட்டும்தான் இருக்கோம். அதுவும், இந்தக் கோவில் ஊரை விட்டுத் தள்ளி இருக்கா? இங்கே யாருமே வரதில்ல. சரி. பெருமாளை சேவிச்சுக்கோ!" என்றபடி கருவறைக்குள் சென்று பெருமாளுக்குக் கற்பூர ஆரத்தி காட்டினார் சடகோபன்.
பெருமாள் தான் கேட்க வந்ததைக் கேட்காமல் கிளம்ப யத்தனித்தபோது, "இன்னிக்குக் கூட பாரு. யாரோ ஒரு மகானுபாவன் கோவில்ல மண்டகப்படி பண்ணினாரு. ஆனா மழை பெஞ்சதால, கோவில்ல கூட்டமே இல்லை. அவரும் பிரசாதத்தை வாங்கிக்காம, 'என் வீட்டில யாரும் இல்ல. கோவிலுக்கு வரவங்களுக்குக் கொடுத்துடுங்க'ன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு. வேற யாரும் கோவிலுக்கு வராததால, பிரசாதம் அப்படியே இருக்கு. என் வீட்டில நாங்க ரெண்டு பேருதான். என்ன பண்றதுன்னு யோசிச்சுக்கிட்டிருந்தேன். நல்ல வேளையா நீ வந்தே! அது என்ன பாத்திரம்? கடையில எண்ணெய் ஏதாவது வாங்கவா? அதைக் கொடு. அதில பிரசாதத்தைப் போட்டுக் கொடுக்கறேன்" என்று சொல்லி, அவன் கையிலிருந்த பாத்திரத்தை வாங்கி அதை உள்ளே எடுத்துப் போய், அதில் பாதிக்கு மேல் பொங்கல் பிரசாதத்தை நிரப்பி எடுத்துக் கொண்டு வந்து பெருமாளிடம் கொடுத்தார் சடகோபன்.
பெருமாளுக்குத் தொண்டை அடைத்தது - மகிழ்ச்சியினாலா, நன்றி உணர்வினாலா என்று தெரியவில்லை.
முதலில் இயந்திரத்தனமாகப் பெருமாளை வணங்கியவன், இப்போது உணர்ச்சி பொங்க மீண்டும் வணங்கினான்.
"வரேன், சடகோபா!" என்று கிளம்பினான் பெருமாள்.
"நேரம் கிடைக்கறப்ப வா! எனக்குப் பேச்சுத் துணையாகவாவது இருக்கும்!" என்றார் சடகோபன்.
கணவனிடமிருந்து பாத்திரத்தை வாங்கிப் பார்த்த சீதா, "நிறையவே கொடுத்திருக்காரு" என்றாள்.
"ஆமாம். நம்ம ரெண்டு பேருக்குப் போதும், கீதா முழிச்சுக்கிட்டிருந்தா, அவளுக்கும் கொஞ்சம் கொடுக்கலாம்" என்றான் பெருமாள்.
"அவதான் தூங்கிட்டாளே! அவளை எழுப்ப வேண்டாம். தோசை சாப்பிட்டதில அவளுக்கு வயிறு நிறைஞ்சிருக்கும்" என்ற சீதா, பாத்திரத்திலிருந்து பாதியளவு பொங்கலை எடுத்து இன்னொரு பாத்திரத்தில் போட்டாள்.
"எதுக்கு இது? நாளைக்குக் கொஞ்சம் எடுத்து வைக்கறியா?" என்றான் பெருமாள் புரியாமல்.
"நம்ம வீட்டில ஃபிரிட்ஜா இருக்கு?" என்ற சீதா, "சாயந்திரம் உங்க அக்கா வந்திருந்தாங்க. அவங்க வீட்டிலேயும் எதுவும் இல்லையாம். கொஞ்சம் அரிசி இருக்குமான்னு கேட்டுக்கிட்டு வந்தாங்க. நம்ம வீட்டிலதான் அரிசிப்பானை காலியாச்சே! அதனால, அவங்களுக்கு எதுவும் கொடுத்து உதவ முடியலை. அவங்களும் பட்டினியாத்தான் இருப்பாங்க. அதனால அவங்களுக்குக் கொஞ்சம் கொடுத்துட்டு வரேன். நீங்க சாப்பிடுங்க. பக்கத்துத் தெருதானே? இதோ வந்துடுவேன்" என்றபடியே, பாத்திரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு கிளம்பினாள் சீதா.
குறள் 527:
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள.
No comments:
Post a Comment