"ஃபிளைட்டுக்கு இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு?" என்றார் அருள்மொழி.
"இன்னும் ஒரு மணி நேரத்தில கிளம்பினா சரியா இருக்கும்" என்றார் அவருடைய தனிச் செயலர் முத்தையா.
"அப்படின்னா உடனே கிளம்பிடலாம்! அங்கே போயிட்டுப் போகணும் இல்ல?" என்றார் அருள்மொழி,
"சார்! அவங்க வீடு ஏர்போர்ட்டுக்கு எதிர்ப் பக்கம், அங்கே போயிட்டு ஏர்போர்ட் போக லேட் ஆயிடும்!" என்றார் முத்தையா.
"அதான் ஒரு மணி நேரம் இருக்கே! போக இருபது நிமிஷம், வர இருபது நிமிஷம். அங்கே பத்து நிமிஷம் இருந்தாப் போதும்."
காரை அருகிலிருந்த தெருவில் நிறுத்தி விட்டு, அந்தச் சிறிய தெருவில் இருந்த அந்த வீட்டுக்கு இருவரும் நடந்து சென்றார்கள்.
அழைப்பு மணி அடித்ததும், கதவைத் திறந்த அந்தப் பெரியவர், "அட அருள்! வா! எப்ப வந்த கோயம்புத்தூருக்கு?" என்று அருள்மொழியை வரவேற்று விட்டு, முத்தையாவைப் பார்த்து, "எப்படி இருக்கீங்க முத்தையா!" என்றார்.
"நல்லா இருக்கேன் சார்!" என்று சொல்லும்போதே முத்தையாவின் கண்கள் அனிச்சையாகக் கைக்கடிகாரத்தைப் பார்த்தன.
"எப்ப வந்தேனா? திரும்பிப் போய்க்கிட்டிருக்கேன். அஞ்சு நிமிஷம்தான் இருக்க முடியும். காப்பி, டீ எதுவும் வேண்டாம். ஃபிளைட்டுக்கு நேரம் ஆச்சு. அடிச்சு புடிச்சுகிட்டு வந்திருக்கேன் - உங்க எல்லாரையும் பாத்துட்டுப் போகணும்னுதான்!" என்றபடியே உள்ளே நுழைந்த அருள்மொழி, முத்தையாவைப் பார்த்து, "சரியா அஞ்சு நிமிஷம்தான்!" என்றார்.
அருள்மொழி ஐந்து நிமிடம் அவர்களிடம் உரையாடி விட்டு, வெளியே வந்து, பரபரப்புடன் இருந்த முத்தையாவுடன் விரைவாக நடந்து வந்து காரில் ஏறிக் கொண்டார்.
காரில் ஏறி அமர்ந்ததும் கைக்கடிகாரத்தைப் பார்த்த அருள்மொழி, "போயிடலாம் இல்ல?" என்றார் முத்தையாவிடம்.
அரை நம்பிக்கையுடன் தலையாட்டிய முத்தையா, "சார்! எந்த ஊருக்குப் போனாலும் அங்கே இருக்கற உங்க சொந்தக்காரங்க வீட்டுக்குப் போய்ட்டுத்தான் வருவீங்க. ஆனா, இன்னிக்கு நேரம் ரொம்ப டைட்டா இருந்தது. அதான் கிளம்பும்போதே சொன்னேன்!" என்றார், தயக்கத்துடன்.
"எங்க குடும்பத்தில நான் ஒரு தொழிலதிபரா ஆகி வசதியா இருக்கேன். என் சொந்தக்காரங்க எல்லாரும் சாதாரண நிலைமையிலதான் இருக்காங்க. ஆனாலும், அவங்க எல்லாரோடயும் எப்பவுமே நெருக்கமா இருக்கணும்னு நான் நினைக்கிறேன். அவங்க என்னோட பழகத் தயங்கலாம். அந்தத் தயக்கத்தைப் போக்கத்தான், நான் அவங்க வீட்டுக்கெல்லாம் அடிக்கடி போய், எங்க உறவை வலுவா வச்சுக்கிட்டிருக்கேன்!" என்றார் அருள்மொழி.
குறள் 524:
சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்.
No comments:
Post a Comment