Saturday, October 16, 2021

526. பிரபுவின் கோபம்!

"பிரபு அவர் பெயருக்கு ஏற்றபடி ஒரு தர்மப் பிரபுதான். எல்லாருக்கும் நிறைய உதவி செய்வாரு - குறிப்பா அவர் சொந்தக்காரங்களுக்கு. அதனாலதான் அவர் சொந்தக்காரங்க எல்லாம் அவரைத் தங்கள் குடும்ப உறுப்பினர் ஒருத்தராகவே நினைக்கிறாங்க."

"ஆமாம். நானும் பாத்திருக்கேன்.அவர் வீட்டுக்கு சொந்தக்காரங்க அடிக்கடி வரதும், இவர் அவங்க வீட்டுக்குப் போறதும்...ம்... பணம் இருந்தா எல்லாரும் கால்ல வந்து விழத்தான் விழுவாங்க!"

"சேச்சே! அப்படி இல்ல. பணக்காரங்களுக்குப் பொதுவா கிடைக்கிற மரியாதை வேற. எனக்குக் கூடப் பணக்கார சொந்தங்கள் இருக்காங்க. அவங்களை எப்பவாவது பாத்தா சிரிச்சுட்டு 'எப்படி இருக்கீங்க?'ன்னு ஒப்புக்குக் கேப்பேன். ஆனா அவங்க மேல அன்போ மதிப்போ வராது."

"நீ சொல்றது சரிதான். பிரபு எல்லோருக்கும் உதவி செய்யறார்ங்கறதை நான் ஒத்துக்கறேன். ஆனா அவர் ரொம்ப கோபக்காரர்னு கேள்விப்படிருக்கேன். அவர் சொந்தக்காரங்க அவர் கோபத்தை சகிச்சுக்கிட்டிருக்காங்கன்னா, அதுக்குக் காரணம் அவர்கிட்ட இருக்கற பணம்தானே?"

"நீ சொல்றது சரியில்ல. ஒத்தரை சகிச்சுக்கிட்டு இருக்கறது வேற, ஒத்தர்கிட்ட அன்பா இருக்கறது வேற. ஆஃபீஸ்ல நம் மேலதிகாரி எப்படி இருந்தாலும் நாம அவரை சகிச்சுக்கிட்டுத்தான் இருக்கணும். ஆனா அவர் தன் அதிகாரத்தைக் காட்டாம நம்மை மதிச்சு நடந்துக்கிட்டா நமக்கு அவர்கிட்ட அன்பும் மதிப்பும் உண்டாகும் இல்ல? பிரபுவோட சொந்தக்காரங்க அவர்கிட்ட வச்சுருக்கறது அப்படிப்பட்ட அன்புதான்."

"நீ சொன்ன உதாரணத்துக்கே வரேன். நம்ம மேலதிகாரி கோபக்காரரா இருந்தா அவர் மேல நமக்கு அன்போ மதிப்போ இருக்குமா? வேற வழியில்லாமதானே அவரை சகிச்சுக்கிட்டு இருப்போம்? பிரபுவோட சொந்தக்காங்க அவரை சகிச்சுக்கிட்டிருக்கறதும் அப்படித்தான்னு நினைக்கறேன்."

"பிரபு கோபக்காரர்னு எப்படி சொல்ற? நான் பார்த்த வரையில அவர் எல்லார்கிட்டேயும் சிரிச்சுப் பேசிக்கிட்டுத்தானே இருக்காரு?"

"நான் கேள்விப்பட்ட ஒரு விஷயத்தைச் சொல்றேன். ஒரு தடவை ஒரு அரசு அலுவலகத்தில அவருக்கு ஏதோ ஒரு அப்ருவல் கிடைக்கறதில தாமதமாச்சுங்கறதுக்காக அந்த அலுவலகத்துக்குப் போய் எல்லார் முன்னாலேயும் ஒரு அரசு அதிகாரியைக் கோபமாக் கத்தி இருக்காரு. அவர் போட்ட கூச்சல்ல அலுவலகத்தில இருந்த எல்லாரும் அங்கே வந்துட்டாங்களாம். அதுவலகத்துக்கு வேலையா வந்திருந்த பொதுமக்களும் கூடிட்டாங்களாம். அவர் போட்ட கூச்சலுக்கு பயந்தே அந்த அதிகாரி அந்த அப்ரூவலை உடனே கொடுக்கறதா சொல்லி அவரைச் சமாதானப்படுத்தி அனுப்பிட்டு, சொன்னபடியே ரெண்டு மூணு நாள்ள அப்ருவல் கொடுத்துட்டாராம். அவர் கோபம் அவ்வளவு புகழ் பெற்றது!"

"நீ சொல்ற சம்பவத்தைப் பத்தி நானும் கேள்விப்பட்டிருக்கேன். ஆனா அதோட முழு உண்மை உனக்குத் தெரியல. அந்த அப்ரூவலைக் கொடுக்க அந்த அதிகாரி லஞ்சம் கேட்டிருக்காரு. அதுக்காகத்தான் பிரபு கோபப்பட்டு கத்தி இருக்காரு. சொல்லப்போனா அந்த அதிகாரி லஞ்சம் கேட்டதை எல்லாருக்கும் வெளிப்படுத்தி அவரை முறையா நடக்க வைக்கத்தான் அவர் அப்படி ஒரு சீனை உருவாக்கினார்னு கூட சில பேர் சொன்னாங்க. அதனால பிரபு கோபக்காரர் இல்ல. தாராளமா உதவி செய்யறவராகவும், கோபம் இல்லாதவரா எல்லார்கிட்டேயும் அன்பானவராகவும் இருக்கறதாலதான் அவரோட உறவுக்காரர்கள் அவர்கிட்ட அன்பா இருக்காங்களே தவிர அவரோட பணத்துக்காக இல்ல!" 

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 53
 சுற்றந்தழால்

குறள் 526:
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல்.

பொருள்:
பெரிய கொடையாளியாகவும் சினமற்றவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றத்தாரை உடையவர் உலகத்தில் யாரும் இல்லை..
 அறத்துப்பால்                                                                              காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...