Sunday, October 3, 2021

523. காப்பி குடிக்கலாமா?

"காப்பி குடிக்கிறீங்களா?" என்றாள் மாலா.

"கொஞ்ச நேரம் முன்னாலதானே குடிச்சேன்?" என்ற நாதன், "ஆமாம். முன்னே எல்லாம் நான் காப்பி கேட்டா, 'எத்தனை தடவை காப்பி போடறது உங்களுக்கு?' ன்னு அலுத்துப்ப. இப்ப நீயே காப்பி வேணுமான்னு கேக்கற!" என்றான்.

"முன்னெல்லாம் வீட்டில குழந்தைங்க இருப்பாங்க. நிறைய வேலை இருக்கும். அதனால அலுப்பா இருக்கும்" என்றாள் மாலா. 

நாதன் மௌனமாக இருந்தான். சற்று நேரம் கழித்து, "ஏதாவது சினிமாவுக்குப் போகலாமா?" என்றான்.

"போன வாரம்தானே போயிட்டு வந்தோம்? இப்பதான் டிவியிலேயே நிறைய சினிமா வருதே! தியேட்டருக்குப் போய்ப் பாக்கணுங்கற ஆசையே எனக்கு இல்லை. உங்களுக்குப் போகணும்னா சொல்லுங்க. போயிட்டு வரலாம்."

"இல்லை. எனக்கு ஆர்வம் இல்லை. உனக்காகத்தான் கேட்டேன்!"

சில நிமிடங்களுக்குப் பிறகு, மாலா கையில் காப்பியுடன் வந்தாள். "இந்தாங்க காப்பி!"

"அதான் வேணாம்னுசொன்னேனே! உனக்குக் குடிக்கணும் போல இருந்ததா?" என்றான் நாதன், காப்பியை வாங்கிக் கொண்டே.

"இல்ல. சும்மா உக்காந்துக்கிட்டிருக்கறது அலுப்பா இருந்தது. அதுதான் புதுசா டிகாக்‌ஷன் போட்டு காப்பி போட்டேன்."

"வேலை செய்யறதுதான் அலுப்பா இருக்கும். நீ என்னடான்னா அலுப்பா இருந்ததுங்கறதுக்காக வேலை செஞ்சேன்னு சொல்றே!" என்றான் நாதன் சிரித்தபடி.

"என்ன செய்யறது? சில சமயம் மனசில அலுப்போட உக்காந்திருக்கறதை விட உடல் அலுப்பே தேவலைன்னு தோணுது!"

நாதனின் முகத்தில் சிரிப்பு மறைந்து ஒரு இறுக்கம் வந்து ஒட்டிக் கொண்டது.

"என்ன செய்யறது! பொண்ணு அமெரிக்கா, பையன் ஆஸ்திரேலியான்னு ஆளுக்கொரு மூலையில போய் உக்காந்துக்கிட்டாங்க. அவங்களுக்கு நேரம் இருக்கும்போது ஃபோன் பண்ணுவாங்க. அப்ப கொஞ்ச நேரம் அவங்களோட பேசி சந்தோஷப்பட்டுக்கறோம். மத்த நேரத்தில எல்லாம் மோட்டுவளையைப் பாத்துக்கிட்டு உக்காந்திருக்கோம். அதனால மனசு அலுத்துப் போகுது" என்றான் நாதன்.

"இப்படி இருக்க வேண்டியதில்லையே! எனக்கு சொந்தம்னு யாரும் கிடையாது. உங்களுக்கு நிறைய சொந்தக்காரங்க இருக்காங்க. ஆனா நீங்க அவங்க யாரையும் நெருங்க விடல. அதனால எல்லோரோடயும் உறவு விட்டுப் போச்சு. நெருக்கம் இருந்திருந்தா, அவங்க நம்ம வீட்டுக்கு வரது. நாம அவங்க வீட்டுக்குப் போறது, ஃபோன்ல பேசறதுன்னு நம் வாழ்க்கையில கொஞ்சம் சுவாரசியம் இருந்திருக்கும்" என்றாள் மாலா குற்றம் சாட்டும் குரலில்.

"என் சொந்தக்காரங்கள்ளாம் நம் அளவுக்கு வசதியானவங்க இல்ல. அதனால அவங்ககிட்ட நெருக்கமா இருந்தா நம்மை உதவி கேட்டுத் தொந்தரவு பண்ணுவாங்கன்னு நினைச்சு எல்லார்கிட்டேயிருந்தும் ஒதுங்கி இருந்தேன். இப்ப நம்ம வாழ்க்கை வெறுமையா இருக்கறப்பதான் சொந்தக்காரங்களோட நெருக்கமா இருந்திருந்தா நல்லா இருந்திருக்குமேன்னு தோணுது. இப்ப நான் யார்கிட்டயாவது போய்ப் பேசினா அவங்க ஆர்வம் காட்ட மாட்டேங்கறாங்க!" என்றான் நாதன் வருத்தத்துடன்.

"அடுத்த வாரம் உங்க சித்தப்பா பெண்ணோட பையனுக்குக் கல்யாணம்னு பத்திரிகை அனுப்பி இருக்காங்க. வெளியூர்னாலும் அதுக்குப் போயிட்டு வரலாம். அங்கே சில சொந்தக்காரங்களோட நெருக்கமா ஆகிற வாய்ப்பு கிடைக்கலாம்!" என்றாள் மாலா.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 53
 சுற்றந்தழால்

குறள் 523:
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.

பொருள்:
சுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய வாழ்க்கை ஒரு குளப்பரப்பு கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போன்றது.
 அறத்துப்பால்                                                                              காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...