"சார்! போன வருஷம் நம்ம வியாபாரம் குறைஞ்சு, லாபமும் குறைஞ்சுடுச்சு."
"ஆமாம்."
"இந்த வருஷமும்..."
"ஆமாம். இந்த வருஷம் வியாபாரம் இன்னும் கீழே போய்க்கிட்டிருக்கு அக்கவுன்ட்ஸ் பாக்கறது நீங்கதான்னாலும், நிலவரம் எனக்குத் தெரியுமே!" என்றார் புருஷோத்தமன், சற்று எரிச்சலுடன்.
அந்தச் சிறிய நிறுவனத்தின் முதலாளி புருஷோத்தமன். கண்ணன் அக்கவுன்டன்ட்
"அதில்ல சார்! உங்க நல்ல மனசுக்கு நீங்க தர்ம காரியங்களுக்கு நிறையக் கொடுத்துக்கிட்டு வரீங்க. நல்ல விஷயம்தான். ஆனா இப்ப நிலைமை சரியா இல்லாதப்ப, அதையெல்லாம் கொஞ்சம் குறைச்சுக்கலாம் இல்லையா?" என்றார் கண்ணன், சற்றுத் தயக்கத்துடன்.
"கண்ணன்! வாடகை, மின் கட்டணம் மாதிரி எந்தச் செலவையும் நம்மால குறைக்க முடியாது. நம்மகிட்ட வேலை செய்யறவங்களுக்குக் கொடுக்கற சம்பளத்தையும் நம்மால குறைக்க முடியாது. தர்ம காரியங்களுக்குக் கொடுக்கறதை மட்டும் குறைக்கணுமா?"
"சார்! நான் சொல்றதைத் தப்பா எடுத்துக்காதீங்க. அக்கவுன்டன்டங்கற முறையில இதைச் சொல்ல வேண்டியது என் கடமை. நீங்க சொன்ன மாதிரி, நம்மால செலவுகளைக் குறைக்க முடியாதுதான். ஆனா, தர்ம காரியங்களுக்குக் கொடுக்கறதை நம்மால கட்டுப்படுத்த முடியுமே! இது மாதிரி விஷயங்களுக்கு நீங்க ரொம்ப தாராளமாக் கொடுத்துக்கிட்டு வரீங்க. வருமானம் அதிகமா இருந்தப்ப, அதைச் செய்ய முடிஞ்சது. இப்ப வருமானம் குறைஞ்சப்பறம், அதைக் கொஞ்சம் குறைச்சுக்கலாமே! இப்பல்லாம், அப்பப்ப பண நெருக்கடி வருது. நம்ம சப்ளையர்களுக்குப் பணம் கொடுக்க தாமதமாகுது. அவங்கள்ளாம், 'என்னங்க, ரொம்ப தாமதப்படுத்தறீங்களே'ன்னு எங்கிட்ட ஃபோன்ல வருத்தப்படறாங்க."
கண்ணன் பேச்சை நிறுத்தி விட்டு, புருஷோத்தமனின் முகத்தைப் பார்த்தார்.
ஒரு நிமிடம் யோசனை செய்த புருஷோத்தமன், "சரி. ஏற்கெனவே தொடர்ந்து உதவி செய்யறதா சொன்னவங்களுக்கு மட்டும் உதவி செய்வோம். புதுசா யாருக்கும் செய்யல. சரியா?" என்றார், சிரித்தபடி.
ஏதோ இந்த மட்டுமாவது ஒப்புக் கொண்டாரே என்று நிம்மதி அடைந்தார் கண்ணன்.
ஆயினும், புருஷோத்தமன் புதிதாகச் சில நபர்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் அவ்வபோது உதவித்தொகையாகக் காசோலைகள் கொடுத்து வந்தார்.
காசோலை கொடுத்த பிறகு, அந்த விவரங்களை செக் புத்தகத்தின் கவுன்ட்டர்ஃபாயிலில் எழுதிக் கண்ணனுக்கு அனுப்புவார். அந்தக் காசோலைகளுக்கான பணத்தை ஏற்பாடு செய்வது கண்ணனுக்குச் சவாலாக இருந்து வந்தது.
"சார்! ஒரு தப்பு நடந்து போச்சு" என்றார் கண்ணன்.
"என்ன ஆச்சு?" என்றார் புருஷோத்தமன், பதட்டத்துடன்.
"நம்ம பாங்க் அக்கவுன்ட் கொஞ்ச நாளாவே ரொம்ப டைட்டா இருந்துக்கிட்டிருக்கு. பல சமயம் நான் பாங்க் மானேஜர் கிட்ட கெஞ்சிக் கூத்தாடித்தான் சில செக்கை பாஸ் பண்ணச் சொல்ல வேண்டி இருக்கு. நேத்து நம்ம முக்கியமான சப்ளையர் ஒத்தருக்கு நாம கொடுத்த செக்கை பாங்க்ல திருப்பி அனுப்பிட்டாங்க. பொதுவா, இது மாதிரி சந்தர்ப்பங்கள்ள, எனக்கு ஃபோன் பண்ணுவாங்க. நான் ரொம்பக் கெஞ்சிக் கேட்டுக்கிட்டப்பறம், 'என்ன சார், எப்பவும் இப்படியே பண்றீங்க?'ன்னு சலிச்சுக்கிட்டே செக்கை பாஸ் பண்ணுவாங்க. ஆனா இப்படி அடிக்கடி நடக்கறதால, இந்த முறை எங்கிட்ட சொல்லாமயே செக்கைத் திருப்பி அனுப்பி இருக்காங்க. சப்ளையர்கிட்டேந்து இன்னிக்கு எனக்கு ஃபோன் வந்தப்பறம்தான் எனக்கே தெரியும். இவ்வளவு வருஷமா இப்படி நடந்ததே இல்லையேன்னு அவரு எங்கிட்ட ரொம்ப வருத்தப்பட்டாரு. ஏதோ தவறுதலா நடந்துடுச்சு, இனிமே இப்படி நடக்காதுன்னு அவர் கிட்ட நான் உறுதியாச் சொல்லி அவரை சமாதானப்படுத்தினேன்."
"ஓ! பெரிய தப்பாச்சே இது! இனிமே இப்படி நடக்கக் கூடாது" என்று சொல்லி, ஒரு நிமிடம் யோசித்த புருஷோத்தமன், தன் மேஜை இழுப்பறையைத் திறந்து, அதிலிருந்த செக் புத்தகத்தை எடுத்துக் கண்ணனிடம் கொடுத்தார்.
"இந்தாங்க! செக் புக் உங்ககிட்டயே இருக்கட்டும். யாருக்காவது செக் கொடுக்கணும்னா, உங்ககிட்ட சொல்றேன். நீங்க செக் எழுதிக் கொடுங்க. அப்புறம் நான் கையெழுத்துப் போடறேன். பொருளாதார நிலைமையைப் பாத்து, செக் கொடுக்க முடியாதுன்னா, தயங்காம சொல்லிடுங்க. அதை நான் ஏத்துக்கறேன்" என்றார் புருஷோத்தமன்.
இந்த முறையை முதலாளி சரியாகப் பின்பற்றுவார் என்று கண்ணன் நம்பினார். அவரால் வேறு என்ன செய்ய முடியும்?
அரசியல் இயல்