"வேலையில இருந்தப்ப இருந்ததை விட, ரிடயர் ஆனப்பறம் ரொம்ப பிஸி ஆயிட்ட போலருக்கே!" என்றார் சுந்தரேசன்.
"ஆமாம். எனக்குப் பிடிச்ச வேலைகளை செய்யறதால, அலுப்போ, சலிப்போ வரதில்ல" என்றார் ராஜு.
"என்ன வேலையெல்லாம் செய்யற?"
"வேலைன்னு சொல்லக் கூடாது. எனக்குத் தோட்ட வேலை செய்யறது பிடிக்கும். அதனாலதான் ஊருக்கு வெளியில தோட்டதோட இருக்கற இந்த வீட்டை வாங்கினேன். அதில எனக்குப் பிடிச்ச செடிகளை வச்சுப் பராமரிக்கறேன். தோட்டம் சின்னதுதான். அதனால வீட்டு மொட்டை மாடியிலேயும் தோட்டம் போட்டிருக்கேன். அப்புறம் சமூக சேவை செய்யறதில எனக்கு ஈடுபாடு உண்டு. அதனால ஒரு முதியோர் இல்லத்துக்கு அப்பப்ப போய் என்னால முடிஞ்சதை செஞ்சுட்டு வருவேன்."
"என்ன மாதிரி உதவிகள்?"
"கணக்கு எழுதறது, கடைக்குப் போய் பொருட்கள் வாங்கிட்டு வரது, அங்கே தங்கி இருக்கறவங்கள்ள முடியாதவங்க சில பேரை கையைப் பிடிச்சு வாக்கிங் அழைச்சுக்கிட்டுப் போறது, அவங்களுக்குத் தேவையான வேற சில உதவிகள் செய்யறது இது மாதிரி பல வேலைகள்."
"அடேயப்பா! எனக்கும் உனக்கும் ஒரே வயசுதான். ஆனா என்னால இப்படியெல்லாம் உடம்பை வருத்திக்கிட்டு இயங்க முடியாதுப்பா" என்றார் சுந்தரேசன்.
"மனசுக்குப் பிடிச்ச வேலைகளை செய்யம்போது, மனசில சந்தோஷமும், திருப்தியும் இருக்கும். அதனால உடம்பில களைப்பு தெரியாது" என்றார் ராஜு.
சுந்தரேசன் கிளம்பிச் சென்றதும், ராஜுவின் மனைவி உமா, அவரிடம், "நான் உங்ககிட்ட அடிக்கடி சொல்லிக்கிட்டிருக்கறதைத்தான் உங்க நண்பரும் சொல்றாரு. வேலை பாக்கறப்பல்லாம், ஞாயிற்றுக்கிழமை வந்தா, சாப்பிட்டுட்டுப் படுத்துடுவீங்க. சாயந்திர நேரத்தில. என்னையும், குழந்தைகளையும் வெளியில அழைச்சுக்கிட்டுப் போகணும்னா கூட உங்களுக்கு அலுப்பாவும், களைப்பாவும் இருக்கும். இப்ப என்னன்னா, ஒரு பண்டிகை நாள் அன்னைக்குக் கூட ஓய்வு எடுத்துக்காம, சேவை செய்யறேன்னு எங்கேயோ போயிடறீங்க. வீட்டில இருக்கற நேரத்திலேயும், வெய்யிலைக் கூடப் பொருட்படுத்தாம, தோட்டத்தில எதையாவது கொத்திக்கிட்டோ, தண்ணி ஊத்திக்கிட்டோ இருக்கீங்க. உடம்பு என்னத்துக்கு ஆகும்?" என்றாள்.
"சுந்தரேசனுக்குச் சொன்ன பதில்தான் உனக்கும். நமக்குப் பிடிக்கிறதை செய்யறப்ப, களைப்போ, சோர்வோ எப்படி வரும்?" என்றார் ராஜு, சிரித்துக் கொண்டே.
"என்னவோ போங்க!" என்றாள் உமா, சலிப்புடன்.
சில நாட்களுக்குப் பிறகு, ராஜு சேவை செய்து வந்த நிறுவனத்திலிருந்து உமாவுக்கு ஃபோன் வந்தது. ராஜு திடீரென்று தனக்கு மார்பு வலிப்பதாகக் கூறியதால் அவரை அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருப்பதாகக் கூறினார்கள்.
உமா அந்த மருத்துவமனைக்கு விரைந்தாள்.
ராஜு படுக்கையில் சோர்வுடன் படுத்திருந்தான். அவன் மணிக்கட்டின் பின்புறத்தில் ஊசி செருகப்பட்டு, மேலே தொங்க விடப்பட்டிருந்த பாட்டிலிலிருந்து அவன் உடலில் மருந்து ஏறிக் கொண்டிருந்தது.
"ஹார்ட் அட்டாக் வந்திருக்கும்மா! கவலைப்படாதீங்க. மைல்ட்தான்! ரெண்டு நாள் ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டி இருக்கும். ஆனா, அதுக்கப்பறம் கம்ப்ளீட் ரெஸ்ட்ல இருக்கணும். பாத்துக்கங்க" என்றார் டாக்டர், உமாவிடம்.
உமா கவலையுடனும், 'ரொம்ப ஸ்டிரெயின் பண்ணிக்காதீங்கன்னு படிச்சுப் படிச்சு சொன்னேனே, கேட்டீங்களா?' என்று கோபமாக வினவும் முகபாவத்துடனும், கட்டிலில் படுத்திருந்த கணவனைப் பார்த்தாள்.
'நீ எவ்வளவோ சொல்லியும் கேக்காதது என் தப்புதான்' என்ற சங்கடத்துடனும், குற்ற உணர்வுடனும், மனைவியின் பார்வையைத் தாங்க முடியாதவன் போல் பார்வையைச் சற்றே வேறொரு புறம் திருப்பிக் கொண்டான் ராஜு.
அரசியல் இயல்
No comments:
Post a Comment