"இத்தனை வருஷமா இந்த பிசினஸ் பண்ணிக்கிட்டிருக்கோம். இவ்வளவு பெரிய கான்டிராக்ட் நமக்குக் கிடைச்சதில்ல!" என்றார் செல்வகுமார், பெருமிதத்துடன்.
"செல்வா! நம்மால இதை எடுத்துச் செய்ய முடியுமா?" என்றார் அவருடைய பார்ட்னர் பாலசந்திரன்.
"இதில என்ன இருக்கு பாலா? வீடு கட்டறது, பாலம் கட்டறது எல்லாம் ஒரே மாதிரி சிவில் ஒர்க்தானே! அதே இரும்பு, செங்கல், கருங்கல், மணல், சிமென்ட் சமாசாரம்தானே!"
"நமக்கு இதில அனுபவம் இல்ல. இதை நாம எடுத்துச் செய்யறது ரிஸ்க் இல்லையா?"
"ரிஸ்க் இல்லாம பிசினஸே இல்ல. திட்டம் போட்டுப் பண்ணினா செய்ய முடியாதது எதுவும் இல்ல."
"என்னோட பாயின்ட் அதுதான். நாம பெரும்பாலும் வீடுகள்தான் கட்டிக்கிட்டிருக்கோம். சில கால்வாய்கள்ள மதகுகள் கட்டி இருக்கோம். இது மாதிரி பெரிய பாலம் கட்ட, நாம அனுபவம் உள்ள எஞ்சினியர்களை வேலைக்கு எடுத்து விரிவாத் திட்டம் போட்டுக் கட்டணும். தேர்தல் வரதால, மூணு மாசத்துக்குள்ள இந்தப் பாலத்தைக் கட்டி முடிக்கணும்னு அவசரப்படறாங்க. நமக்கு அனுபவம் இல்லாத வேலையில, அதுவும் இப்படி ஒரு குறைஞ்ச அவகாசத்தில செய்ய வேண்டிய வேலையை, நாம எடுத்துக்கிட்டு செய்ய முடியாம போனா, நம்ம நிறுவனத்தோட பேரு கெட்டுடும். இன்னும் நாம ஒர்க் ஆர்டரை ஏத்துக்கல. நமக்கு வேற கமிட்மென்ட்கள் இருக்கறதால, இதை எடுத்துக்க முடியாதுன்னு சொல்லிடலாம்."
"முடியாது செல்வா! அமைச்சரோட உறவினருக்குக் கிடைச்ச கான்டிராக்ட் இது. அவரால இதைச் செய்ய முடியாதுங்கறதால, அவர் இதை எனக்கு சப்-கான்டிராக்டா கொடுத்திருக்காரு. உங்களுக்கு விருப்பம் இல்லேன்னா, இதை நான் என் பேர்ல எடுத்துச் செய்யறேன்" என்றார் செல்வகுமார்.
"நல்லது செல்வா, அப்படியே செய்யலாம். நாம செஞ்சுக்கிட்டிருக்கற மத்த வேலைகளை முடிச்சப்பறம், நம்ம பார்ட்னர்ஷிப்பைத் தொடரணுமான்னு நாம முடிவு செய்யலாம்" என்று சொல்லி விட்டு எழுந்தார் பாலசந்திரன்.
பாலம் கட்டுவதில் அனுபவம் உள்ள ஒரு எஞ்சினியரைத் தேடிப் பிடித்து நியமிக்கவே செல்வகுமாருக்கு இரண்டு வாரம் ஆகி விட்டது. அதுவரை, தனக்குத் தெரிந்த அளவில், பாலம் கட்டுவதற்கான அடித்தளம் அமைப்பதற்கான வேலைகளைத் துவங்கிச் செய்து கொண்டிருந்தார் செல்வகுமார்.
இதற்கிடையில், அரசு கான்டிராக்டை எடுத்திருந்த அமைச்சரின் உறவினர் வேறு அவரை அவசரப்படுத்திக் கொண்டிருந்தார்.
"தேர்தல் தேதி அறிவிக்கிறதுக்குள்ள வேலையை முடிச்சாகணும். இல்லேன்னா, இது தேர்தலுக்காக செய்யறதுன்னு எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் பிரசாரம் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க. உங்க வேலை ரொம்ப மெதுவாப் போய்க்கிட்டிருக்காப்பல இருக்கே!" என்றார் அவர்.
"கவலைப்படாதீங்க. மூணு மாசத்துக்குள்ள முடிச்சுடுவோம்" என்று செல்வகுமார் அவரிடம் உறுதியளித்தாலும், உள்ளுக்குள் அவருக்கும் இதைக் குறித்த நேரத்தில் முடிக்க முடியுமா என்ற கவலை ஏற்பட்டிருந்தது.
எஞ்சினியர் பொறுப்பேற்றுக் கொண்டதும், அடித்தள வேலைகள் சரியில்லை என்று கூறிச் சில இடங்களில் மிண்டும் தோண்டியும், சில வேலைகளைத் திரும்பச் செய்யவும் வைத்ததால், இன்னும் சில நாட்கள் விரயமாகின.
"இவ்வளவு குறைஞ்ச காலத்தில இதைச் செய்ய முடியாது சார். இதுக்கு நீங்க ஒத்துக்கிட்டிருக்கக் கூடாது" என்றார் எஞ்சினியர்.
"அதையெல்லாம் ஒத்துக்கிட்டு ஒப்பந்தத்தில கையெழுத்துப் போட்டாச்சு. அதுக்குள்ள முடிச்சுத்தான் ஆகணும். எப்படிச் செய்யலாம்னு திட்டம் போட்டு செய்யுங்க!" என்றார் செல்வகுமார்.
"ஐ வில் டூ மை பெஸ்ட். ஆனா, சில வேலைகளுக்குக் குறைஞ்ச பட்ச காலம்னு இருக்கு. அதுக்கு முன்னால முடிக்க முடியாது!" என்றார் எஞ்சினியர்.
பாலத்தில் அடித்தூண்கள் கட்டப்பட்டு, அவற்றின் மேல் தளம் அமைக்கப்பட வேண்டிய நிலையில், "சார். இன்னும் அஞ்சு நாள் கழிச்சுத்தான் தளம் போடணும். கான்கிரீட் தூண்களுக்கெல்லாம் இன்னும் சில நாள் க்யூரிங் கொடுக்கணும்" என்றார் எஞ்சினியர்.
"இத்தனை நாள் கொடுத்த க்யூரிங் போதும். தளத்தைப் போட்டு, கைப்பிடிச் சுவர் கட்டி வேலையை முடிக்கணும். நமக்கு நேரம் இல்ல" என்றார் செல்வகுமார்.
"அப்படியெல்லாம் அவசரப்பட்டுச் செய்ய முடியாது சார்!" என்றார் எஞ்சினியர்.
"நீங்க எஞ்சினியரிங் படிச்சிருக்கலாம். நான் அனுபவம் உள்ள கான்டிராக்டர். நான் சொல்றபடி செய்யுங்க" என்றார் செல்வகுமார், எரிச்சலுடன்.
"சாரி சார்! அப்படிச் செய்ய முடியாது.நான் வேலையை விட்டு விலகிக்கறேன்" என்றார் எஞ்சினியர்.
"போங்க.எல்லாத்தையும் தாமதப்படுத்தினதுதான் நீங்க செஞ்ச வேலை! உங்களை வேலைக்கு வச்சதே தப்பு. நானே முன்னெடுத்து செஞ்சிருந்தா, இத்தனை நேரம் வேலை முடிஞ்சிருக்கும்" என்றார் செல்வகுமார், கோபத்துடன்.
எஞ்சினியர் பதில் பேசாமல் வெளியேறினார்.
செல்வகுமார் தானே முன்னின்று வேலைகளைத் தொடர்ந்தார்.
பாலத்தின் கைப்பிடிச் சுவர் கட்டப்பட்டுக் கொண்டிருந்தபோது, பாலத்தின் தூண்கள் ஒன்றில் ஒரு விரிசல் தோன்றியது. இதைப் பலரும் படம் பிடித்துப் பத்திரிகைகள், தொலைக் காட்சி சானல்கள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றில் வெளியிட, இது ஒரு பெரும் பேசும் பொருளாகி, அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களை உருவாக்கியது.
அமைச்சரின் உறவினரிடமிருந்து செல்வகுமாருக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. "உங்களை நம்பி இந்த வேலையைக் கொடுத்ததுக்கு இப்படிப் பண்ணிட்டீங்களே! அமைச்சர் என்னக் கண்டபடி பேசறாரு" என்றார் அவர் பதட்டத்துடன்.
"அது ஒண்ணும் இல்ல சார். அதை சரி செஞ்சுடலாம்" என்றார் செல்வகுமார்.
"சரி செய்யறதா? பாலம் கட்டி முடிக்கறதுக்கு முன்னேயே, அதைத் தாங்கிகிட்டு இருக்கற ஒரு தூண்ல வெடிப்பு வந்தா, அந்தப் பாலம் பாதுகாப்பா இருக்குங்கற நம்பிக்கை வருமா? தேர்தல் வரதால, அரசாங்கம் ஸ்டிரிக்டா இருக்கறதாக் காட்டிக்கறதுக்காக, எனக்குக் கொடுத்த கான்டிராக்டை கான்ஸல் பண்ணிட்டாங்க. அதனால, நீங்க வேலைகளை உடனே நிறுத்துங்க. உங்க ஆளுங்க யாரும் அங்கே போகக் கூடாது" என்றார் அமைச்சரின் உறவினர்.
"சார்! நான் செலவழிச்சிருக்கற பணம்? நான் கொடுத்திருக்கிற பில்களுக்கான பேமென்ட் இதெல்லாம்?"
"நஷ்ட ஈடா நீங்கதான் ஒரு பெரிய தொகை கொடுக்க வேண்டி இருக்கும்" என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டார் அமைச்சரின் உறவினர்.
அரசியல் இயல்
No comments:
Post a Comment