திருமணமான புதிதில், அர்ஜுனன் தன் மனைவி லட்சுமியுடன் தன் நண்பன் கதிரவன் வீட்டுக்கு விருந்துண்ணச் சென்று விட்டுத் திரும்பியதும், லட்சுமி அவனிடம் கேட்டாள்;
"உங்க நண்பர் வீடு பெரிசா நல்லா இருக்கே, அது அவரோட சொந்த வீடா?"
"இல்லை, வாடகை வீடுதான்" என்றான் அர்ஜுனன்.
"வாடகை நிறைய இருக்கும் போலருக்கே1 அவங்க ரெண்டு பேருக்கு எதுக்கு இவ்வளவு பெரிய வீட்டை எடுத்துக்கிட்டிருக்காங்க?"
"அவனுக்கு நல்ல வேலை, சம்பளம். அதனால அவனால நிறைய வாடகை கொடுக்க முடியும்."
"நீங்க ரெண்டு பேரும் ஒரே படிப்புத்தானே படிச்சீங்க?" என்றாள் லட்சுமி.
"ஆமாம். அவனுக்கு நல்ல சம்பளத்தில நல்ல வேலை கிடைச்சது. எனக்கு சுமாரான சம்பளத்திலதான் வேலை கிடைச்சது! ஏன், உனக்கு இதில வருத்தமா?" என்றான் அர்ஜுனன்.
"சேச்சே! சும்மாதான் கேட்டேன். நமக்கு வர வருமானத்தில. அளாவா செலவு செஞ்சு, சேமிச்சுக் குடும்பம் நடத்தறதுதான் புத்திசாலித்தனம்னு எங்கம்மா சொல்லுவாங்க. எனக்கு ஒப்பிடற பழக்கம்லாம் கிடையாது. அவங்க அவங்க வாழ்க்கை அவங்க அவங்களுக்கு!" என்றாள் லட்சுமி, சிரித்தபடியே.
'உண்மையிலேயே தன் மனைவி இப்படி நினைக்கிறாளா, அல்லது ஒப்புக்காக இப்படிச் சொல்கிறாளா?' என்று மனதுக்குள் நினைத்த அர்ஜுனன், "அதான் என் வாழ்க்கையில லட்சுமி நீ வந்துட்டியே, இனிமே எனக்கும் எல்லா அதிர்ஷ்டமும் வரும்" என்றான், அவளை உற்சாகப்படுத்தும் விதமாக.
முப்பது ஆண்டுகள் ஓடி விட்டன. அர்ஜுனன் வேலையில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. வேறு வேலைகளுக்கு முயன்றதில் அவனுக்கு வெற்றி கிட்டவில்லை.
அவன் வேலை பார்த்த நிறுவனம் ஒரு பெரிய நிறுவனம் அல்ல. அவன் சம்பளம் பெரிதாக உயரவில்லை. வருடாந்தர ஊதிய உயர்வுகள், பணவீக்கத்தை ஒட்டி அவ்வபோது நிகழ்ந்த ஊதிய மாற்றங்கள், பதவி உயர்வுகளின்போது கிடைத்த ஊதிய உயர்வுகள் போன்றவை ஓரளவுக்கே அவன் பொருளாதார நிலையை உயர்த்தின.
அன்று அவன் வீட்டுக்கு அவன் நண்பன் கதிரவனும் அவன் மனைவி தாராவும் வந்திருந்தனர்.
உணவு அருந்திய பிறகு, அர்ஜுனன் கதிரவனை அழைத்துக் கொண்டு மாடியறைக்குச் சென்றான். பெண்கள் இருவரும் கீழே இருந்த படுக்கை அறைக்கு ஓய்வெடுக்கச் சென்றனர்.
"மாடி எப்ப கட்டின? போன தடவை வந்தப்ப இல்லையே!" என்றான் கதிரவன்.
"இப்பதான், ஆறு மாசம் முன்னால. நான் இந்த வீட்டைக் கட்டினதே குழந்தைங்க பில்டிங் செட் வச்சு வீடு கட்டற மாதிரி கொஞ்சம் கொஞ்சமாத்தானே! ரொம்ப நாள் முன்னால, குறைஞ்ச விலையில இந்த மனையை வாங்கினேன். அப்ப இந்த ஏரியா டெவலப் ஆகவே இல்லை. பஸ் கூடக் கிடையாது. ஆனா இப்ப எப்படி இருக்குன்னு பாக்கறியே! அப்புறம், சின்னதா ஒரு வீடு கட்டிக் குடி வந்தோம். அஞ்சாறு வருஷம் கழிச்சு, கீழே இன்னொரு ரூம் கட்டினேன். இப்பதான் மாடி கட்ட முடிஞ்சது. பையனுக்கும் பெண்ணுக்கும் கல்யாணம் ஆகி வெவ்வேற ஊர்ல இருந்தாலும், அவங்க எப்பவாவது இங்க வந்தா தங்க வசதியா இருக்கும்னுதான் கட்டினேன். உன்னை மாதிரி நண்பர்கள் வரப்பவும் உக்காந்து பேச வசதியா இருக்கு" என்றான் அர்ஜுனன்.
"நீ புத்திசாலித்தனமா செயல்பட்டிருக்கே! என்னைப் பாரு. வேலை, ப்ரமோஷன்னு ஊர் ஊராப் போனேன். அங்கங்கே வாடகைக்கு வீடு எடுத்து வாழ்ந்துக்கிட்டிருந்தேன். ஏதாவது ஒரு ஊர்ல, ஒரு வீடு வாங்கி இருக்கலாம். வேலையில இருந்தவரையிலும், வசதியா வாழ்ந்தாச்சு. இப்ப ரிடயர் ஆனப்பறம் பாத்தா, சொந்த வீடு இல்ல. இப்ப வீடு விக்கற விலையில, வீடு வாங்கவும் முடியாது. ஒரே பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணினதைத் தவிர, உருப்படியா எதுவும் செய்யல. பெரிய பதவி, நல்ல சம்பளம் எல்லாம் இருந்தும், சொந்த வீடு இல்ல. நிறைய சம்பாதிச்சேன். பணமெல்லாம் எங்கே போச்சுன்னே தெரியல. தாராளமா செலவழிச்சு, வசதியா வாழ்ந்ததில, பணம் எங்கே போச்சு, எப்படிப் போச்சுன்னே கவனிக்காம விட்டுட்டேன். எங்கிட்ட இருக்கற சேமிப்பில, வீட்டு வாடகை கொடுத்து, மத்த செலவுகளையும் பாத்துக்கிட்டு மீதி நாளை ஓட்டறது பெரிய சவாலா இருக்கும் போலருக்கு!" என்றான் கதிரவன், பெருமூச்சுடன்.
No comments:
Post a Comment