Wednesday, April 7, 2021

472. தள்ளி வைக்கப்பட்ட தேர்தல்!

"என்னங்க நமசிவாயத்துக்கு எதிரா சங்கர்னு ஒரு சின்னப்பையனை நிறுத்தி இருக்கீங்க? வலுவான வேட்பாளரைப் போட வேண்டாமா?"

கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் இந்தக் கருத்தைத் தெரிவித்தாலும், கட்சித் தலைவர் குமரவேல் தன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.

"நாம வலுவா பிரசாரம் பண்ணினா, சங்கரையே நம்மால ஜெயிக்க வைக்க முடியும்" என்றார் குமரவேல்.

நமசிவாயம் 15 வருடங்களாக அமைச்சராக இருப்பவர். குமரவேல் முதல்வராக இருந்தபோது அவரால் அமைச்சராக்கப்பட்டவர்தான் நமசிவாயம். ஆனால் ஐந்து ஆண்டுகள் முடிவில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அவர் குமரவேல் கட்சியிலிருந்து விலகி எதிர்க் கட்சியில் சேர்ந்து  தேர்தலில் வென்று அந்தக் கட்சி தேர்தலில் வென்றதால் அவர்கள் ஆட்சியில் அமைச்சராகவும் ஆகி விட்டார்.

அந்தக் கட்சி அடுத்த தேர்தலிலும் வென்று ஆட்சியைப் பிடிக்க. நமசிவாயமும் தேர்தலில் வென்று அமைச்சராகத் தொடர்ந்தார்.

நடக்க இருக்கும் தேர்தலில் குமரவேலின் கட்சி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் நமசிவாயம் அவர் தொகுதியில் வெற்றி பெறுவார் என்று கருதப்பட்டது. 

நமசிவாயத்தைத் தோற்கடிப்பது கடினம் என்று கருதப்பட்ட நிலையில் குமரவேல் கட்சியிலிருந்து ஒரு வலுவான வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தபோது ஒரு அனுபவமற்ற இளைஞனை குமரவேல் நிறுத்தியது அவரது கட்சியினருக்கு மட்டுமின்றி ஊடகங்கள், அரசியல் விமரிசகர்கள், பொதுமக்கள் அனைவருக்குமே வியப்பை அளித்தது.

தேர்தல் பிரசாரம் நடந்து கொண்டிருந்தபோது, நமசிவாயத்தைத் தோற்கடிக்கும் நோக்கில் குமரவேல் கட்சியினர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதாக ஒரு சில ஊடகங்களில் செய்தி வெளியாகியது.

குமரவேல் இதை வலுவாக மறுத்ததுடன், தன் கட்சியைப் பற்றிய பொய்யான தகவல்களை வெளியிடும் ஊடகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துக் காட்டமாக ஒரு அறிக்கை வெளியிட்டார். ஆயினும் இது  போன்ற செய்திகள் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருந்தன.

தேர்தலுக்கு ஓரிரு தினங்கள் முன்பு, அமைச்சர் நமசிவாயம் வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடு செய்வதாகச் செய்திகள் வரத் தொடங்கின. தேர்தல் அதிகாரிகளின் சோதனையின்போது நமசிவாயத்தின் கட்சியினரிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்கள்  கைப்பற்றப்பட்டன.

நமசிவாயம் போட்டியிட்ட தொகுதியில் பெருமளவில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்டுப் பெரிய தொகையும் கைப்பற்றப்பட்டாதால் அந்தத் தொகுதிக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டிருப்பதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தேர்தல் முடிந்து ஓட்டுக்கள் எண்ணப்பட்டதும், குமரவேலின் கட்சி பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைக் கைப்பற்றியது.

குமரவேலும் கட்சியில் இவருக்கு நெருக்கமான பரமசிவமும் தனியே பேசிக் கொண்டிருந்தனர்.

"நல்ல வேளை, நமசிவாயம் தொகுதியில தேர்தல் தள்ளிப் போச்சு. இல்லேன்னா அவரு ஜெயிச்சிருப்பாரு! இப்ப  நாம ஆட்சிக்கு வந்துட்டதால அவர் தொகுதிக்கு மட்டும் தனியா தேர்தல் நடக்கறப்ப, மக்கள் அவருக்கு ஓட்டுப் போட மாட்டாங்க. நாமதான் ஜெயிப்போம்!" என்றார் பரமசிவம்.

"இது எப்படி நடந்ததுன்னு நினைக்கிறீங்க?" என்றார் குமரவேல் சிரித்தபடி.

"நமசிவாயம் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து மாட்டிக்கிட்டதாலதான்."

"அதுக்கு முன்னால, நாம பணம் கொடுக்கறதா செய்திகள் வந்ததில்ல?"

"ஆமாம். என்ன ஒரு அபாண்டம்! வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கக் கூடாதுங்கற கொள்கையை நாம எவ்வளவு உறுதியாக் கடைப்பிடிச்சுக்கிட்டிருக்கோம்! இது ஊடகங்களுக்குத் தெரியாதா? அப்படி இருந்தும் நம்மைப் பத்தி இப்படி ஒரு செய்தி வந்தது எனக்கு வருத்தம்தான்."

"பரமசிவம்! எனக்குத் தெரிஞ்ச ஊடக நண்பர்கள்கிட்ட சொல்லி இப்படி ஒரு செய்தியை வெளியிடச் சொன்னதே நான்தான்!" என்றார் குமரவேல் சிரித்துக் கொண்டே.

"நீங்களா? ஏன் இப்படிப் பண்ணினீங்க?"

"பரமசிவம்! நமசிவாயத்தைத் தோற்கடிக்கறது கஷ்டம்னு எனக்குத் தெரியும். என்னதான் நாமதான் ஜெயிக்கப் போறோம்னு கருத்துக் கணிப்புகள் சொன்னாலும், என்ன நடக்கப் போவுதுங்கறது யாருக்கும் உறுதியாத் தெரியாதுல்ல? அதனால, ஒருவேளை அவங்க கட்சி ஜெயிச்சா அவரு அமைச்சராவாருன்னு நினைச்சு மக்கள் அவருக்குத்தான் ஓட்டுப் போடுவாங்க.

"இப்ப இருக்கிற நம்ம மாநிலத் தேர்தல் அதிகாரி ஸ்டிரிக்டா இருக்கறவரு. பணப் பட்டுவாடா நடக்கறதாத் தெரிஞ்சா, தேர்தலை நிறுத்திடுவாருன்னு தெரியும். நாம பணம் கொடுக்க மாட்டோங்கறதால நமசிவாயம், தான் சுலபமா ஜெயிச்சுடலாம்னு நினைச்சு ஆரம்பத்தில பணம் கொடுக்காமதான் இருந்தாரு.

"நாம பணம் கொடுக்கறதா செய்தி வந்ததும் பயந்து போய் அவரும் பணம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாரு. பணம் எங்கேந்து எப்படி வருதுன்னு நம் ஆட்களைக் கண்காணிக்கச் சொல்லித் தகவல் சேகரிச்சு தேர்தல் அதிகாரிகளுக்குத் தகவல் சொல்ல வச்சேன். அவங்களும் பணத்தைப் புடிச்சுட்டாங்க. 

"நான் எதிர்பார்த்த மாதிரி மாநிலத் தேர்தல் அதிகாரி தேர்தலைத் தள்ளி வைக்கணும்னு மத்திய அதிகாரிகளுக்குப் பரிந்துரை செஞ்சு அவங்களும் தேர்தலைத் தள்ளி வச்சுட்டாங்க. நீங்க சொல்ற மாதிரி, இப்ப நம்ம ஆட்சி வந்துட்டதால, தனியா நடக்கற தேர்தல்ல மக்கள் நமக்குத்தான் ஓட்டுப் போடுவாங்க" என்றார் குமரவேல் உற்சாகத்துடன்.

"செய்ய முடியாதுன்னு எல்லாரும் நினைச்ச காரியத்தைச் செஞ்சு காட்டிட்டீங்களே!" என்றார் பரமசிவம் குமரவேலின் உற்சாகத்தைப் பகிர்ந்து கொண்டு.

அரசியல் இயல்
அதிகாரம் 48 
 வலியறிதல்  
குறள் 472
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.

பொருள்:
ஒரு செயலில் ஈடுபடும்போது அச்செயலைப் பற்றிய அனைத்தையும் ஆராய்ந்தறிந்து முயற்சி மேற்கொண்டால் முடியாதது எதுவுமில்லை.
அறத்துப்பால்                                                                              காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...