Thursday, April 1, 2021

469. உறவினருக்கு ஒரு உதவி

என் அப்பா தன் ஒரே அண்ணனுடன் நெருக்கமாக இருந்தவர்தான். ஆனால் என் பெரியப்பாவின் மறைவுக்குப் பிறகு அவர் குடும்பத்துக்கும் எங்கள் குடும்பத்துக்குமான நெருக்கம் பெருமளவு குறைந்து விட்டது.

எனவே பல வருடங்கள் கழித்து என் அப்பாவைப் பார்க்க என் வீட்டுக்கு வந்த என் பெரியப்பா பையன் குமரேசனை எனக்கு முதலில் அடையாளம் கூடத் தெரியவில்லை.

என் அப்பாவிடம் அவன் சற்று நேரம் தனிமையில் பேசிக் கொண்டிருந்து விட்டு விடை பெற்றுச் சென்று விட்டான்.

அவன் சென்றதும், என் அப்பா என்னை அழைத்து, "குமரேசன் ஏதோ பிசினஸ் பண்ணிக்கிட்டிருந்தானாம். நஷ்டம் வந்து இப்ப அதை மூடிட்டானாம். இப்ப வேலை தேடிக்கிட்டிருக்கான். உன் கம்பெனியில அவனுக்கு ஏதாவது வேலை கொடுக்க முடியுமான்னு பாரு" என்றார்.

நான் ஒரு சிறிய தொழிலை நடத்திக் கொண்டிருந்தேன். வாடிக்கையாளர்களைச் சந்திக்கவும், வேறு பல பணிகளுக்காகவும் நான் அடிக்கடி வெளியே அலைய வேண்டி இருந்ததால் என் அலுவலகத்தை நிர்வகிக்க ஒரு ஆஃபீஸ் மானேஜரை நியமிப்பது பற்றிச் சிறிது காலமாகவே நான் யோசித்துக் கொண்டிருந்ததால் குமரேசனுக்கு அந்தப் பொறுப்பைக் கொடுப்பது பற்றிப் பரிசீலிப்பதாக என் அப்பாவிடம் கூறினேன்.

என் அப்பா குமரேசனிடம் தகவல் சொல்ல அவன் என்னை என் அலுவலகத்தில் வந்து சந்தித்தான்.

"உன் பிசினஸை ஏன் மூடினே?" என்றேன்.

"நஷ்டம் ஏற்பட்டதாலதான்" என்றான் குமரேசன்.

"ஏன் நஷ்டம் ஏற்பட்டது?"

"வியாபாரத்தில போட்டிதான் காரணம். ஒரு பக்கம் குறைச்ச விலைக்கு விற்க வேண்டி இருந்தது. இன்னொரு பக்கம் வியாபாரப் போட்டியால விற்பனை குறைஞ்சு போச்சு. என் வாடிக்கையாளர்கள் சில பேரை என் போட்டியாளர்கள் தங்க பக்கம் இழுத்துட்டாங்க." 

அவனிடம் பேசிப் பார்த்ததில் அவனால் அலுவலகத்தை நன்றாக நிர்வகிக்க முடியும் என்று தோன்றியது. அவனுக்குத் தொழில் செய்த அனுபவம் இருந்ததால் அதுவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்தேன்.

"இங்க பாரு குமரேசா! என்னோடது சின்ன நிறுவனம். என்னால அதிக சம்பளம் கொடுக்க முடியாது. உனக்கு வேற நல்ல வேலை கிடைச்சா நீ போகலாம். நான் வருத்தப்பட மாட்டேன்" என்று சொல்லி சம்பளத் தொகையைக் கூறினேன்.

"இது போதும் எனக்கு. நான் அதிகம் எதிர்பார்க்கல" என்றான் குமரேசன்.

குமரேசன் வேலைக்குச் சேர்ந்து இரண்டு மாதங்கள் ஆகி விட்டன. அவன் அலுவலகத்தை நன்றாக நிர்வகித்துக் கொண்டிருப்பதாகத்தான் தோன்றியது.

ஒரு முறை என் வாடிக்கையாளர் ஒருவரைச் சந்தித்தபோது, அவர் என்னிடம், "உங்க ஆஃபீஸ்ல புதுசா ஒரு மானேஜரைப் போட்டிருக்கீங்களே, அவரு ரொம்ப அலட்சியமாப் பேசறாரு. ரெண்டு நாள் முன்னாடி உங்க ஆஃபீசுக்கு ஃபோன் பண்ணி அர்ஜென்ட்டா சரக்கு வேணும்னு கேட்டேன். 'உங்க அவசரத்துக்கெல்லாம் அனுப்ப முடியாது, நாளைக்குத்தான் அனுப்ப முடியும்'னு சொல்லிட்டாரு. அப்புறம் நான் வேற இடத்தில வாங்கிட்டேன். முன்னெல்லாம் சரக்கு கேட்டா உடனே அனுப்பிடுவாங்க. உங்களைப் பத்தி எனக்குத் தெரியும். அதனாலதான் உங்ககிட்ட சொல்றேன். மத்த வாடிக்கையாளர்கள்கிட்டல்லாம் இப்படிப் பேசினா அவங்க உங்ககிட்ட வியாபாரமே வச்சுக்க மாட்டாங்க" என்றார் வருத்தமும், கோபமும் கலந்த குரலில்.

நான் பதறிப்போய், "அவர் அப்படிப் பேசினதுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். இன்னொரு தடவை இப்படி நடக்காம நான் பாத்துக்கறேன். உங்க பெருந்தன்மைக்கும் ஆதரவுக்கும் என்னோட நன்றி" என்று அவர் கைகளைப் பற்றிக் கொண்டு கூறினேன்.

லுவலகத்துக்கு வந்ததும் குமரேசனை என் அறைக்கு அழைத்து விசாரித்தேன்.

"பின்னே? சாயந்திரம் அஞ்சு மணிக்கு ஃபோன் பண்ணி சரக்கு வேணும்னு கேட்டா, எப்படி சரக்கை அனுப்ப முடியும்? அதான் அப்படிச் சொன்னேன்" என்றான் குமரேசன் சாதாரணமாக.

பொங்கி வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு, "குமரேசா! வாடிக்கையாளரைத் திருப்திப்படுத்தினாதான் பிசினஸ் நடத்த முடியும். உன் வாடிக்கையாளர்கள் உன்னை விட்டுப் போனது ஏன்னு இப்பதான் எனக்குப் புரியுது. ஆனா அது இன்னும் உனக்குப் புரியல. புரிஞ்சிருந்தா உன்னை மாத்திக்கிட்டிருப்பியே! என் பெரியப்பா பையன்கறதால இந்தப் பொறுப்பை உனக்குக் கொடுத்தேன். உன் இயல்பைப் புரிஞ்சுக்காம உனக்கு இந்தப் பொறுப்பைக் கொடுத்தது என் தப்புதான்.

"நீ இனிமே  இங்கே வர வேண்டாம். வேற ஏதாவது நிறுவனத்தில அலுவலக உதவியாளர் வேலை ஏதாவது உனக்கு வாங்கிக் கொடுக்க முடியுமான்னு பாக்கறேன். நீயும் வேற எங்கேயாவது முயற்சி பண்ணு. அதுவரையிலும் ரெண்டு மாசம் உனக்கு சம்பளம் கொடுத்துடறேன்" என்றேன் நான். 

அரசியல் இயல்
அதிகாரம் 47 
 தெரிந்து செயல்வகை  
குறள் 469
நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.

பொருள்:
ஒருவருக்கு நன்மை செய்யும்போது, அவருடைய இயல்புகளை அறிந்து அவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.
  குறள் 470             
   குறள் 468              
அறத்துப்பால்                                                              காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...