Sunday, April 11, 2021

474. சுந்தரின் நிர்வாகம்

காசிலிங்கம் திடீரென்று இறந்ததும் அவருடைய நிறுவனத்தை நிர்வகிக்கும் பொறுப்பு அவர் மகன் சுந்தரிடம் வந்தது. 

சுந்தர் அப்போதுதான் பட்டப்படிப்பை முடித்திருந்தான். பள்ளியிலும், கல்லூரியிலும் புத்திசாலித்தனமான மாணவன் என்று அவன் ஆசிரியர்களாலும், சக மாணவர்களாலும் மதிக்கப்பட்டான். அத்துடன் அவன் ஆங்கிலப் புலமையும் சிறப்பாக இருந்தது.

அதனால் தன்னால் தன் அப்பாவின் நிறுவனத்தை நன்கு நிர்வகிக்க முடியும் என்ற நம்பிக்கை சுந்தருக்கு இருந்தது.

சுந்தர் பொறுப்பேற்றுக் கொள்ளும் முன், அவன் அம்மா கௌரி, அவனிடம், "சுந்தர்! உன் அப்பாகிட்ட வேலை செய்யறவங்க ரொம்ப விஸ்வாசமானவங்க, அனுபவம் உள்ளவங்க. அவங்களை நல்லாப் பயன்படுத்திக்க!" என்றாள் .

சுந்தர் பொறுப்பேற்றுக் கொண்ட சில நாட்களிலேயே அவன் உணர்ந்தது அவன் நிறுவன ஊழியர்கள் அதிகம் படிக்காதவர்கள், அறிவுக் கூர்மை இல்லாதவர்கள் என்பதுதான்.

நிறுவனத்தின் மானேஜராக இருந்த குணசேகரனைத் தன் அறைக்கு அழைத்தான் சுந்தர்.

"மிஸ்டர் குணசேகரன்! நம்ப ஊழியர்கள் யாரும் சரி இல்ல. ஒத்தருக்குக் கூட இங்கிலீஷ் தெரியல. ஒரு சின்னக் கடிதம் கூட தப்பு இல்லாம எழுதத் தெரியல. இவங்களையெல்லாம் வச்சுக்கிட்டு எங்கப்பா எப்படித்தான் சமாளிச்சாரோ தெரியல!" என்றான் சுந்தர்.

"தம்பி! தப்பா நினைக்காதீங்க..."

"மிஸ்டர் குணசேகரன். நான் உங்க முதலாளி. இந்தத் தம்பின்னு கூப்பிடறதெல்லாம் வேண்டாம். சார்னே கூப்பிடுங்க."

"சாரி சார்! இங்கே வேலை செய்யறவங்க எல்லாரும் வேலையில கெட்டிக்காரங்க. இங்கிலீஷ் தெரியாததைப் பெரிய குறையா நினைக்காதீங்க. நம்ப தொழிலுக்கு அது அவ்வளவு முக்கியம் இல்ல!" என்றார் குணசேகரன்.

"தப்பு தப்பான இங்கிலீஷ்ல கடிதங்கள் போனா பாக்கறவங்க சிரிக்க மாட்டாங்க?"

"சரி சார்! வேணும்னா கடிதங்கள் எழுத ஒரு படிச்ச ஆளை கரெஸ்பாண்டன்ஸ் கிளார்க்கா நியமிக்கலாம்."

"அது கூடுதல் செலவுதானே! அதெல்லாம் வேண்டாம். நீங்கதானே கடிதங்கள்ள கையெழுத்துப் போட்டு அனுப்பறீங்க? கடிதங்களை டைப் பண்ணினப்பறம் எனக்கு அனுப்புங்க. நான் கரெக்ட் பண்ணிக் கொடுக்கறேன். அப்புறம் அதை மறுபடி டைப் பண்ணச் சொல்லி, அப்புறம் நீங்க கையெழுத்துப் போட்டு அனுப்புங்க" என்றான் சுந்தர்.

வியாபாரத்தை கவனிக்க வேண்டிய முதலாளி கடிதங்களில் உள்ள ஆங்கிலப் பிழைகளைத் திருத்திக் கொண்டிருப்பது என்ன வகையான நிர்வாகம் என்று தன் மனத்தில் தோன்றிய கேள்வியை அடக்கிக் கொண்டு "சரி சார்" என்றார் குணசேகரன்.

சுந்தர் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு ஏழெட்டு மாதங்களுக்குப் பிறகு, ஒருநாள் கௌரி அவனிடம் கேட்டாள்: "பிசினஸ் எப்படிப் போய்க்கிட்டிருக்கு?"

"நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கு" என்றான் சுந்தர்.

"எங்கிட்ட உண்மையை மறைக்காதே சுந்தர். நம்ப ஊழியர்கள் சில பேர் ரெண்டு மூணு தடவை வீட்டுக்கு வந்து எங்கிட்ட பேசினாங்க..."

"அவங்க எதுக்கு வீட்டுக்கு வந்து உன்னைப் பாக்கணும்?" என்றான் சுந்தர் கோபமாக.

"தன்கிட்ட வேலை செய்யறவங்க எல்லாரையும் தன் குடும்ப உறுப்பினர்கள் மாதிரிதான் உங்கப்பா நடத்தினாரு. அதனால அவங்களுக்கும் தொழில் நல்லா நடக்கணுங்கறதில அக்கறை இருக்கு. நீ சில வாடிக்கையாளர்கள் கிட்ட சரியா நடந்துக்காததால அவங்க நம்மளை விட்டுட்டுப் போயிட்டாங்க. அதனால ரெண்டு மூணு மாசமா வியாபாரமும் குறைஞ்சிருக்கு. அதனாலதான் அவங்க கவலைப்பட்டு எங்கிட்ட வந்து சொன்னாங்க. நீ அவங்க சொல்றதைக் காது கொடுத்துக் கேக்க மாட்டேங்கறதாலதான் அவங்க எங்கிட்ட வந்தாங்க. நீ ஊழியர்களைச் சரியா நடத்தாததால ரெண்டு பேர் வேலையை விட்டுப் போயிட்டாங்க. இப்படியெல்லாம் இருக்கச்சே தொழில் நல்லா நடக்குதுன்னு நீ எப்படிச் சொல்ற?" என்றாள் கௌரி சற்றுக் கடுமையாக.

"என்னம்மா நீ சொல்றது? அப்பா தொழிலை நடத்தின முறை வேற, நான் நடத்தற முறை வேற. அதனால ஆரம்பத்தில சில பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சுப் பாரு, நம்ம கம்பெனி எங்கேயோ போயிடும்."

"நடக்கறதைப் பாத்தா ரெண்டு வருஷத்தில நீ நம்ம கம்பெனியையே இல்லாம பண்ணிடுவியோன்னு தோணுது. உனக்கு இந்தத் தொழில் புதிசு. ஏற்கெனவே அங்கே இருக்கற அனுபவஸ்தர்கள் கிட்ட நீ எல்லா விவரங்களையும் தெரிஞ்சுக்கிட்டு அதுக்கப்பறம் எப்படி இம்ப்ரூவ் பண்ணலாம்னு யோசிச்சு நீ செயல்பட்டிருக்கணும். கல்லூரியில படிச்சுப் பட்டம் வாங்கினதாலேயே உனக்கு எல்லாம் தெரியும்னு நீ நினைச்சுக்கிட்டிருக்க. அங்கே வேலை செய்யறவங்களா இருந்தாலும் சரி, வாடிக்கையாளர்களா இருந்தாலும் சரி அவங்களை அனுசரிச்சுப் போக உனக்குத் தெரியல. நீ கம்னியை நிர்வாகம் செஞ்சது போதும். நீ வேற ஏதாவது வேலைக்குப் போ. ரெண்டு மூணு வருஷம் வெளியில வேலை செஞ்ச அனுபவம் கிடைச்சப்பறம் நீ நம்ம கம்பெனியைப் பாத்துக்கலாம்" என்றாள் கௌரி.

"அதுவரையிலேயும்? குணசேகரனே பாத்துப்பாரா?" என்றான் சுந்தர் கேலியாக.

"அவரே பாத்துப்பாருதான். உங்கப்பாகிட்ட இருந்தவராச்சே! அவருக்கு எல்லாம் தெரியும். ஆனா கம்பெனி நம்பளோடதாச்சே! நமக்குப் பொறுப்பு இருக்கணும் இல்ல? அதனால ரெண்டு மூணு வருஷத்துக்கு நானே கம்பெனியைப் பாத்துக்கலாம்னு இருக்கேன்!" என்றாள் கௌரி. 

அரசியல் இயல்
அதிகாரம் 48 
 வலியறிதல்  
குறள் 474
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.

பொருள்:
மற்றவர்களோடு ஒத்து நடக்காமல், தன் வலிமையின் அளவையும் அறியாமல், தன்னைப் பற்றிப் பெரிதாக நினைத்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்.
அறத்துப்பால்                                                                              காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...