Sunday, April 4, 2021

471. போருக்குத் தயாரா?

"இந்த மந்திராலோசனை எதற்கு என்பது உஙகள் அனைவருக்கும் தெரியும். நம் அண்டை நாடான விகாச நாட்டின் மீது படையெடுப்பது பற்றி ஆலோசிக்கத்தான். சேனாதிபதி! நம் படைகள் போருக்கு ஆயத்தமாக உள்ளனவா?" என்றார் மன்னர்.

" உள்ளன, அரசே! எப்போது வேண்டுமானாலும் போருக்குக் கிளம்ப நம் வீரர்கள் ஆயத்தமாக இருக்கிறார்கள்" என்றார் படைத்தலைவர்.

"சேனாதிபதி! நம் படைகளின் எண்ணிக்கை என்ன?" என்றார் அமைச்சர்.

தேர், கரி, பரி, காலாள் என்று ஒவ்வொரு படைப்பிரிவிலும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற எண்ணிக்கையை சேனாதிபதி கூறினார்.

"அரசே! நம் ஒற்றர்கள் கொடுத்துள்ள தகவல்களின்படி விகாச நாட்டுப் படையின் எண்ணிக்கை இதை விட மிகவும் குறைவுதான்" என்றார் அமைச்சர்.

"அப்புறம் என்ன? நாம் படையெடுத்துச் செல்லலாம் அல்லவா?" என்றார் மன்னர் உற்சாகத்துடன்.

"இன்னும் சில விஷயங்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும் மன்னா!" என்றார் அமைச்சர்.

"என்ன விஷயங்கள்?"

"நாம் விகாச நாட்டின் மீது படையெடுத்தால் அவர்களுக்கு ஆதரவாகக் கொன்றை நாடு போரில் கலந்து கொள்ளக் கூடும்."

"அவர்கள் எப்படி வருவார்கள்? ஓராண்டுக்கு முன்தானே நம் மீது போர் தொடுத்துத் தோல்வி அடைந்து ஓடினார்கள்?"

"அதனாலேயே அவர்கள் நம் மீது ஆத்திரத்தில் இருக்கிறார்கள். இத்தகைய ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் அதை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளக் கூடும்."

"ஏன், நமக்குத் துணையாக வரக் கூடிய நாடுகள் இருக்கின்றனவே!"

"இருக்கின்றன அரசே! ஆனால் நாம் முதலில் அவர்களிடம் தூதர்களை அனுப்பி அவர்கள் நமக்குத் துணையாகப் போருக்கு வருவார்கள் என்பதை உறுதிப் படுத்திக் கொள்வது உசிதம் என்று நான் நினைக்கிறேன்."

"அப்படியானால், நாம் உடனே போர் தொடுக்க முடியாதா?" என்றார் அரசர் எரிச்சலுடன்.

"நம் நட்பு நாடுகளின் உதவியை உறுதி செய்து கொண்டு இன்னும் சில ஏற்பாடுகளையும் செய்து கொண்ட பின் நாம் போரில் இறங்குவதுதான் நமக்கு நன்மை பயக்கும் என்பது என் பணிவான கருத்து" என்றார் அமைச்சர், மென்மையான தொனியில்.

"வேறு என்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும்?" 

படைத்தலைவரைப் பார்த்த அமைச்சர், "படைத்தலைவர் ஒரு விஷயத்தைச் சொல்லத் தயங்குகிறார் என்று நினைக்கிறேன். ஓராண்டுக்கு முன்தான் நாம் ஒரு போரில் ஈடுபட்டதால், போரில் சேதமடைந்த ஆயுதங்கள் செப்பனிடப்படும் பணி இன்னும் முழுமையாக நிறைவு பெறவில்லை. புதிதாக ஆயுதங்கள் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. போரில் காயமடைந்து, சிகிச்சை பெற்று குணமடைந்த விரர்களால் அதற்குள் இன்னொரு போரில் முழு வலிமையுடன் ஈடுபட முடியாது. அதனால் படையில் புதிய விரர்கள் சிலரைச் சேர்த்து அவர்களுக்குப் பயிற்சியளிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இவை அனைத்தும் நிறைவு பெறச் சில மாதங்கள் பிடிக்கலாம்."

"சில மாதங்கள் கழித்துப் போருக்குக் கிளம்புவதென்றால், அதற்குள் போர் செய்ய அவசியமே இல்லை என்ற நிலை ஏற்படலாமே!"

"தாங்கள் கூறுவது சரிதான் மன்னா! இந்தப் போருக்கான தேவை கூட இல்லாமல் போகலாம்!"

"என்ன சொல்கிறீர்கள் அமைச்சரே?"

"கௌரவர்களுடன் போர் செய்ய வேண்டியது தவிர்க்க முடியாது என்ற நிலையிலும் பாண்டவர்கள் போரைத் தவிர்க்கும் முயற்சியாகக் கண்ணனைத் தூது அனுப்பவில்லையா? முதலில் நாம் விகாச நாட்டுக்கு ஒரு தூதரை அனுப்பி சமாதான முயற்சியில் ஈடுபடலாம். அது வெற்றி பெற்றால் போருக்கான அவசியமே இல்லாமல் போகலாம். அது வெற்றி பெறாவிட்டால் படைவீர்கள், ஆயுதங்கள், நட்பு நாடுகளின் உதவி பற்றிய உறுதி ஆகியவற்றை நாம் தயார் செய்து கொண்டு வலுவான நிலையில் போருக்குச் செல்லலாம்." 

மன்னர் யோசனையில் ஆழ்ந்தார்.

அரசியல் இயல்
அதிகாரம் 48 
 வலியறிதல் 
குறள் 471
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.

பொருள்:
செய்வதற்கு எண்ணும் செயலின் வலிமை, செய்ய முயலும் தன் வலிமை, அதை எதிர்க்கும் எதிரியின் வலிமை, இருவர்க்கும் துணை வருவோர் வலிமை  இவற்றை எல்லாம் நன்கு ஆராய்ந்தே ஒரு செயலைச் செய்ய வேண்டும்.
       குறள் 470       
அறத்துப்பால்                                                                              காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...