Friday, April 2, 2021

470. தேர்தல் முடிவு!

"உங்களைப் போன்றவர்கள் எல்லாம் அரசியலுக்கு வரணும் ஐயா!"  என்றார் கார்மேகம்.

"எனக்கு எதுக்குங்க அரசியல்? நான் ஏதோ என் தொழில் உண்டு, என்னோட கல்லூரி நிறுவனங்கள் உண்டுன்னு இருந்துக்கிட்டிருக்கேன்" என்றார் கலியமூர்த்தி.

"உங்களை மாதிரி தகுதி உள்ளவங்கள்ளாம் நமக்கு ஏன் அரசியல்னு ஒதுங்கி இருக்கறதாலதான் அரசியல் மோசமாப் போயிட்டிருக்கு."

"நீங்க ஒரு அரசியல் கட்சித் தலைவர். நீங்களே இப்படிச் சொல்றீங்களே!"

"இருந்தா என்ன? நான் எப்பவுமே உண்மையைப் பேசத் தயங்க மாட்டேன். தேர்தல்ல நிறுத்தி வைக்க நல்ல ஆளுங்க கிடைக்காததாலதான் நானே பல மோசமான ஆளுங்களை நிறுத்த வேண்டி இருக்கு" என்ற கார்மேகம், "இந்தத் தொகுதியில நம்ம கட்சி வேட்பாளரா நீங்கதான் நிக்கறீங்க!" என்றார்.

"இல்லீங்க, வேண்டாம். எனக்கு தேர்தலைப் பத்தி எதுவும் தெரியாது" என்றார் கலியமூர்த்தி.

"உங்களுக்கு எதுவும் தெரியாட்டா என்ன? நீங்க எதுவும் செய்ய வேண்டாம். வேட்பு மனு தாக்கல் செய்யறதிலேந்து பிரசாரம் பண்றது ஓட்டு கேக்கறது எல்லாத்தையும் நாங்க பாத்துப்போம். நீங்க சும்மா சிரிச்சுக்கிட்டு, கையைக் கூப்பிக்கிட்டு நின்னாப் போதும்" என்றார்.

கலியமூர்த்தி வேட்புமனு தாக்கல் செய்து, கட்சியினர் உதவியுடன் பிரசாரத்தைத் துவங்கினார்.

தொழிலதிபரும், புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களின் தலைவருமான தான் எல்லோரையும் வணங்கி ஓட்டுக் கேட்பது முதலில் கலியமூர்த்திக்குச் சற்றுச் சங்கடமாக இருந்தாலும், ஒரு சமூக சேவையாகத்தானே தான் இதைச் செய்கிறோம் என்று தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டார்.

ஆயினும் பிரசாரத்தில் அவருடன் வந்த கட்சித் தலைவர்களின் செயல்பாடுகளும், பிரசாரக் கூட்டங்களில் அவர் அருகில் இருக்கும்போதே பிற கட்சித் தலைவர்களையும்,சில ஜாதித்தலைவர்களையும் அவர்கள்  தரக் குறைவாகத் தாக்கிப் பேசியதும் அவருக்கு அருவருப்பைத் தந்தன.

அது பற்றித் தனது ஆட்சேபங்களை அவர் பேச்சாளர்களிடம் தெரிவித்தபோது, "சார்! இப்படியெல்லாம் பேசினாத்தான் நம்ம ஆதரவாளர்கள் உற்சாகமாகி நமக்கு ஓட்டுப் போடுவாங்க" என்பது போன்ற பதில்களே அவர்கள் அனைவரிடமிருந்தும் வந்தது.

கார்மேகத்திடமே தன் மனவருத்தத்தை கலியமூர்த்தி தெரிவித்தபோது, "அரசியல்ல இதெல்லாம் இயல்புதான். கொஞ்ச நாள்ள உங்களுக்கு இதெல்லாம் பழகிடும்" என்றார் அலட்சியமாக.

கலியமூர்த்திக்கு அதிர்ச்சியாக இருந்தது.

ட்டுப் பதிவு முடிந்து விட்டது. இரண்டு நாட்களுக்குப் பிறகு ஓட்டு எண்ணிக்கைக்கான நாள் குறிப்பிடப்பட்டிருந்தது.

கலியமூர்த்தியைப் பார்க்க அவருடைய நீண்ட நாள் நண்பர் சுப்பையா வந்தார்.

"என்ன கலியமூர்த்தி இது? உனக்கு ஏன் இந்த வேலை?" என்றார்.

கலியமூர்த்திக்கே தான் தேர்தலில் போட்டியிட்டது ஒரு தவறான செயலோ என்ற எண்ணம் இருந்தாலும், தன் நண்பரிடம் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்,"ஏன் தேர்தல்ல நிக்கக் கூடாதா என்ன?" என்றார்.

"தேர்தல்ல யார் வேணும்னா நிக்கலாம். ஆனா நீ ஒரு ஜாதிக்கட்சி வேட்பாளரா இல்ல போட்டி போடற?" 

"இங்க பாரு சுப்பையா. அந்தக் கட்சித் தலைவர் கார்மேகம் எனக்கு நல்லாத் தெரிஞ்சவர். அவர் கேட்டுக்கிட்டதால அவர் கட்சியில தேர்தல்ல நின்னேன். மத்தபடி இந்தக் கட்சிதான் வேணும்னு நான் தேர்ந்தெடுக்கல."

"நீயும் நானும் ஒரே ஜாதிதான். ஆனா நம்ப ரெண்டு பேருக்குமே ஜாதி உணர்வு கிடையாது. ஒரு தொழிலதிபர், கல்வி நிறுவனங்களை நடத்தறவர்னு உனக்கு வெளியில ஒரு நல்ல மதிப்பு இருக்கு. நீ எந்த ஜாதிங்கறதைக் கூட நிறைய பேரு நினைச்சுப் பாத்திருக்க மாட்டாங்க. இப்ப ஒரு ஜாதிக் கட்சி வேட்பாளரா நின்னு உன்னோட இமேஜையே சின்னதாக்கிக்கிட்டியே! உன் தேர்தல் பிரசாரத்தில நீ உட்கார்ந்திருந்த மேடையில பேசின சில தலைவர்கள் மத்த ஜாதித் தலைவர்களைத் தாக்கிப் பேசினது அந்த ஜாதிக்காரங்களுக்கு உன் மேல ஒரு தப்பான அபிப்பிராயத்தை ஏற்படுத்தி இருக்குமே! பொதுவா எல்லாருக்குமே உன் மேல இருந்த நன்மதிப்பு இப்போ குறைஞ்சிருக்குமே! இவரை ஒரு உயர்ந்த மனிதர்னு நினைச்சோம்,இவர் ஒரு ஜாதித்தலைவர்தானான்னு பல பேர் நினைக்க மாட்டாங்களா?" என்றார் சுப்பையா.

கலியமூர்த்தி மௌனமாக இருந்தார்.

தேர்தல் முடிவுகள் வெளியாகி விட்டன. கலியமூர்த்தி தோல்வி அடைந்திருந்தார். ஆனால் அது அவருக்கு வருத்தத்தையோ ஏமாற்றத்தையோ அளிக்காமல், ஒருவித நிம்மதியையும் மகிழ்ச்சியையுமே அளித்தது.

'இனியும் இது போன்ற ஒரு தவறைச் செய்யாமல், தன் தொழிலிலும்,கல்வி நிறுவனப் பணிகளில் மட்டுமே ஈடுபட்டு, தான் இழந்து விட்ட நன்மதிப்பை நாளடைவில் திரும்பப் பெற முயற்சி செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டார் கலியமூர்த்தி.

அரசியல் இயல்
அதிகாரம் 47 
 தெரிந்து செயல்வகை  
குறள் 470
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு.

பொருள்:
தம் நிலையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக்கொள்ளாது, ஆகையால் உலகம் இகழாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...