Tuesday, March 9, 2021

463. வருமானத்துக்காக ஒரு முதலீடு

"ரிடயர் ஆயிட்டீங்க. இனிமே சம்பளம் கிடையாது. உங்களுக்கு பென்ஷனும் இல்ல. என்ன செய்யப் போறீங்க?" என்றாள் தனம்.

"என்ன செய்யறது? பி எஃப் கிராச்சுவிடி எல்லாம் சேர்ந்து முப்பது லட்சம் ரூபா வரும். அதை பாங்க்ல போட்டு வர வட்டியை வச்சுத்தான் காலத்தை ஓட்டணும்" என்றார் பிரபாகரன்.

"அது போதுமா? அதோட வருஷா வருஷம் செலவெல்லாம் ஏறிக்கிட்டே இருக்கும். ஆனா வட்டித்தோகை அதேதான் வரும். குறையக் கூடச் செய்யலாம். வேற எங்கேயாவது முதலீடு செஞ்சா அதிக வட்டி வருமான்னு பாருங்களேன்."

"அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு எங்கேயாவது முதலீடு செஞ்சா அப்புறம் முதலே திரும்பி வராம போயிடும்."

"ஏதாவது செய்ய முடியுமான்னு பாருங்க. இல்லேன்னா நீங்க வேற ஏதாவது வேலைக்குப் போகணும்."

"எனக்கு என்ன வேலை கிடைக்கும்? யாரு வேலை கொடுப்பாங்க?" என்றார் பிரபாகரன். 

சில நாட்கள் கழித்து பிரபாகரன் தன் பழைய நண்பர் கோபுவைச் சந்தித்தார். அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் ஒரு ஸ்டாக் ப்ரோக்கிங் நிறுவனத்துக்குச் சென்று அதே நாள் வர்த்தகம் என்ற முறையில் பங்குகளை அன்றாடம் வாங்கி அன்றே விற்று லாபம் பெறும் தொழிலைச் செய்வதாகச் சொன்னார்.

"லாபம் வருதா?" என்றார் பிரபாகரன்.

"லாபம் நஷ்டம் இரண்டும் மாறி மாறித்தான் வரும். ஆனா மொத்தமா பாக்கறப்ப நல்ல லாபம்தான் கிடைக்கும். உனக்கு ஆர்வம் இருந்தா சொல்லு. உன்னை அழைச்சுக்கிட்டுப் போயி உனக்கு ஒரு கணக்கு ஆரம்பிச்சு வைக்கறேன்" என்றார் கோபு.

"எனக்கு ஸ்டாக் மார்க்கெட்டைப் பத்தி எதுவமே தெரியாதே!" என்றார் பிரபாகரன்.

"தெரியாட்டா பரவாயில்ல. அவங்களே மார்க்கெட்டைப் பாத்து அப்பப்ப சில டிப்ஸ் கொடுப்பாங்க. அவங்க சொல்ற பங்குகளை அவங்க சொல்ற நேரத்தில அவங்க சொல்ற விலைக்கு வாங்கி அவங்க சொல்ற விலைக்கு வித்தாப் போறும். நாம இந்த  கம்பெனி ஷேர் இவ்வளவு இந்த விலைக்கு வாங்குங்கன்னு சொன்னாப் போதும். அவங்க ஆபரேட்டரே வாங்கிடுவாரு. நம்ம பங்குகளை வாங்கினது வித்தது பத்தி நம்ம மொபைலுக்கு உடனுக்குடன் செய்தி வரும். விலை எப்படிப் போகுதுன்னு நாம ஆபரேட்டர் பக்கத்தில உக்காந்து கம்ப்யூட்டர்ல பாத்துக்கிட்டு எப்ப விக்கறதுன்னு முடிவு செய்யலாம். ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும். வருமானமும் வரும். நாம வேலை செஞ்சப்ப சலிப்போட செஞ்ச மாதிரி இல்லாம உற்சாகமா இருக்கலாம்" என்றார் கோபி.

முயன்று பார்க்கலாமே என்று கோபியுடன் அந்த அலுவலகத்துக்கு அடுத்த நாளே சென்றார் பிரபாகரன். ஒவ்வொரு கணினியின் அருகிலும் அவர் வயதுக்காரர்கள் ஐந்தாறு பேர் அமர்ந்து கணினித்திரையில் பங்குகளின் விலை கணத்துக்குக் கணம் மாறிக் கொண்டிருப்பதை கவனித்துக் கொண்டும், அவ்வப்போது சிலர் "கங்கா ஃபார்மா 200 ஷேர் 157.20க்கு வாங்குங்க" என்பது போன்ற அவசர உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டும் இருந்தார்கள்.

அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை அதிகாரி சுரேஷிடம் பிரபாகரனை கோபி அறிமுகப்படுத்தியதும், "வாங்க சார்! இலவசமா கணக்கு ஆரம்பிக்கலாம், கட்டணம் எதுவும் இல்லை. ஒரு லட்சம் ரூபா டெபாசிட் பண்ணினீங்கன்னா இன்னிக்கே எல்லா ஃபார்மாலிட்டியையும் முடிச்சுட்டு, நாளைக்கே டிரேடிங் ஆரம்பிச்சுடலாம்" என்றார் அவர்.

"ஒரு லட்சம் ரூபாயா? பத்தாயிரம் ரூபாயில ஆரம்பிக்க முடியாதா?" என்றார் பிரபாகரன் சற்றுத் தயக்கத்துடன்.

"இல்ல சார். எங்க அனுபவத்தில ஒரு லட்சம் ரூபாய்க்குக் குறைவான முதலீட்டில இந்தத் தொழிலைச் செய்ய முடியாது. அதனாலதான் நாங்க சமீபத்திலதான் குறைஞ்ச பட்ச முதலீட்டை அம்பதாயிரத்திலேந்து ஒரு லட்சமா உயர்த்தி இருக்கோம். இது ஒரு டெபாசிட்தான். உங்க பணத்தை நீங்க எப்ப வேணும்னா திரும்பி எடுத்துக்கலாம். ஆனா ஒரு லட்சம் ரூபா முதலீட்டில வாரா வாரம் ஆயிரம் ரெண்டாயிரம்னு உங்க லாபத்தை நீங்க வித்டிரா பண்ண முடியுமே! இது மாதிரி எந்த பிசினஸ்ல நடக்கும்?" என்றார் சுரேஷ்.

பிரபாகரனுக்கு முதல் நாளே ஐந்நூறு ரூபாய் லாபம் கிடைத்தது. அவருக்கே வியப்பாக இருந்தது. அவ்வப்போது அவருடைய கைபேசிக்கு வந்த டிப்ஸைப் படித்து விட்டு அவற்றின்படி அவர் செய்த மூன்று வணிகங்களுமே லாபமளித்தன. ப்ரோக்கர் கமிஷன் வரிகள் எல்லாம் போக அவருடைய நிகர லாபம் 382 ரூபாய் அவர் கணக்கில் ஏறி இருந்தது.

"முதல் நாள்ங்கறதால இன்னிக்கு நீங்க பயந்து பயந்து மூணு டிரேட்தான் அதுவும் 50 பங்குகள் வாங்கித்தான் பண்ணினீங்க. இன்னும் கொஞ்சம் தைரியமா 200, 300 பங்குகள்னு வாங்கி அதிகமான டிரேடிங்கும் பண்ணினா ஒரு நாளைக்கு ஆயிரம், ரெண்டாயிரம் சம்பாதிக்கலாம்" என்றார் சுரேஷ்.

இரண்டாம் நாள் அவருக்கு 200 ரூபாய் நஷ்டத்தில் முடிந்தது. "லாபம் நஷ்டம் மாறி மாறித்தான் வரும். நாளைக்கு லாபம் வரும் பாருங்க" என்றார் சுரேஷ்.

அடுத்த நாள் 100 ரூபாய் லாபம் வந்தது.

"நீங்க ரொம்ப பயந்து பயந்து பண்றீங்க. இந்த பிசினஸ்ல கொஞ்சம் அக்ரஸிவா பண்ணினால்தான் நல்ல லாபம் கிடைக்கும்" என்றார் சுரேஷ்.

அடுத்த நாள் பிரபாகரன் "அக்ரஸிவாக"" ஈடுபட்டதில் அவருக்கு 5000 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இது அவருக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்தது. 'இதோடு போதும், கணக்கை மூடி விட்டுப் பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்' என்று முதலில் தோன்றினாலும், பதட்டமடையக் கூடாது என்று நினைத்து அடுத்த நாளும் வணிகத்தைத் தொடர்ந்தார்.

அடுத்த நாள் 50 ரூபாய் லாபம் கிடைத்தபோது தனக்கு ஏற்பட்டது ஏமாற்றமா நம்பிக்கையா என்று அவருக்கே புரியவில்லை.

ஒரு மாத முடிவில் அவருடைய முலதனம் 30,000 ரூபாயாகக் குறைந்திருந்தது. 70,0000 ரூபாய் நஷ்டம் - ஒரு மாதத்தில்! தான் வேலை செய்தபோது இந்தத் தொகையைச் சம்பாதிக்கத் தான் எத்தனை மாதங்கள் உழைத்திருக்க வேண்டும் மனத்துக்குள் கணக்குப் போட்டுப் பார்த்தார்.

"நான் ஒண்ணு சொல்றேன். நீங்க கமாடிடீஸ் டிரேடிங் பண்ணினா நிறைய லாபம் கிடைக்கும். அதை ஒரு மாசம் கூட கேரி ஃபார்வர்ட் பண்ணலாம். இன்னிக்கு விலை இறங்கினா கூட ரெண்டு மூணு நாள் கழிச்சு விலை ஏறுகிறப்ப வித்துடலாம். ஆனா அதுக்கு அஞ்சு லட்சம் ரூபா முதலீடு பண்ணணும்" என்றார் சுரேஷ்.

ஏதோ ஒரு துணிவில் பிரபாகரன் ஐந்து லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். முதல் வணிகத்தில் அன்று விலை குறைந்தாலும் அதிகாரி சொன்னது போல் மூன்று நாட்கள் கழித்து விலை ஏறியபோது அதை விற்று நஷ்டத்தைத் தவிர்க்க முடிந்தது. 

ஆயினும் மீண்டும் விலை குறைந்து விடுமோ என்ற பயத்தில் நஷ்டம் இல்லாமல் இருந்தால் போதும் என்ற கவலையில் அவர் அதை சீக்கிரமே விற்றதால் அதில் லாபம் கிடைக்கவில்லை, நஷ்டத்தைத் தவிர்க்க மட்டுமே முடிந்தது.

அடுத்த வணிகத்தில் ஓரளவு லாபம் கிடைத்தது. அதற்கும் அடுத்த வணிகத்தில் விலை ஏறும் என்று காத்திருந்தபோது நாளுக்கு நாள் விலை இறங்க, இரண்டு லட்சம் ருபாய் நஷ்டத்தில் விற்க வேண்டி இருந்தது. 

இவ்வளவு நஷ்டம் வருமென்றால் இவ்வளவு லாபமும் வருமே என்று நினைத்து இன்னும் ஐந்து லட்சம் முதலீடு செய்தார் பிரபாகரன்.

மூன்று மாதங்கள் கழித்து மொத்தம் 9 லட்சம் ரூபாய் நஷ்டத்துடன் தன் பங்கு வர்த்தக முயற்சியை முடித்துக் கொண்டார் பிரபாகரன்.

அரசியல் இயல்
அதிகாரம் 47 
 தெரிந்து செயல்வகை  
குறள் 463
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்.

பொருள்:
கிடைக்கப் போகும் வருமானத்தைக் கருதி முதலை இழக்கக் காரணமாகும் செயலை அறிவுடையோர் செய்ய மாட்டார்கள். 
               குறள் 462               
அறத்துப்பால்                                                                              காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...