போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ் கூட்டத்தில், நிர்வாக இயக்குனர் பாபு, தங்கள் நிறுவனத்தின் தொழில் எதிரிகளிடமிருந்து தங்களுக்கு ஏற்பட்டு வரும் பிரச்னைகளையும், அவற்றைச் சமாளிக்கத் தான் எடுத்து வரும் நடவடிக்கைகளையும் விளக்கிப் பேசினார்.
"நம்மை அழிக்க அவங்க எவ்வளவோ முயற்சி செஞ்சாங்க. முதல்ல நம்ப ப்ராடக்ட் பத்திப் பல தவறான செய்திகளை வதந்திகளைப் பரப்பினாங்க. ஆனா அதெல்லாம் எடுபடல. நாம உண்மைகளை விளக்கி விளம்பரம் கொடுத்தப்பறம் நம்ம விற்பனை இன்னும் அதிகமாச்சு.
"அப்புறம் தொழிற்சங்கத் தலைவர்களைத் தூண்டி விட்டு நம்ப தொழிற்சாலையில வேலை நிறுத்தம் செய்ய வச்சாங்க. நாம வேலை நிறுத்தத்தைத் தூண்டி விட்ட தலைவர்களை வேலையை விட்டு நீக்கிட்டு தொழிலாளர்களோட சம்பளத்தை உயர்த்தினோம். நமக்கு விசுவாசமா இருந்தா பலன்கள் கிடைக்கும், போராட்டத்தில இறங்கினா வேலையே போயிடும்னு நம்ம தொழிலாளர்கள் புரிஞ்சுக்கிட்டாங்க. இனிமே அவங்க தூண்டுதல்களுக்கு பலியாக மாட்டாங்க."
"எக்ஸலன்ட் மிஸ்டர் பாபு! உங்களுக்கு எங்கள் முழு ஆதரவும் உண்டு!" என்று ஒரு மூத்த டைரக்டர் கூறியதை ஆமோதிக்கும் விதமாக மற்றவர்கள் கைதட்டினர்.
"ஆனா, அவங்க சும்மா இருக்க மாட்டாங்க. வேற ஏதாவது முயற்சி செய்வாங்க. அதனால, நாம தற்காப்பு முயற்சிகள்ள மட்டும் ஈடுபடாம, தாக்குதலிலேயும் ஈடுபடணும்னு நினைக்கிறேன்" என்றார் பாபு.
"என்ன செய்யலாம்னு இருக்கீங்க?"
"அவங்களோட ப்ராடக்ட் ஒண்ணை நாமும் தயாரிச்சு அவங்களுக்குக் கொஞ்சம் போட்டியை ஏற்படுத்தினா, அவங்க தங்களைப் பாதுகாத்துக்கறதில கவனம் செலுத்துவாங்க. நம்ப வம்புக்கு வர மாட்டாங்க."
"எந்த ப்ராடக்ட் தயாரிக்கலாம்னு சொல்றீங்க? அதுக்கான திட்டம் என்ன?" என்று வினவினார் ஒரு டைரக்டர்.
பாபு தன் திட்டத்தை விளக்கியதும், "சரி. அதுக்கு முதலீடு செய்யணுமே! அதுக்கு என்ன செய்யப் போறோம்?" என்றார் ஒருவர்.
"முதலீடு அதிகம் தேவைப்படாது. இந்த வருஷம் டிவிடெண்ட் கொடுக்காம அந்தப் பணத்தை முதலீடு செஞ்சா போதும்! விவரங்களை உங்க எல்லோருக்கும் சுருக்கமா ஒரு பக்கக் குறிப்பாக் கொடுத்திருக்கேன் பாருங்க."
அனைவரும் சில நிமிடங்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட குறிப்பைப் படித்தனர். பெரும்பாலானோர் ஆமோதிப்பது போல் தலையை ஆட்டினர்.
ஒருவர் மட்டும், "டிவிடெண்ட் இல்லேன்னு சொன்னா ஷேர் விலை இறங்குமே!" என்றார்.
"அது தற்காலிகமானதுதானே? இந்த வருஷம் டிவிடெண்ட் கொடுக்காம அந்தத் தொகையை கூடுதலா ஒரு ப்ராடக்ட் தயாரிப்பதற்கான முதலீட்டுக்காக பயன்படுத்தப் போறோம், இதனால அடுத்த வருஷம் லாபம் இன்னும் அதிகமாக் கிடைக்கும், அப்ப அதிகமான டிவிடெண்டும் கொடுக்க முடியும்னு ஒரு பிரஸ் ரிலீஸ் கொடுத்துடப் போறோம். அதனால தற்காலிகமா ஷேர் விலை கொஞ்சம் குறைஞ்சாலும் சீக்கிரமே அது சரியாயிடும்" என்றார் பாபு.
"டிவிடெண்டை ஸ்கிப் பண்றது எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்னு பாத்து செய்யுங்க" என்றார், சந்தேகம் எழுப்பிய உறுப்பினர்.
ஆயினும், போர்டு உறுப்பினர்கள் அந்த யோசனைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
ஒரு வாரம் கழித்து, பாபுவின் அறைக்கு வந்த கம்பெனி செகரெட்டரி, "சார்! அஞ்சு நாளா நம்ம ஷேர் விலை விழுந்துக்கிட்டே இருக்கு. நாம டிவிடெண்ட் ஸ்கிப் பண்ணினதைப் பத்தி மார்க்கெட்ல யாரோ தப்பான வதந்திகளைப் பரப்பிக்கிட்டிருக்காங்கன்னு நினைக்கறேன்" என்றார், படபடப்புடன்.
"கவலைப்படாதீங்க! இது எதிர்பார்த்ததுதான். ரெண்டு மூணு நாள்ள விலை ஏற ஆரம்பிச்சுடும்" என்றார் பாபு.
"இல்லை சார். வால்யூம் ரொம்ப அதிகமா இருக்கு. நாம டிவிடெண்ட் ஸ்கிப் பண்ணினதைப் பயன்படுத்தி நம்ம எதிரிகள்தான் நம்மைப் பத்தித் தப்பான வதந்திகளைப் பரப்பி பேனிக் செல்லிங்கை உருவாக்கி விலை குறையறப்ப அவங்க ஷேர்களை வாங்கிக்கிட்டிருக்காங்கன்னு செய்தி வருது. நம்மகிட்ட மெஜாரிட்டி ஹோல்டிங் இல்லாதப்ப அவங்க டேக் ஓவர் பண்ண முயற்சி செய்யறாங்கன்னு நிலைக்கிறேன்!" என்றார் கம்பெனி செகரெட்டரி, கவலையுடன்.
பாபுவின் முகத்தில் கலவரம் படர்ந்தது. போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ் உறுப்பினர் ஒருவர் பாதிப்புகளைச் சிந்தித்து முடிவெடுக்கும்படி எச்சரித்தது அவர் நினவுக்கு வந்தது.
அரசியல் இயல்
No comments:
Post a Comment