"காளிங்கராயரே! உங்களுக்கு முன்னால் சென்னியப்பர் தலைமை அமைச்சராக இருந்தபோது, அரசு நிர்வாகத்தில் நான் தலையிடாமல் ஒதுங்கியே இருந்தேன்.
"நாட்டின் முன்னேற்றத்துக்காகப் பல செயல்களைச் செய்து வருவதாக அவர் என்னிடம் சொல்லி வந்தார்.
"ஆனால் மக்கள் மிகவும் துயரத்திலும், அதிருப்தியிலும், கோபத்திலும் இருப்பதாக உள்நாட்டு ஒற்றர்களிடமிருந்து எனக்குச் செய்திகள் வந்ததால் அவரை நீக்கி விட்டு, உங்களைத் தலைமை அமைச்சராக நியமித்தேன்.
"கடந்த ஒரு மாதமாக நீங்கள் அரசு அதிகாரிகளிடமும், பல்வேறு வகை மக்களுடனும் பேசி வருகிறீர்கள். நீங்கள் கண்டறிந்தபடி, நிலைமை என்ன என்பதை விளக்குவீர்களா?" என்றான் அரசன்.
"பல்வேறு மக்களிடம் நான் பேசி அறிந்து கொண்டது மக்களுக்குத் தேவையான பல அடிப்படை விஷயங்களை அரசு, அதாவது அரசை நிர்வாகம் செய்த அமைச்சர், செய்யவில்லை என்பதுதான்" என்றார் தலைமை அமைச்சர் காளிங்கராயர்.
"எவற்றையெல்லாம் செய்யவில்லை?"
"கால்வாய்கள், குளங்கள் இரண்டு மூன்று ஆண்டுகளாகத் தூர் வாரப்படவில்லை. இதனால் விவசாய நிலங்களுக்குச் சரியான நீர்ப்பாசனம் கிடைக்கவில்லை.
"கோவில்கள், சத்திரங்கள் போன்றவற்றுக்கான மானியம் சரியாக வழங்கப்படவில்லை. அதனால் அவற்றின் மூலம் உணவு பெற்று வந்த ஏழைகள், வயோதிகர்கள், வழிப்போக்கர்கள் ஆகியோர் பசிக்கொடுமைக்கும் பெரும் துன்பத்துக்கும் ஆளானார்கள்.
"சமீபத்தில் ஏற்பட்ட தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போதுமான மருத்துவ வசதிகளோ, பிற உதவிகளோ வழங்கப்படவில்லை..."
"சிவ சிவா! இத்தனை விஷயங்கள் செய்யாமல் விடப்பட்டிருக்கின்றனவா? இவை என் கவனத்துக்கு வரும்படி பார்த்துக் கொள்ளாதது என் தவறுதான்."
"இன்னும்..."
"போதும் அமைச்சரே! சென்னியப்பர் செய்யத் தவறிய விஷயங்கள் இன்னும் பல இருக்கும் என்பது புரிகிறது. அவற்றை நான் கேட்க விரும்பவில்லை."
"இல்லை மன்னரே! செய்ய வேண்டிய பல விஷயங்களை அவர் செய்யவில்லை என்று குறிப்பிட்டேன். செய்யக் கூடாத சில விஷயங்களை அவர் செய்திருக்கிறார். அவற்றையும் நான் குறிப்பிட வேண்டும் அல்லவா?"
"செய்யக் கூடாத விஷயங்கள் என்றால்?"
"முதலில் குறிப்பிட வேண்டுமானால், அரசுப் பணிகளை ஒப்பந்ததாரர்களுக்குக் கொடுக்கும்போது, அவற்றைத் தம் உறவினர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் கொடுத்திருக்கிறார்.
"பலரிடம் கையூட்டுப் பெற்றுக் கொண்டு பணிகளைக் கொடுத்திருக்கிறார். இதனால் அரசு கஜானாவுக்கு ஏராளமான இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இவை தவிர, பொது மக்களுக்கு இன்னல் ஏற்படுத்தக் கூடிய பல செயல்களை அவர் செய்திருக்கிறார்.
"விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை அவர்களிடம் எப்போதும் அவற்றை வாங்கும் சிறு வியாபாரிகளிடம் விற்கக் கூடாது என்று சொல்லி, ஒருசில மொத்த வியாபாரிகளிடம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டிய நிலையை உருவாக்கி இருக்கிறார்.
"இதனால், சிறு வியாபாரிகள் பலர் தொழில் செய்ய முடியாமல் தங்கள் பிழைப்பை இழந்ததுடன், விவசாயிகளும் ஒரு சில மொத்த வியாபாரிகளின் கட்டுப்பாட்டில் சிக்கிக் கொண்டு அல்லல்படுகிறார்கள்.
"மொத்த வியாபாரிகள் விவசாயிகளிடம் விளைபொருட்களை மிகக் குறைந்த விலைக்கு வாங்கிப் பொது மக்களுக்கு அதிக லாபத்துக்கு விற்பதால், சாதாரண மக்களுக்கு உணவு என்பதே ஒரு சவாலான விஷயமாக ஆகி விட்டது..."
"போதும். ஒருபுறம் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமலும், மறுபுறம் செய்யக் கூடாதவற்றைச் செய்தும் நடைபெற்ற சென்னியப்பரின் நிர்வாகத்தின் கீழ் மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை நினைத்து என் உள்ளம் பதறுகிறது.
"அவரை நம்பிப் பொறுப்பை ஒப்படைத்து விட்டு இவற்றையெல்லாம் கவனிக்காமல் இருந்தது நான் செய்த மிகப் பெரிய தவறு.
"இவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டிய பொறுப்பையும் அதிகாரத்தையும் உங்களுக்கு வழங்குகிறேன். ஆனால் முன்பு போல் இல்லாமல், நீங்கள் செய்பவற்றையெல்லாம் நான் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கப் போகிறேன்!" என்றான் மன்னன்.
"நல்லது அரசே! அதைத்தான் நானும் விரும்புகிறேன்" என்றார் தலைமை அமைச்சர்.
No comments:
Post a Comment