பத்து வருடங்கள் வேலை பார்த்த பிறகும், சண்முகத்துக்கு அவன் வேலையில் அதிக முன்னேற்றம் ஏற்படவில்லை.
வருடா வருடம் கிடைக்கும் சிறிய அளவிலான சம்பள உயர்வு பண வீக்கத்துடன் போட்டி போட முடியாத அளவுக்குத்தான் இருந்தது.
அதனால் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பொருளாதார ரீதியில் அவன் இன்னும் சற்று நலிந்திருந்தான் என்பதுதான் உண்மை.
வேறு வேலைக்கான அவன் முயற்சிகளும் வெற்றி பெறவில்லை. அவன் படிப்புக்கும் அனுபவத்துக்கும் வேறு நல்ல வேலைகளுக்கான வாய்ப்புகள் அதிகம் இல்லை என்று சண்முகம் உணர்ந்து கொண்டான்.
அப்போதுதான் சண்முகத்துக்கு அந்த யோசனை தோன்றியது. 'சொந்தத் தொழில் செய்தால் என்ன?'
அந்த எண்ணம் வந்த பிறகு வெளி உலகத்தைக் கூர்ந்து பார்த்தபோது, அவன் ஒன்றை கவனித்து உணர்ந்து கொண்டான். எத்தனையோ பேர், அதிகப் படிப்போ,அனுபவமோ, ஏன் புத்திசாலித்தனமோ கூட இல்லாமலேயே, ஏதோ ஒரு தொழிலைச் செய்து கொண்டிருந்தார்கள் என்பதுதான் அது!
அவர்களில் பலருக்கு அலுவலகம் இல்லை, மேலதிகாரிகள் இல்லை, ஊழியர்களும் இல்லை (அதனால் மாதா மாதம் சம்பளம் கொடுக்க வேண்டிய பொருளாதாரச் சுமையும் இல்லை!)
அது போல் ஒரு தொழிலைத் தானும் செய்தால் என்ன?
சண்முகம் அவன் மனைவி சந்திராவிடம் தன் யோசனையைச் சொன்னபோது, "யோசனை பண்ணி முடிவெடுங்க. உங்களுக்கு என்ன தொழில் தெரியும்? முதல் வேண்டாமா? அனுபவம் வேண்டாமா? தொடர்புகள் வேண்டாமா?" என்று அவள் அவனிடம் இல்லாதவற்றைப் பட்டியலிட்டாள்.
சண்முகம் மௌனமாக இருந்தான். மனைவி சொன்னதைக் கேட்டு எரிச்சல் வந்தாலும், அவள் சொன்னதில் இருந்த உண்மை உறுத்தியது.
சில நாட்கள் கழித்து, சண்முகம், தன் மனைவியிடம், "நான் வேலையை விட்டுடப் போறேன். வேலையை விட்டாதான், அப்புறம் ஏதாவது தொழில் செஞ்சுதான் ஆகணுங்கற கட்டாயம் ஏற்பட்டு, ஏதாவது ஒரு தொழிலை ஆரம்பிப்பேன். இல்லேன்னா, இப்படியே யோசனை பண்ணிக்கிட்டே காலத்தை ஓட்டிக்கிட்டிருப்பேன்" என்றான்.
"என்னங்க நீங்க? என்ன செய்யணும்னு யோசனை பண்ணிட்டு அப்புறம் முடிவெடுப்பீங்களா, இல்ல, ஏதாவது செஞ்சுக்கலாம்னு முடிவை எடுத்துட்டு அப்புறம் யோசிப்பீங்களா?" என்றாள் சந்திரா, அதிர்ச்சியுடன்.
"இல்ல. நான் முடிவு பண்ணிட்டேன்" என்றான் சண்முகம், உறுதியாக.
"அப்படின்னா, எனக்காக ஒரு மாசம் உங்க முடிவைத் தள்ளிப் போடறீங்களா?"
"எதுக்கு? ஒரு மாசத்தில என்ன ஆயிடப் போகுது?"
"அதான் நானும் சொல்றேன். ஒரு மாசத்தில என்ன ஆயிடப் போகுது? எனக்காக உங்க முடிவைக் கொஞ்ச நாள் தள்ளிப் போடுங்களேன்" என்றாள் சந்திரா.
'தான் முடிவெடுப்பதைத் தள்ளிப் போட வைத்து அதற்குள் தன் மனதை மாற்றி விடலாம் என்று நினைக்கிறாள் போலிருக்கிறது' என்று நினைத்த சண்முகம், 'சரி. இப்ப என்ன? ஒரு மாசம் வெயிட் பண்ணுவமே! அவ சொன்னதைக் கேட்ட மாதிரியும் இருக்கும்!' என்று நினைத்து, "சரி" என்றான்.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஒரு நாள், சந்திரா, அவனிடம், "இப்ப நீங்க வேலையை விடறதுன்னா விடுங்க!" என்றாள்.
"ஏன், இப்ப என்ன ஆச்சு?"
"எனக்கு ஒரு வேலை கிடைச்சிருக்கு!"
"என்ன வேலை, எவ்வளவு சம்பளம்?"
சொன்னாள்.
"இவ்வளவு குறைஞ்ச சம்பளத்துக்கா?"
"என் தகுதிக்கு அவ்வளவுதான் கிடைக்கும். அதனாலதான் நான் இத்தனை நாளா வேலைக்குப் போறதைப் பத்தி யோசிக்கல. நீங்களும் என்னை வேலைக்கு முயற்சி பண்ணச் சொல்லிச் சொல்லல. ஆனா நீங்க யோசிக்காம இப்படி ஒரு அவசர முடிவை எடுத்தா? நாம ஒரு வேளை கஞ்சியாவது குடிக்க வேண்டாமா? அதனாலதான் உங்ககிட்ட ஒரு மாசம் அவகாசம் கேட்டுட்டு வேலைக்கு முயற்சி செஞ்சேன். இனிமே குழந்தைங்க பட்டினி கிடக்க வேண்டி இருக்குமோங்கற கவலை இல்லாம நான் இருக்கலாம் பாருங்க..."
பேசி முடிக்கு முன்பே, சந்திராவின் குரல் கம்மி அழுகை வெடித்தது.
"இல்லை சந்திரா. நீ இந்த வேலைக்குப் போக வேண்டாம். நான் அவசரப்பட்டு முடிவெடுக்க மாட்டேன்" என்று சொல்லி, மனைவியின் கைகளைப் பற்றினான் சண்முகம்.
அரசியல் இயல்
No comments:
Post a Comment