"ஊர் கூடித் தேர் இழுக்கறதுன்னு சொல்லுவாங்க. ஒரு கஷ்டமான காரியம்னாலும் பல பேர் சேர்ந்து செயல்பட்டா, அதைச் செஞ்சு முடிச்சுடலாம் இல்ல?" என்றான் தணிகை.
"அது சரி. எந்த அனுபவமும் இல்லாம நம்மால எப்படி ஒரு தொழிலை ஆரம்பிச்சு நடத்த முடியும்?" என்றான் வேலு.
"இங்க பாரு. நாம பத்து பேர் இருக்கோம். ஆளுக்குப் பத்தாயிரம் ரூபா போடறோம். ஒரு லட்ச ரூபாயில ஒரு தொழில் ஆரம்பிக்கறோம்."
"என்ன தொழில் ஆரம்பிக்கப் போறோம்? ஒரு லட்ச ரூபாய் முதலீட்டில எவ்வளவு லாபம் கிடைக்கும்? நம்ம பத்து பேருக்கும் போதுமான அளவுக்கு வருமானம் வருமா?" என்றான் வேலு.
"வேலு! நாம பத்து பேருமே படிப்பை முடிச்சு ஒரு வருஷத்துக்கு மேல ஆச்சு. நம்ப யாருக்குமே வேலை கிடைக்கல.
"நேத்து நம் ஊர்ல இருக்கற பெரிய சூப்பர் மார்க்கெட் முதலாளிகிட்ட பேசினேன். அவரு சொன்ன யோசனைதான் இது.
"அவரு மொத்த விலையில மளிகைப் பொருட்களை நமக்குக் கொடுப்பாரு. நம்ம நகரத்தைச் சுத்தி இருக்கற சின்ன ஊர்கள்ள உள்ள கடைகளுக்குப் போய், அந்தப் பொருட்களை நாம விக்கணும். குறைஞ்ச விலையில கிடைக்கறதால, அவங்க வாங்கிப்பாங்க.
"சூப்பர் மார்க்கெட்ல ஒரு லட்சம் ரூபா டெபாசிட் பண்ணினா, அவங்க பத்து லட்சம் ரூபா சரக்கை நமக்கு கடன்ல கொடுப்பாங்க. நாம விக்கற கடைகள்ளேந்து பணம் வாங்கினப்பறம், அவங்களுக்குக் கொடுத்தாப் போதும்.
" நாம ஒவ்வொத்தரும் சில ஊர்களை எடுத்துக்கிட்டு, டூ வீலர்ல சரக்கைக் கொண்டு போய் வித்துடலாம். கூடிய வரையில கேஷுக்கே விப்போம். ஒரு சில பேருக்குக் கடன்ல கொடுக்க வேண்டி இருக்கலாம்.
"ஒரு மாசத்துக்கு அம்பது லட்சம் ரூபா சுலபமா விற்பனை செய்யலாம். அஞ்சு சதவீதம் லாபம் வச்சாக் கூட ரெண்டரை லட்சம் ரூபா கிடைக்கும். ஒவ்வொத்தருக்கும் 25000 ருபா கிடைக்கும். பின்னால, நாம இன்னும் அதிகமாக் கூட சம்பாதிக்க முடியும். என்ன சொல்ற?" என்றான் தணிகை.
"முதல்ல, நாம எந்தெந்த ஊர்கள்ள வியாபாரம் செய்யப் போறோம், அங்கே எத்தனை கடைகள் இருக்கு, அவங்க இப்ப எங்கே என்ன விலைக்கு சரக்கு வாங்கறாங்க, நம்மகிட்ட வாங்குவாங்களா இது மாதிரி விவரங்களையெல்லாம் சேகரிக்க வேண்டாமா?" என்றான் வேலு.
"டேய், யார்டா இவன், நாம என்னவோ ஐந்தாண்டுத் திட்டம் தயாரிக்கிற மாதிரி கேள்வி கேட்டுக்கிட்டு? இவ்வளவு குறைஞ்ச முதலீட்டில ஒரு வியாபாரம் ஆரம்பிக்கிற வாய்ப்புக் கிடைக்கிறதே கஷ்டம். நாம இவ்வளவு பேர் இருக்கோம் இல்ல? எல்லாரும் சேர்ந்து கொஞ்சம் கஷ்டப்பட்டு வேலை செஞ்சா, இது நல்லா வரும்னுதான் நான் நினைக்கிறேன்" என்றான் குமரன்.
மற்றவர்கள் மௌனமாக இருந்தாலும், அவர்கள் இந்தத் திட்டதை ஏற்றுக் கொள்ளத் தாயாராக இருப்பது போல்தான் தோன்றியது.
"சாரிப்பா! நான் இதில சேரல. இதை நல்லா ஸ்ட்டி பண்ணாம இதில இறங்கறது சரியில்லேன்னுதான் எனக்குத் தோணுது. நான் வரேன். உங்க தொழில் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்!" என்று சொல்லி விட்டுக் கிளம்பினான் வேலு.
அவன் சென்றதும், மற்ற 9 பேரும் தலைக்கு 15,000 ரூபாய் முதலீடு செய்வது என்றும் சூப்பர் மார்க்கெட்டில் 1 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்வது என்றும், மீதமுள்ள 35000 ரூபாயை மற்ற துவக்க காலச் செலவுகளுக்குப் பயன்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
தொழில் துவங்கி ஆறு மாதங்கள் ஆகி விட்டன. ஒரு சில கடைக்காரர்கள் மட்டுமே இவர்களிடமிருந்து பொருட்களை வாங்கிக் கொள்ள முன் வந்தனர். மற்றவர்கள் வேறு சில மொத்த வியாபாரிகளிடமிருந்து தாங்கள் ஏற்கெனவே குறைந்த விலையில் பொருட்களை வாங்கி வருவதாகச் சொன்னார்கள்.
இவர்களிடம் பொருட்களை வாங்கியவர்கள் பணம் கொடுக்கப் பல நாட்கள் எடுத்துக் கொண்டனர். ஆனால், சூப்பர் மார்க்கெட் இவர்களிடமிருந்து பணம் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்தது.
9 பேரில் இருவர் வேலை கிடைத்துப் போய் விட்டனர். நான்கு பேர் ஆர்வம் இழந்து தொழிலில் ஈடுபடுவதை நிறுத்தி விட்டனர்.
பழனியும் இன்னும் இரண்டு பேரும் மட்டுமே தொழிலில் ஈடுபட்டு வந்தனர். மேற்கொண்டு சரக்கு வாங்க முடியாத நிலையில், கடைகளிலிருந்து பணமும் வசூலாகாத நிலையில் வியாபாரத்தை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று பழனிக்குப் புரிந்தது.
ஆனால் சூப்பர் மார்க்கெட்டுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை எப்படிக் கொடுப்பது என்று கவலைப்பட ஆரம்பித்தான் பழனி.
அரசியல் இயல்