Thursday, November 1, 2018

2. படையெடுப்பு

 "முல்லைவன நாட்டுக்குச் சென்ற நம் ஒற்றர்கள் என்ன செய்தி கொண்டு வந்திருக்கிறார்கள்?"என்றான் மன்னன் மணிவர்மன்.

"நல்ல செய்திதான் மன்னா. அவர்கள் படைபலம் நம்மில் பாதி அளவுக்கு கூட இருக்காது" என்றார் அமைச்சர்.

"அப்படியானால் போரில் அவர்களை வீழ்த்துவது சுலபம், இல்லையா?" என்றான் மகிழ்ச்சியுடன்.

"இருக்கலாம்" என்றார் அமைச்சர் தயக்கத்துடன்.

"என் தயங்குகிறீர்கள்? அண்டை நாட்டு அரசர் யாராவது அவர்கள் உதவிக்கு வருவார்களா?'

"அப்படியெல்லாம் இல்லை. தங்களைப் பகைத்துக் கொள்ளும் துணிவுள்ள அரசர்கள் யார் இருக்கிறார்கள்?"

"பின் ஏன் இந்தத் தயக்கம்?"

"முல்லைவன அரசன் சிங்கவர்மனுக்கு வேறு சில பலங்கள் இருப்பதாக நம் ஒற்றர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்."

"வேறு என்ன பலம்? புஜபலமா? நான் என்ன சிங்கவர்மனுடன் மல்யுத்தமா செய்யப் போகிறேன்?"

"இல்லை மன்னா. நான் சொல்வதைக் கொஞ்சம் பொறுமையுடன் கேட்டு, பிறகு ஒரு முடிவுக்கு வாருங்கள்."

"சொல்லுங்கள் அமைச்சரே! உங்கள் கருத்தை நான் எப்போதுமே மதிப்பவனாயிற்றே?"

"அவன் பலங்கள் என்று நான் குறிப்பிடுவது அவன் குணங்களை. முதலில் அவன் துணிவு. நம்மைச் சுற்றியுள்ள எல்லா மன்னர்களும் தங்களுக்கு அஞ்சி நம் நாட்டுக்கு கப்பம் கட்டி வருகிறார்கள். ஆனால் சிங்கவர்மன் மட்டும் நமக்கு அடிபணிய மறுத்து வருகிறான். படையெடுத்து வந்து அவன் நாட்டைப் பிடித்து விடுவோம் என்று நாம் எச்சரித்தபோதும் அவன் சற்றும் அஞ்சவில்லை.

"இரண்டாவது, அவனுடைய கொடைக்குணம். தான் அரண்மனையில் மிக எளிமையாக வாழ்ந்து கொண்டு, குடிமக்களுக்கு வாரி வழங்கி வருகிறான் அவன். தன் குடிமக்கள் யார் வீட்டிலாவது அடுப்பு எரியாவிட்டால் தன் அரண்மனையிலும் அடுப்பு எரியக்கூடாது என்று அவன் உத்தரவே போட்டிருக்கிறான். அதனால் அவன் குடிமக்கள் அவனை தெய்வமாக நினைத்து வணங்குகிறார்கள்.

"மூன்றாவது அவன் மிக அறிவுடையவன் என்பது பிரசித்தி பெற்ற விஷயம்."

"அந்த விஷயத்தில் நானும் அவனுக்குக் குறைந்தவன் இல்லை" என்று குறுக்கிட்டுச் சொன்னான் மணிவர்மன்.

"மன்னா.."

"ஆமாம். அமைச்சரே! எனக்கு அறிவு இருக்கிறதோ இல்லையோ, உங்களைப் போன்ற அறிவார்ந்த அமைச்சர்களின் ஆலோசனை எனக்கு அறிவாக அமைந்திருக்கிறதே" என்றான் மன்னன் சிரித்தபடி.

"மன்னரே! அடக்கத்தில் தங்களை மிஞ்சக்கூடிய மன்னர் இவ்வையகத்தில் இல்லை. பல நாடுகளைப் பணிய வைத்து சக்கரவர்த்தியாகத் திகழும் தாங்கள் என் போன்ற எளிய மனிதனின் பேச்சைக் காது கொடுத்துக் கேட்பதே என் பாக்கியம்" என்றார் அமைச்சர் உணர்ச்சிப் பெருக்குடன்.

"மேலே சொல்லுங்கள். இன்னும் எத்தனை குணங்கள் இருக்கின்றன சிங்கவர்மனுக்கு? அவை எப்படி அவனுக்குப் போரில் உதவப் போகின்றன?"

"நான்கு முக்கியமான குணங்களைத்தான் குறிப்பிட்ட விரும்பினேன். இந்த குணங்கள் இருப்பவரை வீழ்த்துவது கடினம் என்று அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள். தங்களிடமும் இந்த குணம் இருப்பதால்தான் தாங்கள் ஒரு சிறிய நாட்டுக்கு அரசராக இருந்தாலும் ஒரு பேரரசராக விளங்குகிறீர்கள்."

"என்னைப் புகழ்வது இருக்கட்டும். நான்காவது குணம் என்ன என்று இன்னும் நீங்கள் இன்னும் கூறவே இல்லையே"

"நான்காவது குணம் ஊக்கம் அல்லது விடாமுயற்சி. சிங்கவர்மன் சிறுவனாக இருந்தபோது அவன் தந்தை இறந்து விட்டார். அவனை நாடு கடத்தி விட்டு அவனுடைய உறவினர்கள் நாட்டை ஆண்டு கொண்டிருந்தனர். சிங்கவர்மன்  பெரியவன் ஆனதும் பலமுறை முயன்று தோற்றபின் அவர்களை வென்று ஆட்சியைப் பிடித்தான்."

"ஒரு மண்டபத்தை நான்கு வலிய தூண்கள் தாங்குவதுபோல் இந்த நான்கு குணங்களும் அவனைக் காக்கும். அதனால், சிங்கவர்மனின் படைபலம் குறைவாக இருந்தாலும்  அவனைத் தோற்கடிக்க முடியாது என்று சொல்ல வருகிறீர்கள். அப்படித்தானே?" என்றான் மணிவர்மன்.

"அரசே! தங்கள் அறிவுக்கூர்மை பற்றி நான் சொன்னது வெறும் புகழ்ச்சியல்ல என்பதை நீங்கள் நிரூபித்து விட்டீர்கள்."

"இல்லை அமைச்சரே. இனிமேல்தான் நிரூபிக்கப் போகிறேன். இத்தகைய அரிய குணங்கள் கொண்ட சிங்கவர்மன் ஆளும் நாட்டை நம் நட்பு நாடாக ஆக்கிக் கொள்ளப் போகிறேன்" என்றான் மணிவர்மன்.

அரசியல் இயல் 
அதிகாரம் 39
இறைமாட்சி (அரசனின் பெருமை)
குறள் 382:
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.

பொருள்:
துணிவு, கொடைக்குணம்,சிந்தித்துச் செயல்படுதல், விடாமுயற்சி ஆகிய நான்கு குணங்கள் ஒரு அரசனுக்கு இயல்பாக இருக்க வேண்டியவை.

No comments:

Post a Comment

14. ஒரு புதிய அனுபவம்!

தணிகாசலத்துக்கு அந்த மாநாட்டுக்கு அழைப்பு வந்தபோது அவனுக்கு அது பற்றிப் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை. ஒரு கிராமத்துப்பள்ளியில் சரித்திர ஆச...