Thursday, November 29, 2018

387. தலைவரிடமிருந்து அழைப்பு

குமரன் ஒரு அரசியல் கட்சியின் உள்ளூர்த் தலைவன்.

அன்று அவன் தன் கட்சி அலுவலகத்துக்குப் போனபோது, அங்கே நான்கு பேர் அவனுக்காகக் காத்திருந்தார்கள்.

"வணக்கம். வாங்க!" என்றான் குமரன்.

"ஏம்ப்பா, நீ செய்யறது நல்லா இருக்கா? ரெண்டு நாள் முன்னாடி உங்க கட்சித் தலைவர் மீட்டிங்குக்காகப் போட்ட மேடையை இன்னும் பிரிக்கல. ரோட்டில போறவங்களுக்கு எவ்வளவு இடைஞ்சலா இருக்கு தெரியுமா?" என்றார் ஒருவர்.

"மன்னிச்சுக்கங்க. முந்தாநாள் ராத்திரி மீட்டிங் நடந்தது. நேத்திக்கே மேடையைப் பிரிக்கச் சொன்னேன். தலைவர் நேத்து இங்க தங்கி இருந்ததால கட்சிக்காரங்கள்ளாம் அவர்  இருந்துட்டாங்க. இன்னிக்குக் காலையிலேயே மேடையைப் பிரிக்க ஆளை அனுப்பி இருக்கேன். வேலை நடந்துக்கிட்டிருக்கும். தாமதத்துக்கு மன்னிச்சுக்கங்க" என்று கை கூப்பினான் குமரன்.

"மேடை போடத் தெரியுது. பிரிக்கத் தெரியல!"என்று முணுமுணுத்தபடியே அந்த நான்கு பேரும் அங்கிருந்து சென்றனர்.

"இவங்களுக்கு நம்ம கட்சியைப் பிடிக்காது. மத்த கட்சிக்காரன்லாம் மேடை போட்டா, பத்து நாள் கழிச்சுத்தான் பிரிக்கறான். அவங்களை இவங்க எதுவும் கேக்க மாட்டாங்க. 'மெதுவாத்தான்யா பிரிப்போம். உன்னால ஆனதைப் பாத்துக்க'ன்னு சொல்றதை விட்டு இவர்களுக்கெல்லாம் நீ பொறுமையா பதில் சொல்லிக்கிட்டிருக்கே. மன்னிப்பு வேற கேக்கற. எனக்குப் பத்திக்கிட்டு வந்தது" என்றான் அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த சோமு

"கேட்டதுக்கு ஒழுங்கா பதில் சொல்ல வேண்டாமா? கொஞ்சம் பணிவாப் பேசறதில தப்பு இல்லையே?" என்றான் குமரன்.

"நேத்திக்கு ஒரு தமாஷ் நடந்தது. நீ இல்லையே!" என்றான் சோமு.

"என்ன தமாஷ்?"

"கொஞ்ச நாள் முன்ன வெள்ளம் வந்தப்ப, நீ உன் வீட்டிலேந்து சாப்பாடு செஞ்சு எடுத்துக்கிட்டு வந்து, அதைக் கட்சி அலுவலகத்தில வச்சு பாதிக்கப்பட்டவங்களுக்கு விநியோகம் பண்ணினதை, கட்சிப் பணத்தில அரிசி, காய்கறி எல்லாம் வாங்கி, உனக்குப் பேர் வரணுங்கறதுக்காக உன் வீட்டில சமையல் செஞ்சு நீ கொடுத்த மாதிரி காட்டிக்கிட்டதா தலைவர் கிட்ட யாரோ தப்பா சொல்லிட்டாங்க. தலைவர் எங்கிட்ட தனியா விசாரிச்சார். நான் சொன்னேன்: "ஐயா! அவன் தன் சொந்த பணத்திலதான் எல்லாம் செஞ்சான். கட்சிக்கு நல்ல பேர் கிடைக்கணுங்கறதுக்காக, அவன் வீட்டில செஞ்ச சாப்பாட்டை கட்சி ஆபீஸ்ல கொண்டு வச்சு விநியோகம் பண்ணினான். இந்த மாதிரி யாரும் செய்ய மாட்டாங்க ஐயா'ன்னு சொன்னேன். தலைவர் ஆச்சரியப்பட்டாரு."

"அப்படியா? ஆனா, அவருக்கு இன்னும் சந்தேகம் தீர்ந்த மாதிரி தெரியல. அடுத்த வாரம் என்னைத் தலைமை அலுவலகத்துக்கு வரச் சொல்லி இருக்காரு. எங்கிட்ட நேரா விசாரிக்க விரும்பறாரு போலருக்கு" என்றான் குமரன்.

"வாப்பா குமரன்! உன்னைப் பத்தி நிறையக் கேள்விப்பட்டேன்" என்றார் தலைவர்.

"ஐயா! அது உண்மை இல்லைங்க..." என்று ஆரம்பித்தான் குமரன்.

"எது உண்மை இல்லை? நீ எல்லார்கிட்டேயும் பொறுமையாப் பழகி ஊர்ல நல்ல பேரு வாங்கி இருக்கறதா கேள்விப்பட்டேன். அது உண்மையில்லையா? உன் செலவில ஊருக்கெல்லாம் உணவு கொடுத்து, அதைக் கட்சி செஞ்ச மாதிரி காட்டினதாக் கேள்விப்பட்டேன், அது உண்மை இல்லையா?" என்றார் தலைவர் சிரித்தபடி.

"ஐயா!" என்றான் குமரன்.

"உன்னை மாதிரி ஆள்தான் கட்சிக்கு வேணும். கட்சிக்கு மட்டும் இல்ல, நாட்டுக்கும் வேணும். வரப்போற  சட்டமன்றத் தேர்தல்ல உன் தொகுதியில நம் கட்சி வேட்பாளர் நீதான். இதைச் சொல்லத்தான் உன்னை வரச் சொன்னேன்" என்றார் தலைவர்.
பொருட்பால்
அரசியல் இயல் 
அதிகாரம் 39
இறைமாட்சி (அரசனின் பெருமை)
குறள் 387:
இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு.

பொருள்:
இன்சொல் பேசி, ஈகை செய்து வாழும் அரசனை, உலகம் புகழ்ந்து, அவன் விரும்பியவற்றை  நிறைவேற்றும்.

இந்தக் கதையின் காணொளி வடிவம் இதோ:


அறத்துப்பால்                                                                                       காமத்துப்பால் 

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...