Sunday, November 4, 2018

3. முன்னாள் முதல்வர்

"இவர் 'நாம்' பத்திரிகையிலேந்து வந்திருக்காரு" என்று என்னை அறிமுகப்படுத்தினார் ஆறுமுகத்தின் செயலர்.

"வாங்க" என்று என்னை வரவேற்ற ஆறுமுகம், "ஆறு மணிக்கே வந்துட்டீங்களே!" என்றார்.

"நீங்க சொன்னே நேரம்தானே!" என்றேன் நான்.

"என்னோட ஒரு நாள் முழுக்க இருந்து பாக்க வந்திருக்கீங்க. என் நாள் ஆறு மணிக்கே ஆரம்பிச்சுடும். அதனாலதான் ஆறு மணிக்கு வரச்  சொன்னேன். ஆனா உங்க பத்திரிகை வேலை ஒன்பது மணிக்கு மேலதானே?"

"இல்லை சார். இப்பல்லாம் எங்க வேலையும் 24 மணி நேரம்னு ஆயிடுச்சு" என்றேன் நான்.

"உங்க கட்டுரைக்கு 'ஆறுமுகம் - ஆறு முதல் ஆறு வரை'ன்னு தலைப்பு  வச்சுக்கலாம். ஆனா என் நாள் முடிய இரவு மணி பதினொண்ணு ஆயிடும்" என்றார் ஆறுமுகம்.

"உங்களுக்கு மறுப்பு இல்லேன்னா, நீங்க தூங்கப் போற வரை உங்களோட இருக்கேன்" என்றேன்.

"இருங்க. என் கனவிலே கூட இருந்து பாருங்க. அப்பத்தான் கனவில கூட நான் மக்களைப் பத்தித்தான் நினைச்சுக்கிட்டிருக்கேன்னு உங்களுக்குத் தெரியும்" என்றார் ஆறுமுகம் சிரித்தபடி.

ஆறுமுகம் எதிர்க்கட்சியின் தலைவர். அவர் ஆட்சியை இழந்து  ஒன்பது வருடங்கள் ஆகி விட்டன. ஆயினும் இந்த ஒன்பது ஆண்டுகளில் அவரைப் பற்றிய செய்தி இல்லாமல் ஒரு நாள் கூட பத்திரிகை வந்ததில்லை.

அடுத்த ஆண்டு நடக்கப்போகும் தேர்தலில் அவர் கட்சி பெரும் வெற்றி பெற்று அவர் மீண்டும் முதல்வர் ஆவார் என்ற எதிர்பார்ப்பு இருந்ததால் ஊடகங்கள் அவர் மீது இன்னும் அதிக வெளிச்சத்தைப் பாய்ச்சத் தொடங்கின.

எங்கள் பத்திரிகையில் 'முன்னாள் முதல்வருடன் ஒருநாள்' என்ற தலைப்பில் அவருடன் ஒருநாள் முழுவதும் இருந்து அவரைப் பற்றிய கட்டுரை வெளியிட முடிவு செய்தோம்.

ஆறுமுகம் தன் செயலரை அழைத்து  தன் அன்றைய பணிகளைப்  பற்றிக் கேட்டுக் கொண்டார். பிறகு அவரது பணிகள் சுறுசுறுப்பாகத் தொடங்கின. பிற்பகலில் ஒரு மணி நேரம் உறங்கியதைத் தவிர, தொடர்ந்து ஏதாவது செய்து கொண்டுதான் இருந்தார்.

அவர் சொன்னது போலவே அவர் பணிகள் முடிய இரவு மணி 11 ஆகி விட்டது.

நான் விடைபெறும்போது, "நீங்க என்ன எழுதப் போறீங்கன்னு தெரியாது. ஆனா, ஒருநாள் இருந்து பாத்ததில என்னைப்பத்தி என்ன நினைக்கறீங்கன்னு சுருக்கமா சொல்லுங்க. என் தூங்கும் நேரம் 10 நிமிஷம் தள்ளிப் போகும். பரவாயில்ல" என்றார் கைக்கடிகாரத்தைப் பார்த்தபடி.

"சார்! நீங்க முதல்வரா இருந்தப்ப உங்க செயல்பாடுகளை நான் கவனிச்சதில்ல. அப்ப நான் சின்னவன். ஆனா இன்னிக்கு நான் உங்களைப்  பாத்ததில, ஒரு நாட்டின் தலைவருக்குத் தேவையான ஒரு முக்கியமான குணம் உங்ககிட்ட இருக்கறதை கவனிச்சேன்."

"என்ன அது?"

"செய்ய வேண்டியவற்றை உடனே செய்யறது. இன்னிக்கு பல முறை உங்க நிகழ்ச்சி நிரலைத் தள்ளி வச்சுட்டு சில முக்கியமான வேலைகளை கவனிச்சீங்க. உதாரணமா, உங்களோட கூட்டணி வச்சுக்க விருப்பம் தெரிவிச்சு 'தமிழ் அரசு'க் கட்சி'யின்  தலைவர் விருப்பம் தெரிவிச்சதும் உடனே அவருக்கு போன் பண்ணி அவரை வரவழைச்சுப் பேசி அவரை கமிட் பண்ண வச்சீங்க. ஆளும் கட்சி கூட அவரைத் தங்கள் பக்கம் இழுக்க முயற்சி பண்றாங்கங்கற நிலையில உங்க உடனடி நடவடிக்கை உங்களுக்கு பலம் சேத்திருக்கு. இது மாதிரி இன்னும் சில விஷயங்கள்ள உடனே நீங்க செயல்பட்டதை நான் பாத்தேன். ஏன், இப்ப கூட, நான் எழுதப் போறதை என் கட்டுரை வந்தப்பறம் படிச்சுக்கலாம்னு நினைக்காம உங்க தூக்கத்தைத் தள்ளிப் போட்டுட்டு நான் என்ன நினைக்கிறேன்னு தெரிஞ்சுக்க விரும்பறீங்க. இதனால உங்களுக்கு எந்தப் பயனும் இருக்காதுன்னாலும், என் கருத்தைத் தெரிஞ்சுக்க விரும்பறீங்க."

"பயன் இருக்காதுன்னு சொல்லாதீங்க. நான் என்ன செய்யறேங்கறதை விட,  நான் செய்யறதை மத்தவங்க எப்படிப் பாக்கறாங்கங்கறதுதான் என் அரசியல் வெற்றியைத் தீர்மானிக்கும். உங்களை மாதிரி படிச்ச இளைஞர்களோட பார்வை எப்படின்னு தெரிஞ்சுக்கறதுல எனக்கு எப்பவுமே ஆர்வம் உண்டு."

"நீங்க இப்படிச் சொன்னதும் உங்களோட இன்னொரு குணத்தைக்  குறிப்பிடணும்னு  நினைக்கறேன். விஷயங்களைத் தெரிஞ்சுக்கற ஆர்வம். கல்லூரியில படிக்காட்டாலும் பொருளாதாரம், வெளியுறவுக் கொள்கை மாதிரி பல விஷயங்களைப் பத்தி நீங்க நுணுக்கமா கருத்து சொல்றதை நான் பல தடவை நான் கவனிச்சிருக்கேன். இன்னிக்கு ஒத்தர் வந்து  பொருளாதாரம், தொழில்நுட்பம், வெளிநாட்டு அரசியல் மாதிரி விஷயங்களைப் பத்தி ஒரு மணி நேரம்  உங்களுக்கு பிரீஃ பண்ணினாரு. நீங்க அவர்கிட்ட பல நுணுக்கமான கேள்விகளைக் கேட்டு தெளிவு படுத்திக்கிட்டீங்க."

"ஆமாம். வாரம் ஒருமுறை அவர் வருவார். அவர் நிறையப் படிக்கிறவர். பல வருஷமா நான் அவர் கிட்ட இந்த டியூஷன் எடுத்துக்கறேன்" என்று சிரித்தார்  ஆறுமுகம்.

"இன்னொரு விஷயம் நான் சொல்லியே ஆகணும். உங்க துணிவு பத்தி எல்லாருக்கும் தெரியும். இன்னிக்கு அதை நான் பாத்தேன். பிரதமர் சென்னைக்கு வரச்சே உங்க கட்சி கறுப்புக் கொடி காட்டும்னு அறிவிச்சிருந்தீங்க. அப்படிக் காட்டறவங்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்வோம்னு இன்னிக்கு முதல்வர் சொன்னாரு. அவர் அறிக்கை வந்து அஞ்சு நிமிஷத்துக்கெல்லாம் நீங்களே கறுப்புக் கொடிப் போராட்டத்துக்குத் தலைமை ஏற்கப் போவதா அறிவிச்சுட்டீங்க.  உங்க துணிவு உங்க கட்சித் தொண்டர்களுக்கு உத்வேகம் கொடுக்கும்."

"ரொம்ப நன்றி நண்பரே. உங்க கட்டுரையில என்னைப் பத்தின நெகட்டிவ் விஷயங்களும் வரும்னு நினைக்கறேன். அதை கட்டுரை வரும்போது படிச்சுக்கறேன்! காலம் தாழ்த்தாம செயல்பட வேண்டியதைப் பத்தி நீங்க சொன்னீங்க. என் தூக்கத்தையும் இன்னும் காலம் தாழ்த்தாம செய்ய விரும்பறேன். போயிட்டு வாங்க. மறுபடி சந்திப்போம். வாழ்த்துக்கள்" என்று எனக்கு விடை கொடுத்தார் ஆறுமுகம்.

அரசியல் இயல் 
அதிகாரம் 39
இறைமாட்சி (அரசனின் பெருமை)
குறள் 383:
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு

பொருள்:
காலம் தாழ்த்தாமை, கல்வியறிவு, துணிவு இந்த மூன்று குணங்களும் ஒரு நாட்டை ஆள்பவருக்கு எப்போதும் இருக்க வேண்டிய குணங்கள்.

No comments:

Post a Comment

14. ஒரு புதிய அனுபவம்!

தணிகாசலத்துக்கு அந்த மாநாட்டுக்கு அழைப்பு வந்தபோது அவனுக்கு அது பற்றிப் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை. ஒரு கிராமத்துப்பள்ளியில் சரித்திர ஆச...