"வாங்கற சம்பளத்தில பாதியை, இது மாதிரி வேண்டாத விஷயங்களுக்கே செலவழிக்கறீங்க!" என்றாள் பார்க்கவி.
"எது வேண்டாத செலவு? கொசுவிரட்டியை ஆன் பண்ணி வைக்கறதா?" என்றான் மனோகர்.
"கொசுவிரட்டி மட்டும் இருந்தா பரவாயில்ல. ஏற்கெனவே, அறை ஜன்னலையெல்லாம் வலை போட்டு மூடி, காத்து வர விடாம பண்ணி இருக்கீங்க. கொசுவலைக்குள்ளதான் படுத்துத் தூங்கறீங்க. உடம்பு முழுக்க கிரீமை வேற தடவிக்கிட்டுத் தூங்கறீங்க. கொசுவுக்கு இவ்வளவு பயப்படணுமா என்ன?" என்ற பார்க்கவி, 'உங்களுக்குக் கொசுகிட்ட மட்டுமா பயம்? தெனாலி சினிமா நாயகன் மாதிரி, எல்லாத்துக்கும்தான் பயம்!' என்று மனத்துக்குள் நினைத்துக் கொண்டாள்.
"என்ன செய்யறது? இவ்வளவு செஞ்சும், ஒண்ணு ரெண்டு கொசு கடிக்குது. இனிமே, கொசுவத்திச் சுருளும் ஏத்தி வைக்கலாமான்னு பாக்கறேன்."
"பேசாம, முனிவர்கள் மாதிரி, நாலு பக்கமும் நெருப்பு ஏத்தி வச்சுட்டு, நடுவில தூங்குங்க! வீடு பத்தி எரிஞ்சாலும் பரவாயில்ல. கொசு கடிக்காது!" என்றாள் பார்க்கவி, எரிச்சலுடன்.
"நீ நெருப்புன்னு சொன்னதும்தான், ஞாபகம் வருது. ஒரு ஃபயர் எக்ஸ்டிங்விஷர் வாங்கி இருக்கேன். நாளைக்கு வரும்!"
"இந்த சினிமா தியேட்டர்ல எல்லாம் வச்சிருப்பாங்களே, அது மாதிரியா?"
"ஆமாம். சின்னதா வீடுகளுக்குன்னு தயாரிக்கறாங்க."
"ஏன் தயாரிக்க மாட்டாங்க? உங்களை மாதிரி பயந்து சாகறவங்க இருக்கறப்ப, அவங்களுக்கு வியாபாரம் பிரமாதமா நடக்குமே! நீங்க வாங்கற சம்பளத்தையெல்லாம், இது மாதிரி பாதுகாப்புக்காகவே செலவழிச்சுக்கிட்டிருக்கீங்க. உங்க அண்ணனைப் பாருங்க. வாழ்க்கையில எவ்வளவு மேல போயிட்டாருன்னு! இன்னொரு வீடு கட்டிட்டாரு. அடுத்த வாரம் கிரகப் பிரவேசம்" என்றாள் பார்க்கவி, பெருமூச்சுடன்.
மனோகரின் அண்ணன் தயாநிதியின் கிரகப் பிரவேசத்துக்குப் போய்விட்டு வந்ததும், பார்க்கவி மனோகரிடம் சொன்னாள் "உங்க அண்ணன் நல்ல வசதியா இருக்காரு, அதனால, அண்ணனும் அண்ணியும் சந்தோஷமா இருப்பாங்கன்னு நினைச்சேன். அப்படி இல்ல போலருக்கு!" என்றாள்.
"ஆமாம், தயா கொஞ்சம் டல்லாத்தான் இருந்தான். கிரகப் பிரவேசத்துக்கு ரொம்ப பேர் வரல. சாப்பாடெல்லாம் நிறைய மீந்து போச்சுன்னு சொல்லி வருத்தப்பட்டான்."
"எப்படி வருவாங்க? உதவி செஞ்சவங்களை அடியோட மறந்துட்டு, தன் பெருமையைக் காட்டிக்க, இது மாதிரி விசேஷங்களுக்கு மட்டும் அவங்களைக் கூப்பிட்டா, அவங்க வருவாங்களா?"
"அப்படியா? உனக்கு யார் சொன்னது?"
"உங்க அண்ணியே இதைச் சொல்லி வருத்தப்பட்டாங்க. உங்க அண்ணனுக்கு எத்தனையோ பேர் உதவி செஞ்சுதான், அவர் இந்த அளவுக்கு முன்னேறி இருக்காராம். ஆனா, அவங்க கிட்டல்லாம் ஒரு மரியாதைக்குக் கூட அவர் தொடர்பு வச்சுக்கறது இல்லையாம். உங்க அண்ணி யாரையாவது குறிப்பிட்டு சொன்னாக் கூட, 'யார் அது? ஓ, அவரா? அவரு எப்பவோ ஒரு உதவி செஞ்சாரு. அதைக் காலம் முழுக்க நினைவு வச்சுக்கிட்டிருக்கணுமா என்ன? நீ சொன்னப்பறம்தான், அவர் ஞாபகமே எனக்கு வருது' ன்னு பதில் சொல்வாராம். அவரோட இந்த குணத்தால, அவங்களுக்கு யாருமே நெருக்கமா இல்லாம போய், வாழ்க்கையே வெறுமையா இருக்குன்னு அவங்க சொல்லி வருத்தப்பட்டாங்க... ஆமாம் நீங்க எங்க போறீங்க?"
"மணி அஞ்சாச்சே! எல்லா ஜன்னலையும் சாத்தணும். இல்லாட்டா, கொசு உள்ளே வந்துடும்!" என்று விரைந்தான் மனோகர்.
குறள் 534:
அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு.