Wednesday, December 8, 2021

535. கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம்

"ரசாயனத் தொழிற்சாலைக்குக் கழிவுக் கட்டுப்பாடு முக்கியம். கழிவுப் புகை, கழிவு நீர் ரெண்டுமே பெரிய பிரச்னையா இருக்கும். உங்க தொழிற்சாலையிலே புகைப் பிரச்னை இல்லை. ஆனா கழிவு நீர் பிரச்னையா இருக்கும். அதனால முழு அளவில கழிவு நீர் சுத்திகரிப்பு பிளான்ட் நிறுவ வேண்டியது முக்கியம்" என்றார் தொழில் ஆலோசகர்.

"அதற்கு எவ்வளவு முதலீடு செய்யணும்?" என்றான் தொழிற்சாலை அதிபரான உதயகுமார்.

ஆலோசகர் கூறிய மதிப்பீட்டுத் தொகையைக் கேட்டதும், "அவ்வளவு பெரிய தொகை முதலீடு செய்யணுமா? தொழிற்சாலைக்கான முதலீடோட, வருமானம் கொடுக்காத இந்த முதலீடு வேறயா? வேற வழி இருக்கா?" என்றான்.

ஆலோசகர் சற்றுத் தயங்கி விட்டு, "குறைஞ்ச முதலீட்டில கழிவு நீரை சுத்தம் செய்யலாம். ஆனா அது நீண்ட காலம் சரியா செயல்படாது. ரெண்டு மூணு வருஷத்தில அதோடசெயல்திறன் குறைஞ்சுடும். அப்புறம் நீங்க வெளியேற்றுகிற கழிவு நீரோட மாசுத்தன்மை கொஞ்சம் கொஞ்சமா அதிகரிக்கும். அதனால ரெண்டு வருஷம் கழிச்சு நீங்க இந்த கழிவு நீர் சுத்தகரிப்பு பிளான்ட்டை அப்கிரேட் பண்ண வேண்டி இருக்கும். ஆரம்பத்திலேயே நான் சொன்ன மாதிரி கொஞ்சம் பெரிய முதலீட்டில பிளான்ட்டை போட்டுட்டா அது நீண்ட காலத்துக்குப் பயனுள்ளதா இருக்கும்" என்றார்.

"வேண்டாம் சார். இப்ப பெரிய தொகையை முதலீடு செஞ்சு அப்படி ஒரு பிளான்ட்டைஅமைக்க விரும்பல. நீங்க சொன்ன மாற்று வழிப்படி குறைஞ்ச முதலீட்டில ஒரு பிளான்ட்டைப் போட்டுக்கலாம். ரெண்டு வருஷம் கழிச்சு அப்கிரேட் பண்ணிக்கலாம்" என்றான் உதயகுமார்.

திவுத் தபாலில் வந்திருந்த அந்தக் கடிதத்தைப் பிரித்துப் படித்தான் உதயகுமார்.

அவனுடைய தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் அனுமதிக்கப்பட்டுள்ள அளவுக்கு அதிகமாக இருப்பதால் அவன் தொழிற்சாலையை அந்தக் கடிதம் கிடைத்த பதினைந்து நாட்களுக்குள் மூட வேண்டும் என்று அரசாங்கத்தின் மாசுக்கட்டுப்பாட்டு நிறுவனத்திலிருந்து கடிதம் வந்திருந்தது.

ஆலோசகர் கூறியபடி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்தாமல் பல மாதங்களாக அசட்டையாக இருந்து விட்ட தன் அலட்சியத்தை நினைத்துத் தன்னையே நொந்து கொண்டான் உதயகுமார்.

பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 54
 பொச்சாவாமை (அலட்சியத்தால் ஏற்படும் மறதி)

குறள் 535:
முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னூறு இரங்கி விடும்.

பொருள்:
வரும் இடையூறுகளை முன்னே அறிந்து காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வரும்போது தன் பிழையை நினைத்து வருந்துவான்.
 அறத்துப்பால்                                                                              காமத்துப்பால் 

2 comments:

  1. வரும் இடையூறுகளை முன்னே அறிந்து காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வரும்போது தன் பிழையை நினைத்து வருந்துவான்...
    பாதுகாப்பில் சமரசம் கூடாது என்பதனை உணர்த்தும் அருமையான சிறுகதை...
    https://www.scientificjudgment.com

    ReplyDelete

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...