"அரசே! வருண தேசத்து அரசரிடமிருந்து ஓலை வந்திருக்கிறது" என்றார் அமைச்சர்.
"என்ன? நம் நாட்டின் மீது படை எடுக்கப் போகிறானாமா?" என்றான் அரசன் மகிழ்வாணன்.
"இல்லை மன்னா! நம் நட்பை நாடித்தான் ஓலை அனுப்பி இருக்கிறார் அசோகவர்மர். கடந்த காலத்தில் நம்முடன் நட்பாக இருந்தது போல், மீண்டும் இருக்க விரும்புகிறாராம். இடையில், நம்மை எதிர்த்துச் செயல்பட்டதற்காக வருத்தம் தெரிவித்திருக்கிறார்."
"நம்மிடம் நட்புடன் இருந்தவர்கள், காரணமில்லாமல் நம்மிடம் பகை பாராட்டும்போது, நமக்கு ஏற்படும் வலி மிகக் கொடியது. அசோகவர்மரால் அந்த வலியை நான் அனுபவித்தேன். இப்போது அவர் மனம் மாறி இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது" என்றான் மகிழ்வாணன்.
முதலில் அசோகவர்மன், அவன் இவன் என்று மரியாதையற்ற விளிப்புகளைப் பயன்படுத்திய அரசர், இப்போது அவர் இவர் என்று மரியாதையாகக் குறிப்பிட்டதை அமைச்சர் கவனித்தார்.
"அப்படியானால்...?" என்றார் அமைச்சர்.
"வருண நாட்டை எப்போதுமே நாம் நட்பு நாடாகத்தான் கருதி வந்திருக்கிறோம் என்றும், அசோகவர்மரின் மனமாற்றத்தை நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் என்றும் பதில் ஓலை அனுப்பி விடுங்கள்" என்றான் அரசன்.
சில நாட்களுக்குப் பிறகு, அரசனிடம் வந்த அமைச்சர், "மன்னா! தவறாக நினைக்க வேண்டாம். அசோகவர்மரின் மனமாற்றத்துக்கான காரணத்தைக் கண்டறியாமல், அவருடைய நட்பை நாம் ஏற்றுக் கொண்டு விட்டோமோ என்ற ஐயம் எனக்கு உண்டு. ஆனால், இப்போது அவர் நாட்டுக்குப் படைகளை அனுப்ப முடிவு செய்திருக்கிறீர்களே, இது முரணாக இல்லையா? இது அசோகவர்மரை நம் மீது மீண்டும் பகை கொள்ள வைக்குமே!" என்றார் அமைச்சர்.
"அமைச்சரே! நம்முடன் நட்பாக இருந்த அசோகவர்மர், நமக்கு எதிராகத் திரும்பியதற்குக் காரணம், நம் இருவருக்கும் அண்டைநாடாக இருக்கும் சென்னி நாடுதான் என்பதைத் தாங்கள் அறிவீர்கள். நரிக்குணம் கொண்ட சென்னி நாட்டு மன்னன் சூதவர்மன்தான், அசோகவர்மரின் மனதில் நம்மைப் பற்றிய தவறான அச்சங்களை விதைத்து, அவரை நமக்கு எதிராகச் செயல்பட வைத்தான் என்பதையும் நாம் அறிவோம்.
"அசோகவர்மர் நீட்டிய நட்புக்கரத்தை நான் நல்லெண்ண அடிப்படையில் உடனே ஏற்றுக் கொண்டாலும், அவர் மனமாற்றத்துக்குக் காரணத்தை அறியுமாறு, நம் ஒற்றர் படைத்தலைவரிடம் கூறினேன்.
"நம்மிடமிருந்து அசோகவர்மரைப் பிரித்தபின் அவருடைய வருண நாட்டைக் கபளீகரம் செய்ய சென்னி நாட்டு மன்னன் சூதவர்மன் திட்டமிட்டிருப்பதை அறிந்துதான் அசோகவர்மர் தான் செய்த தவறை உணர்ந்து நம்மிடம் திரும்பி வந்திருக்கிறார் என்ற உண்மையை ஒற்றர்கள் மூலம் அறிந்து என்னிடம் தெரிவித்தார் ஒற்றர்படைத் தலைவர்.
"நம்முடன் நட்பாக இருந்தால், சென்னி நாடு அவர்கள் மீது படையெடுத்தால், நாம் அவர்களுக்கு உதவுவோம் என்பதுதான் அசோகவர்மரின் எதிர்பார்ப்பு. எனவே, அவருடைய எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதத்தில்தான், வருண நாட்டுக்கு நம் படைகளை அனுப்பி இருக்கிறேன்."
பேச்சை நிறுத்திய அரசன், அமைச்சரின் முகத்திலிருந்த குழப்பத்தைப் பார்த்து, "நம் படைகள் வருண நாட்டுக்குச் சென்றிருப்பது உண்மைதான். ஆனால், அவை வருண நாட்டின் மீது படையெடுத்துச் செல்லவில்லை. வருண நாட்டுக்கு உதவத்தான் சென்றிருக்கின்றன. வருண நாட்டுக்குள் சென்னி நாட்டின் எல்லைப்பகுதிக்கு அருகில்தான் அவை நிறுத்தப்பட்டிருக்கின்றன. இது பற்றி அசோகவர்மருக்கு முன்பே தகவல் அனுப்பி விட்டேன்.
"எல்லைப் பகுதியில் நம் படைகள் இருப்பதால், சென்னி நாட்டு மன்னன் சூதவர்மன் வருண நாட்டின் மீது படையெடுக்கத் துணிய மாட்டான். அசோகவர்மர் எதற்காக நம்மிடம் திரும்பி வந்தாரோ, அந்த நோக்கத்தை நாம் நிறைவேற்றிக் கொடுத்து விட்டதால், அவர் இனி எப்போதுமே நம்மிடம் நட்பாக இருப்பார்" என்றான் அரசன், சிரித்துக் கொண்டே.
குறள் 530:
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந்து எண்ணிக் கொளல்.
No comments:
Post a Comment