
"முனிவரே! வேள்விகள் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. என் குருவின் யோசனைப்படிதான் நான் இதைச் செய்கிறேன். இந்த வேள்வியை நடத்திக் கொடுக்கத் தங்களை அணுக வேண்டும் என்று கூறியவரும் அவர்தான்" என்றான் மன்னன்.
"உன் வெளிப்படைத் தன்மையைப் பாராட்டுகிறேன். உன் வேள்வியை நானே நடத்தி வைக்கிறேன். இந்த வேள்வி நிச்சயம் உன் நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும். அதனால் உனக்கும் நன்மை விளையும்."
"முனிவரே! எனக்கு ஒரு ஐயம். நான் முன்பே சொன்னபடி எனக்கு வேள்விகள் பற்றி எதுவும் தெரியாது. வேள்வி செய்வதால் எப்படி நன்மை ஏற்படும்? என் கேள்வி தவறாக இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்."
"உன் கேள்வியில் தவறு எதுவும் இல்லை. வேள்வி செய்யுமுன் அது பற்றி அறிந்து கொள்வது நல்லது. வேள்வி என்பது வானுலகில் உள்ள தேவர்களை மகிழ்விப்பதற்காகச் செய்யப்படுவது.
"தேவர்களிடம் ஒரு குறிப்பிட்ட பலனை வேண்டி நாம் செய்வது வேள்வி. வேள்வியில் உணவுகள் உட்படப் பல பொருட்களை நாம் தேவர்களுக்கு வழங்குகிறோம். அவற்றை நாம் வேள்வித் தீயில் சேர்க்கும்போது அக்னி பகவான் அவற்றை எடுத்துச் சென்று தேவர்களிடம் கொண்டு சேர்ப்பார் என்பது நம்பிக்கை.
"வேள்வியில் நாம் வழங்கும் பொருட்களை அவி என்று கூறுவர். வடமொழியில் ஹவிஷ் என்று சொல்வார்கள். நாம் அளிக்கும் அவியால் மகிழ்ந்து தேவர்கள் நாம் எதை வேண்டி வேள்வி செய்கிறோமோ அதை நமக்கு அளிப்பார்கள்" என்று விளக்கினார் கௌதம முனிவர்.
வேள்வி சிறப்பாக நடந்து முடிந்தது.
"மன்னா! வேள்வி நிறைவடைந்து விட்டது. நீ அளித்த அவி தேவர்களைச் சென்றடைந்திருக்கும். இப்போது இங்கே கூடியிருக்கும் வேத விற்பன்னர்கள், பண்டிதர்கள், அறிஞர்கள் ஆகியோருக்கு நீ பரிசுகள் வழங்க வேண்டும்" என்றார் கௌதமர்.
"தாங்கள் கூறியபடி பொற்காசுகள், பட்டாடைகள் ஆகியவற்றைப் பரிசளிப்பதற்காகத் தயாராக வைத்திருக்கிறேன். முதலில் தங்களுக்குப் பரிசளித்து கௌரவிக்க விரும்புகிறேன்" என்றான் மன்னன்.
"இல்லை. நான் இந்த வேள்வியை நடத்திக் கொடுத்ததால் நானும் உன்னைத் சேர்ந்தவன். எனவே இந்தப் பரிசுகளை நான் பெறக் கூடாது. இங்கே குழுமி இருக்கும் மற்ற முனிவர்கள், விற்பன்னர்களுக்குக் கொடு."
"சரி, முனிவரே. முதலில் யாருக்குக் கொடுப்பது என்று தெரிவித்தீர்களானால்..."
"கொஞ்சம் இரு" என்று சுற்றுமுற்றும் பார்த்த கௌதமர், பார்வையாளர்களின் வரிசையில் இருந்த சாதாரண மனிதர் போல் தோற்றமளித்த ஒருவரை அழைத்தார்.
அந்த மனிதர் எதுவும் புரியாமல் தயக்கத்துடன் அருகில் வர, "மன்னா! இவரே முதலில் பரிசு பெறத் தகுதி உள்ளவர்" என்றார் கௌதமர்.
அரசன் சற்றுத் தயங்கி விட்டு, அவருக்குப் பரிசுகளை வழங்க, அவரும் குழப்பத்துடன் அவற்றை வாங்கிக் கொண்டு முனிவரையும், அரசனையும் வணங்கி விட்டுச் சென்றார்.
முனிவரின் சீடர்களும், மற்ற அறிஞர்களும் குழப்பத்துடனும், ஏமாற்றத்துடனும் முனிவரைப் பார்த்தனர்.
"ஒரு சாதாரண மனிதக்கு முதல் மரியாதை கொடுக்க வேண்டும் என்று நான் சொன்னது உங்களுக்கெல்லாம் வியப்பாக இருக்கலாம். நீங்கள் எல்லாம் கல்வியில் தேர்ந்த அறிஞர்கள். ஆனால் சாதாரண மனிதராகத் தோன்றும் அவர் கேள்வியில் தேர்ந்தவர்.
"ஆமாம். கடந்த பல வருடங்களாக நான் உபதேசம் செய்யும் இடங்களுக்கெல்லாம் அவர் வந்து அமர்ந்திருப்பதை நான் கவனித்திருக்கிறேன். சமீபத்தில் அவரை அழைத்து நான் உரையாடினேன். என்னைத் தவிர இன்னும் பல முனிவர்கள், அறிஞர்களின் உரைகளை அவர் பல ஆண்டுகளாகக் கேட்டு வருகிறார் என்று தெரிந்து கொண்டேன்.
"அவரிடம் பேசியதில் அவர் செய்து வரும் கேள்வி என்ற வேள்வியின் காரணமாக அவரிடம் அபரிமிதமான ஞானம் இருப்பதை அறிந்து கொண்டேன். இத்தகைய கேள்வி ஞானத்தை அடைந்துள்ள அவர் இந்த வேள்வியின் அவியைப் பெறும் தேவர்களுக்கு ஒப்பானவர்.
"எனவே இந்த வேள்வியில் முதல் மரியாதை அவருக்குத்தான் செய்யப்பட வேண்டும் என்று முன்பே தீர்மானித்து அவரை இந்த வேள்விக்கு வரச் சொன்னேன். கேள்வியறிவின் மேன்மையை நீங்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இதைச் சொல்கிறேன்" என்றார் கௌதம் முனிவர்.
பொருட்பால்
அரசியல் இயல்
அதிகாரம் 42
கேள்வி
குறள் 413:செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து.
பொருள்:
செவி உணவு என்னும் கேள்வி ஞானம் உள்ளவர்கள் இந்த உலகத்தில் வாழ்பவர்கள் என்றாலும், யாகங்களில் அளிக்கப்படும் அவியை உண்ணும் தேவர்களுக்கு ஒப்பானவர்கள்.