Saturday, July 4, 2020

414. விட்டதும் பெற்றதும்

அந்த கிராமத்துப் பள்ளிக்குத் தலைமை ஆசிரியராக நான் மாற்றப்பட்டு அங்கே சென்றபோது எனக்கு அறிமுகம் ஆனவர்தான் சௌரிராஜன். 

சௌரிராஜனின் அப்பா அந்த ஊர் முன்சீஃபாக இருந்தவர். ஆனால் அவர் காலத்திலேயே முன்சீஃப் பதவிகள் ஒழிக்கப்பட்டு விட்டன. 

ஆயினும் அவர் குடும்பத்துக்கு ஊரில் ஒரு மரியாதை இருந்தது, ஊரில் அதிக நிலபுலன் உள்ள வசதி படைத்த குடும்பம் என்பதற்கும் மேல், மற்றவர்களுக்கு உதவும் குணம் அவர்கள் குடுமபத்துக்கு ஊரில் ஒரு நற்பெயரை ஈட்டிக் கொடுத்திருந்தது. 

பள்ளியில் பொறுப்பு ஏற்றுக் கொண்ட ஓரிரு நாட்கள் கழித்து  மரியாதை நிமித்தமாக சௌரிராஜனின் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்தேன்.

முதல் சந்திப்பிலேயே எங்கள் இருவருக்குள்ளும் ஒரு நெருக்கம் ஏற்பட்டு விட்டது. 

அதன் பிறகு நான் அவர் வீட்டுக்குச் செல்வதும் அவர் என் வீட்டுக்கு வருவதும் அடிக்கடி நிகழ்ந்தது. 

என் மனைவி கூட ஒருமுறை கேட்டாள், "நீங்க படிச்சுட்டு வாத்தியாரா இருக்கீங்க. அவரு படிக்காதவாரு. நீங்க ரெண்டு பேரும் எப்படி இவ்வளவு நெருக்கமானீங்க?" என்று. 

தான் படிக்கவில்லை என்பதில் சௌரிராஜனுக்கு மிகவும் வருத்தம் உண்டு. 

"சின்ன வயசில எனக்குப் படிப்பு ஏறல. வயல் வேலையிலதான் ரொம்ப ஈடுபாடு இருந்தது. அஞ்சாவது பாஸ் பண்றதுக்கே ரொம்பக் கஷ்டப்பட்டேன். ஒருவேளை முன்சீஃப் பையன்னுட்டு ஸ்கூல்ல பாஸ் போட்டுட்டாங்களோ என்னவோ தெரியல!

"அப்ப, இந்த ஊர்ப் பள்ளிக்கூடத்தில் அஞ்சாவதுக்கு மேல கிடையாது. ஆறாவது வகுப்பு படிக்க பக்கத்து ஊர்ல இருக்கற வேற ஊருக்குத்தான் போகணும். எனக்குப் படிப்பு வேண்டாம்ப்பான்னு எங்க அப்பாகிட்ட சொன்னேன். அவரும் சரின்னு விட்டுட்டாரு. ஆனா படிக்காம இருந்துட்டேனேன்னு இப்ப வருத்தப்படறேன்!" என்றார் என்னிடம் ஒருநாள். 

"படிக்காட்டாலும் நிறைய விஷயம் தெரிஞ்சு வச்சிருக்கீங்களே!" என்றேன் நான். 

அப்போது நான் சொன்னது உபசாரத்துக்குத்தான் என்றாலும், நான் சொன்னது உண்மைதான் என்று சில நாட்களில் புரிந்து கொண்டேன். 

பல விஷயங்களையும் பற்றி ஓரளவு அவர் அறிந்து வைத்திருப்பது அவரிடம் தொடர்ந்து பழகியபோது எனக்குப் புரிந்தது.

சில சமயம், "இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்று நான் ஒருமுறை வியந்து கேட்டபோது, "எல்லாம் உங்களை மாதிரி படிச்சவங்க சொல்லிக் கேட்டுத் தெரிஞ்சுக்கறதுதான்" என்றார் அவர்.

ருமுறை சதாசிவம் என்ற அவர் நண்பர் வீட்டுக்குச் சென்றபோது என்னையும் அழைத்துச் சென்றார் சொரிராஜன். "பாவம். அவருக்கு அடிக்கடி ஏதாவது உடம்புக்கு வந்துடுது. வருமானமும் சரியா இல்ல. ரொம்ப கஷ்டப்படறாரு. கொஞ்சம் ஆறுதல் சொல்லிட்டு வரலாம்" என்றார் போகும் வழியில்.

"அதுக்கு நான் எதுக்கு?" என்றேன்.

"சும்மா வாங்க. உங்களை மாதிரி புதுசா ஒருத்தர் வந்து நலம் விசாரிச்சா அவங்களுக்கு ஆறுதலா இருக்கும் இல்ல?" என்றார் சௌரிராஜன்.

அவர்கள் வீட்டுக்குச் சென்று சற்று நேரம் பேசிய பிறகு, சௌரிராஜன் அவர் கொண்டு வந்திருந்த பையிலிருந்து ஒரு பழைய புத்தகத்தை  எடுத்து சதாசிவத்திடம் கொடுத்தார். "இந்தா! இது சுந்தர காண்டம். என் வீட்டில இருந்ததுதான். உனக்காகத்தான் எடுத்துக்கிட்டு வந்திருக்கேன்!" என்றார் 

"இது எதுக்கு?" என்றார் சதாசிவம் புத்தகத்தை வாங்கியபடியே.

"பொதுவா சுந்தர காண்டம் படிச்சா பிரச்னைகள் தீர்ந்து நல்லது நடக்கும்னு சொல்லுவாங்க. ஆனா இவ்வளவு பெரிய புஸ்தகத்தை யார் படிக்கறதுன்னு நினைச்சு ரொம்ப பேரு இதை முயற்சி செஞ்சு கூட பாக்க  மாட்டாங்க.

"அசோக வனத்திலே சீதை விரக்தி அடைஞ்சு தற்கொலை பண்ணிக்கலாம்னு யோசிக்கச்சே அவங்களுக்கு சில நல்ல சகுனங்கள்ளாம் வருது. அதுக்கப்பறம் அனுமார் வந்து அவங்களைப் பாத்து நம்பிக்கை கொடுக்கறாரு. சுந்தர காண்டம் 29ஆவது சர்க்கத்தில அந்த சகுனங்களை விவரிச்சிருக்காரு வால்மீகி.

"இதில எட்டு சுலோகம்தான் இருக்கு. இதை சுலபமா படிக்கலாம். இதில சுலோகங்கள் சம்ஸ்கிருத்தத்திலேயும், தமிழ்லேயும் இருக்கு. சுலோகங்களோட அர்த்தமும் இருக்கு. நீயோ, உன் சம்சாரமோ தினம் இதைப் படிங்க. நல்லது நடக்கும்.

"என் சம்சாரம் படுத்த படுக்கையா கிடந்தப்ப நானே கஷ்டப்பட்டு எழுத்துக் கூட்டி இதைப் படிச்சேன். ஒரு வாரத்தில அவ எழுந்து உக்காந்துட்டா. உனக்கும் அது மாதிரி நல்லது நடக்கும்" என்று விளக்கினார் சௌந்தரராஜன். 

வர் வீட்டிலிருந்து வெளியே வந்து தெருவில் இறங்கியதும், "இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்? நான் படிச்சவன்னு பேரு. எனக்கே இந்த விவரம் எல்லாம் தெரியாதே! ஏன், ஆன்மீக விஷயங்கள்ள ஈடுபாடு உள்ளவங்க பல பேருக்குக் கூட இது தெரியாதே!" என்றான் நான் வியப்புடன்.

"எனக்கு இந்த ஊர்ல ராமுன்னு ஒரு சிநேகிதன் இருந்தான். படிச்சவன், நிறைய விஷயம் தெரிஞ்சவன். அவன்கிட்டதான் நான் நிறைய விஷயம் தெரிஞ்சுக்கிட்டேன். அவன் இப்ப இங்க இல்ல. பம்பாய்க்குப் போய் அங்கியே செட்டில் ஆயிட்டான். ஆனா அவனுக்கு பதிலா உங்களை மாதிரி புதுசா சில சிநேகிதர்கள் எனக்கு கிடைச்சுக்கிட்டுத்தானே இருக்கீங்க? உங்க கிட்டேருந்தெல்லாம் நான் நிறையக் கத்துக்கலாம்!" என்றார் சௌரிராஜன் சிரித்தபடி.

சௌரிராஜன் அதிகம் படிக்கவில்லை என்பது அவருக்கு ஒரு குறையே இல்லை என்று நினைத்துக் கொண்டேன் நான். 
  
பொருட்பால் 
அரசியல் இயல் 
அதிகாரம் 42
கேள்வி 
குறள் 414:
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை.

பொருள்:
கல்வி கற்காதவனாக இருந்தாலும் கற்றவர்களிடம் விஷயங்களைக் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். அது வாழ்க்கையில் தளர்ச்சி அடைந்த நேரத்தில் ஊன்றுகோல் போல் துணையாக இருக்கும்.
அறத்துப்பால்                                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...