"வருஷம் பூரா கல்லூரியில படிக்கிறோம். கடைசியில மூணு மணி நேரப் பரீட்சையில் நாம என்ன எழுதறமோ அதுதான் நம்ம விதியைத் தீர்மானிக்குது. இந்த முறை அநியாயமாத் தோணலே?" என்றான் ஜெயந்த்.
"சில இடங்கள்ள தொடர் மதிப்பீடுன்னு ஒரு முறை இருக்கு. வருஷம் முழுக்க நாம எழுதற பல டெஸ்ட் மார்க்குகளை மொத்தமா பார்த்து நம்ம கிரேடைத் தீர்மானிக்கற முறை அது. அது பரவாயில்லையா?" என்றான் கண்ணன்.
"ஐயையோ! வேண்டாம். வருஷத்துக்கு ஒரு தடவை பரீட்சை எழுதற முறையே பரவாயில்லை!" என்றான் நடராஜன்.
நெருங்கி வரும் ஆண்டு இறுதிப் பரீட்சை தரும் அழுத்தத்தைக் குறைக்க, அந்த நண்பர்கள் படிப்புக்கிடையே அவ்வப்போது இது போன்று பேசிச் சிரித்துத் தங்களைக் கொஞ்சம் இளக்கிக் கொள்வார்கள்.
தேர்வில் யார் அதிக மதிப்பெண்கள் வாங்குவார்கள் என்று அவர்களுக்குள் ஒரு விவாதம் நடந்தது.
"சந்தானம், சிவராமன் ரெண்டு பேர்ல ஒத்தர்தான். இதில என்ன சந்தேகம்?" என்றான் நடராஜன்.
"அது தெரிஞ்ச விஷயம்தான். ஆனா ரெண்டு பேர்ல யாரு?" என்றான் ஜெயந்த் .
"எனக்கென்னவோ சிவராமன்தான் வருவான்னு தோணுது. அவன்தான் விழுந்து விழுந்து படிக்கிறான். சந்தானம் நம்ம மாதிரி கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கற மாதிரி இருக்கு!" என்றான் கண்ணன்.
"டேய், அவனை நம்மோட ஒப்பிடாதேடா. அவன் எங்கே, நாம எங்கே?" என்றான் ஜெயந்த்.
"இல்லை. அவங்க ரெண்டு பேர்ல சந்தானம் கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கான்னு சொல்றேன்."
"இருக்கலாம். சரி, விடு. நாம படிக்கிறதை விட்டுட்டு அடுத்தவங்க எப்படிப் படிக்கறாங்கன்னு ஆராய்ச்சி பண்ணிக்கிட்டிருக்கோம்!"
தேர்வுகள் நடந்து முடிந்தன. பொதுவாக அனைவருக்குமே பௌதிக கேள்வித்தாள் மிகவும் கடினமாக இருந்தது.
பரீட்சை முடிவுகள் வந்தபோது பௌதிகத் தேர்வில் சிவராமனை விட சந்தானம் 10 மதிப்பெண்கள் கூடுதலாக வாங்கி இருந்தான்.
"எப்படிடா? நான் ரொம்பக் கஷ்டப்பட்டுப் படிச்சேன். ஆனா பரீட்சையில் கேட்ட சில கேள்விகளுக்கு பதில் புத்தகத்திலேயே இல்லை. நீ எப்படி இவ்வளவு மார்க் வாங்கின? வேற புத்தகம் ஏதாவது படிச்சியா?" என்றான் சிவராமன் சந்தானத்திடம்.
"வேற புத்தகம் எதுவும் படிக்கல. ஆனா இதையெல்லாம் நம்ம ப்ரொஃபஸர் வகுப்பிலே விளக்கமா சொல்லி இருக்காரு. அதெல்லாம் முக்கியம்னும் சொல்லி இருக்காரு. அதனால அதையெல்லாம் நோட்ல குறிச்சு வச்சிருந்தேன். அது உபயோகமாக இருந்தது" என்றான் சந்தானம்.
சிவராமன் மௌனமாக இருந்தான். புத்தகத்தில் படித்துக் கொள்ளலாம் என்ற அலட்சியத்துடன் தான் பல வகுப்புகளுக்குச் செல்லாமல் இருந்தது தன்னை எப்படி பாதித்திருக்கிறது என்று புரிந்தது. சந்தானம் வகுப்புகளுக்குச் சென்று ஆசிரியர் கூறியவற்றை கவனித்து உள்வாங்கிக் கொண்டதால்தான் தன் அளவுக்கு விழுந்து விழுந்து படிக்காவிட்டாலும், அவனால் பல பாடங்களில் தன் அளவுக்கும், சில பாடங்களில் தன்னை விட அதிகமாகவும் மதிப்பெண்கள் பெற முடிந்தது என்றும் புரிந்தது.
அரசியல் இயல்
அதிகாரம் 42
கேள்வி
குறள் 411:செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.
பொருள்:
செவியால் கேட்டு அறியும் செல்வம் செல்வங்களில் ஒன்றாகும். அந்தச் செல்வம் எல்லாச் செல்வங்களிலும் தலை சிறந்தது.
No comments:
Post a Comment