Thursday, May 28, 2020

408. குப்பையிலிருந்து எரிவாயு

"சின்ன ஊர்னுதான் பேரு, ஆனா ஊர்ல இவ்வளவு குப்பை. எங்கேந்துதான் இவ்வளவு குப்பை வருமோ!" என்று அலுத்துக் கொண்டார் சுப்பையா.

''நகரமா இருந்தா குப்பையை எங்கேயாவது கொண்டு கொட்டி ஊரை சுத்தமா வச்சுப்பாங்க. கிராமத்தில இதையெல்லாம் யார் செய்யறது? பஞ்சாயத்துக்கு வருமானமும் கிடையாது, வேலை செய்ய ஆளும் கிடையாது'' என்றார் தனபால்.

''நான் இதுக்கு முன்னே இருந்த ஊர்ல குப்பையிலேந்து கேஸ் தயாரிச்சு ஊர் ஜனங்களுக்கே விநியோகம் பண்றாங்க. நீங்களும் அப்படிச் செய்யலாமே?'' என்றார் பாலமுருகன். அவர் சமீபத்தில்தான் வேறு ஊரிலிருந்து அந்த ஊர் அரசுப் பள்ளிக்கு மாற்றலில் வந்திருந்தார்.

''அப்படியா? அரசாங்கத்தில செஞ்சு கொடுப்பாங்களா?'' என்றார் சுப்பையா.

''அரசாங்கத்தில கேட்டா பணம் இல்லைம்பாங்க. உங்க ஊர்க்காரங்களே பணம் போட்டு ஆரம்பிக்கலாமே!'' என்றார் பாலமுருகன்.

''இந்த ஊர்ல ஒத்தரைத் தவிர மத்த எல்லாருமே வசதி இல்லாதவங்கதான். அதனால ஊர்க்காரங்களால சின்னத் தொகை கூடக் கொடுக்க முடியாது.''

'வசதியானவர் ஒத்தர் இருக்கார்னு சொன்னீங்களே, அவர் முதலீடு செய்வாரா?'' என்றார் பாலமுருகன்.

சுப்பையாவும், தனபாலும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர்.

''சரி, வாங்க. அவர்கிட்ட போய் கேட்டுப் பாக்கலாம். நீங்களும் வாங்க'' என்றார் சுப்பையா பாலமுருகனிடம்.

மூவரும் சக்திவேல் வீட்டுக்குச் சென்றனர்.

''ஐயா, நம்ம ஊர்ல நிறைய குப்பை சேருதுல்ல? குப்பையிலேந்து  கேஸ் தயாரிக்கலாம்னு சார் சொல்றாரு. அவரு முன்னே இருந்த ஊர்ல அப்படி செஞ்சிருக்காங்களாம்'' என்றார் சுப்பையா.

பாலமுருகன் திட்டத்தை விளக்கினார்.

''எவ்வளவு செலவாகும்? யார் பணம் போடப் போறாங்க?'' என்றார் சக்திவேல்.

''ரெண்டு லட்சம் ரூபா முதலீடு தேவைப்படும். அரசாங்கத்திலேந்து மானியம் கிடைக்கும். அது எவ்வளவுன்னு நான் கேட்டுச் சொல்றேன். ஆனா அது அப்புறம்தான் வரும். ஊல்ல நிறைய பேர் கேஸ் பயன்படுத்தறாங்க. நாம தயாரிக்கற கேஸ் விலை அவங்க இப்ப வாங்கற விலையில பாதி விலைதான் இருக்கும். அதனால நிறைய பேர் வாங்குவாங்க. நமக்கும் நல்ல லாபம் கிடைக்கும். போட்ட முதலை மூணு வருஷத்தில எடுத்துடலாம். உங்களை நான் அந்த ஊருக்கு அழைச்சுக்கிட்டுப் போய்க் காட்டறேன். நீங்களே அவங்ககிட்ட  விவரம் எல்லாம் கேட்டுத் தெரிஞ்சுக்கலாம்'' என்று பாலமுருகன் உற்சாகமாக விளக்கினார்.

''இருங்க. நான் எதுக்கு அங்கே வரணும்?'' என்றார் சக்திவேல்.

''ஐயா! நீங்க இதில முதலீடு பண்ணணும்னு கேக்கத்தான் வந்திருக்கோம்!' என்றார் சுப்பையா.

''அப்படியா? அதானே பாத்தேன், எதுக்கு இந்த விவரங்களையெல்லாம் வாத்தியார் நம்மகிட்ட சொல்றாருன்னு!'' என்றார் சக்திவேல், சிரித்துக் கொண்டே.

மற்ற மூவரும் மௌனமாக இருந்தார்.

''இங்க பாருங்க வாத்தியாரே! எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது. எனக்குத் தெரிஞ்சது வட்டித் தொழில் மட்டும்தான். அதிலேயும் நீங்க கேக்கறது பெரிய தொகை. சரி. நான் ரெண்டு லட்ச ரூபா கொடுத்துடறேன். நான் சொல்ற வட்டியை மாசாமாசம் கொடுத்துடுங்க. முதலை எப்ப முடியுதோ அப்ப திருப்பிக் கொடுங்க. அது வரையிலும் மாசா மாசம் வட்டி கொடுத்துக்கிட்டிருந்தீங்கன்னா ஒரு பிரச்னையும் இல்ல'' என்றார் சக்திவேல்.

'சார். அது அப்படி இல்ல. இதில வருமானம் வர அஞ்சாறு மாசம் ஆகலாம். நீங்க முதலீடு செஞ்சா இந்தத் தொழிற்சாலையே உங்களோடதுதான். எல்லா லாபமும் உங்களுக்குத்தான்...''

''அதெல்லாம் எதுக்கு வாத்தியரே? மாசா மாசம் வட்டி கொடுக்க முடியுமா உங்களால? எனக்கு அது மட்டும்தான் தெரியணும்!'' என்றார் சக்திவேல்.

மூவரும் சக்திவேல் வீட்டை விட்டு வேறியே வந்ததும், ''கொஞ்சமாவது படிச்சிருந்தார்னா, நாம சொல்றதைக் கேட்டுப் புரிஞ்சக்கிட்டு நிச்சயம் இதுக்கு ஒத்துக்கிட்டிருப்பாரு. ஆனா, நாம சொல்றதைக் கேக்கவே மாட்டேங்கறாறே! இவரு மாதிரி ஆளுங்ககிட்ட கடவுள் பணத்தைக் கொடுத்து வச்சிருக்காரே, அதுதான் கொடுமை!'' என்றார் பாலமுருகன்.

பொருட்பால் 
அரசியல் இயல் 
அதிகாரம் 41
கல்லாமை 
குறள் 408:
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.

பொருள்:
கல்லாதவரிடம் இருக்கும் செல்வம் நல்லவரிடம் இருக்கும் வறுமையை விடக் கொடியதாகும்.
அறத்துப்பால்                                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...