Thursday, June 4, 2020

409. மாற்று ஏற்பாடு!

"உன் அப்பா இந்த ஊருக்கு ஒரு நல்லது செய்யணுங்கறதுக்காக இந்தச் சின்ன ஊர்ல இப்படி ஒரு தொழிற்சாலையை ஆரம்பிச்சாரு. நீ அதை மூடப் பாக்கறியே!" என்றார் சிவசாமி.

ஊரில் செல்வாக்குள்ளவர் என்பதால் அவரைக் கலந்தாலோசிக்காமல் ஊரில் யாரும் எதுவும் செய்வதில்லை.

"என் அப்பா பாலிடெக்னிக்கில படிச்சாரு. அவருக்கு எஞ்சினியரிங்கில ஆர்வம் இருந்தது. அதனால தன் சொத்தையெல்லாம் வித்து இந்த ஸ்டீல் ரோலிங் மில்லை ஆரம்பிச்சாரு. அது ஓரளவுக்கு வளர்ந்து இன்னிக்கு முப்பது பேர் அதில வேலை செய்யறாங்க. ஓரளவுக்கு வருமானமும் வருதுதான். 

'ஆனா நான் படிக்கல. எனக்கு இந்தத் தொழிற்சாலை விஷயம் எதுவும் புரியறதில்ல. மானேஜரை நம்பி நான் எல்லாம் செய்ய வேண்டி இருக்கு. அவர் சொல்றது சரியா தப்பான்னு கூட எனக்குப் புரியறதில்ல. இந்தக் கணக்கு வழக்கும் எனக்குப் புரியல. 

"ஒரு மாசம் நிறையப் பணம் வருது, ஒரு மாசம் குறைச்சலா வருது. கேட்டா மார்க்கெட்ல இரும்பு விலை குறைஞ்சுடுச்சுங்கறாங்க, இல்லேன்னா கலெக்‌ஷன் குறைச்சல்ங்கறாங்க. என்னை ஏமாத்தறாங்களான்னு கூட என்னால கண்டு பிடிக்க முடியல. 

"மெஷினெல்லாம் பழசாயிடுச்சு. ஆனா ஜெர்மன் மெஷின்கறதால அதையெல்லாம் ஓரளவுக்கு நல்ல விலைக்கு வாங்கிக்கறேன்னு வெளியூர்ல ஃபாக்டரி வச்சுருக்கறவரு ஒத்தரு சொல்லி இருக்காரு. நான் தொடர்ந்து ஓட்டினா ரெண்டு மூணு வருஷத்தில புது மெஷின் வாங்க வேண்டி இருக்கலாம். அதிலல்லாம் நான் முதலீடு செய்ய விரும்பல. 

"மெஷின்களை அவர் கிட்ட வித்துட்டு, நிலத்தையும் வித்தா 25 லட்ச ரூபா வரும். பணத்தை பாங்க்ல போட்டுட்டு மாசா மாசம் வட்டியை வாங்கிக்கிட்டு வீட்டில உக்காந்திருக்கலாம்" என்றான் குமார்.

"தொழிற்சாலையை நடத்தினா, அதை விட அதிக வருமானம் வருமேப்பா!"

"அதான் சொன்னேனே! என்னால அதையெல்லாம் பாத்துக்க முடியாது. எனக்கு வீடு இருக்கு, நிலம் இருக்கு. பாங்க்ல வர வட்டி எனக்குப் போதும்."

"30 பேர் வேலை செய்யறாங்களே, அவங்க கதி?"

"அதுக்கு நான் என்ன செய்ய முடியும்?" என்றான் குமார்.

குமாரின் தொழிற்சாலையில் வேலை செய்யும் கோவிந்தன்  சிவசாமியைச் சந்தித்து, "என்னங்க, குமார் இப்படிப் பண்றேங்கறாரு?" என்றான்.

"நான் சொல்லிப் பாத்துட்டேன். கேக்கல. என்ன செய்ய முடியும்? உன் பையன் படிச்சுட்டு சென்னையில வேலை செய்யறானே, நீ அவனோட போய் இருந்துக்க வேண்டியதுதான்!" என்றார் சிவசாமி.

"அப்படி இல்லீங்க. மத்தவங்களும் பாதிக்கப்படறாங்களே! சரி. என் பையன்கிட்ட ஃபோன் பண்ணி அவன் யோசனையைக் கேக்கறேன்."

டுத்த நாளே கோவிந்தனின் மகன் கார்த்திக் சென்னையிலிருந்து கிளம்பி வந்து விட்டான். 

அடுத்த சில நாட்களில் ஊரில் பலரிடமும் கார்த்திக் பேசினான். 

முன்று நாட்களுக்குப் பிறகு சிவசாமியுடன் சென்று குமாரைச் சந்தித்தான் கார்த்திக்.

"குமார்! நீ உன் மெஷின்களையும், தொழிற்சாலை நிலத்தையும்  யார்கிட்டயும் விற்க வேண்டாம். 25 லட்ச ரூபாய் கொடுத்து இவனே உன் தொழிற்சாலையை வாங்கிப்பான். ஒரு மாசம் அவகாசம் மட்டும் கொடு!" என்றார் சிவசாமி.

"எப்படி? உன்கிட்ட அவ்வளவு பணம் இருக்கா என்ன?" என்றான் குமார் கார்த்திக்கிடம் வியப்புடன்.

"என்கிட்ட இல்லை ஐயா. ஆனா நான் ஒரு ஏற்பாடு செஞ்சிருக்கேன். இந்தத் தொழிற்சாலையை நடத்த ஒரு கூட்டுறவு சங்கம் ஆரம்பிக்கப் போறோம். இந்த ஊர்ல இருக்கற ஆயிரம் குடும்பங்களும் ஆளுக்கு 1000 ரூபா முதல் போடுவாங்க. அதில ஒரு 10 லட்சம் ருபா வரும். அதைத் தவிர இந்தத் தொழிற்சாலையில வேலை செய்யற 30 பேரும் ஆளுக்கு 10,000 ரூபா போடுவாங்க. அவங்கள்ள சில பேர் கிட்ட பணம் இல்லாட்டாலும் கடனோ ஏதோ வாங்கி முதலீடு செய்ய ஒத்துக்கிட்டிருக்காங்க. ஏன்ன அது அவங்க வாழ்க்கைப் பிரச்னை ஆச்சே! அதில ஒரு 3 லட்ச ருபா வரும். மீதி 12 லட்ச ரூபாயை நான் முதலீடு செய்யப் போறேன்" என்றான் கார்த்திக்.

"நீ வேலைக்குப் போய் ஒரு வருஷம்தானே ஆகியிருக்கும்? உங்கிட்ட அவ்வளவு பணம் இருக்கா?" என்றான் குமார்.

"இல்லதான். ஆனா நான் ஒரு நல்ல வேலையில இருக்கறதால பாங்க்ல எனக்கு 10 லட்ச ரூபா பர்சனல் லோன் கொடுப்பாங்க. கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் அடைக்கணும். சமாளிக்க முடியும்னு நினைக்கறேன். இன்னும் ரெண்டு லட்ச ரூபா குறையுது. அதை ஐயாவே முதலீடு செய்யறேன்னு சொல்லி இருக்காரு!" என்று சொல்லி சிவசாமியைப் பார்த்தான் கார்த்திக்.

"ஆமாம் குமார். இவன் பம்பரையில இதுவரை யாரும் படிச்சதில்ல. படிச்ச முதல் ஆளு இவன் தான். இவனை அவன் அப்பன் படிக்க வச்சது வீண் போகல!" என்றார் சிவசாமி. 

அவர் குமாரைப் பார்த்த பார்வையில், 'ஆனா படிச்ச பரம்பரையில வந்த நீ, படிக்காததால இப்படி ஒரு முடிவை எடுத்திருக்க பாரு!' என்று சொல்வது போல் இருந்தது.
பொருட்பால் 
அரசியல் இயல் 
அதிகாரம் 41
கல்லாமை 
குறள் 409:
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு.

பொருள்:
உயர்ந்த குடியில் பிறந்தவராக இருந்தாலும் ஒருவர் கல்லாதவராக இருந்தால், தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்வி கற்றவரை விடப்  பெருமையில் குறைந்தவர்தான்.
அறத்துப்பால்                                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1056. உள்ளிருந்து வந்த உதவி!

"வாங்க. எங்கே இவ்வளவு நாள் கழிச்சு?" என்று வரவேற்றார்பரமசிவம். தயங்கிக் கொண்டே பரமசிவத்தின் வீட்டுக்குள் நுழைந்த பாலன் "சும்ம...