"இன்னிக்கு ஒரு இலக்கிய விழா இருக்கு. போகலாம், வரியா?" என்றார் விட்டல்.
விட்டல் என் பக்கத்து வீட்டில் வசிப்பவர். என்னை விடப் பத்து வயது மூத்தவர். ஆயினும், எங்கள் இருவருக்கும் சில விஷயங்களில் பொதுவான ஆர்வமும், கருத்துக்களும் இருந்ததால் அவர் என்னை ஒரு நண்பனாகவே நடத்தி வந்தார்.
நான் சற்றுத் தயங்கினேன்.
"இது வருஷத்துக்கு ஒரு தடவை நடக்கிற விழா. ரொம்ப அருமையா இருக்கும். ஒவ்வொரு பேச்சும் அற்புதமா இருக்கும். காலையிலேயே ஒரு நிகழ்ச்சி இருந்தது. அதுக்கு என்னால போக முடியல. மாலை நிகழ்ச்சி இன்னும் அருமையா இருக்கும். சாயந்திரம் 4 மணியிலேந்து 9 வரைக்கும். நேரம் போறதே தெரியாது. வா, போயிட்டு வரலாம்" என்றார்.
நான் இன்னும் தயங்கியதைக் கண்டு, "அந்த சபாவில விஜயா பவன்காரங்கதான் கான்ட்டீன் நடத்தறாங்க!" என்றார் விட்டல்.
"சரி சார். வரேன்" என்றேன் நான்.
நாங்கள் நான்கு மணிக்கு அரங்கத்தில் நுழையும்போதே கான்ட்டீனிலிருந்து அருமையான மணம் வீசியது.
"சார்! கான்ட்டீன்ல டிஃபன் சாப்பிட்டுட்டுப் போயிடலாமே!" என்றேன் நான்.
"இப்ப நிகழ்ச்சி ஆரம்பிச்சுடுமே! அப்பறம் வந்து சாப்பிட்டுக்கலாம், வா!" என்று என் கையைப் பிடித்து இழுக்காத குறையாக உள்ளே அழைத்துச் சென்றார் விட்டல்.
விட்டல் சொன்னது போல், சொற்பொழிவுகள் அருமையாகத்தான் இருந்தன. வலிந்து கூறப்பட்ட நகைச்சுவைத் துணுக்குகளோ, அரசியல், சினிமா பற்றிய குறிப்புகளோ இல்லாமல் இலக்கியச் சுவையை மட்டுமே அறுசுவை விருந்துகளாக வழங்கி கொண்டிருந்தார்கள் பேச்சாளர்கள்.
பேச்சுக்கள் சுவையாக இருந்தாலும் என் மனதில் கான்ட்டீனிலிருந்து வந்த மணம் திரும்பத் திரும்ப வந்து போனது.
இரண்டு மூன்று முறை விட்டலிடம், "சார்! கான்ட்டீனுக்குப் போயிட்டு வந்துடலாமா?" என்று மெதுவாகக் கேட்டுப் பார்த்தேன்.
"இருப்பா! இவ்வளவு அருமையாப் பேசிக்கிட்டிருக்காரு. இப்ப எப்படிப் போறது?"என்று என்னை அடக்கி விட்டார்.
'சரிதான். ஒன்பது மணிக்கு நிகழ்ச்சி முடிந்ததும்தான் கான்ட்டீனுக்குப் போகப் போகிறோம். அப்போது கான்ட்டீனில் எல்லாம் தீர்ந்து போய் கான்ட்டீனை மூடிக் கொண்டிருப்பார்கள். நமக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்!' என்று நினைத்துக் கொண்டேன்.
குறிப்பிட்ட ஒரு பேச்சாளர் பேசி முடித்ததும் அடுத்த பேச்சாளரின் பெயரை அறிவித்தார்கள். விட்டல் சட்டென்று என் கையைப் பிடித்து அழுத்தி, "வா, போகலாம்!" என்று எழுந்தார்.
விறுவிறுவென்று கான்ட்டீனுக்கு நடந்தார்.
கான்ட்டீனில் போய் அமர்ந்ததும், "என்ன சார்! இவ்வளவு நேரம் வர மாட்டீன்னீங்க. இப்ப மட்டும் எப்படி எழுந்து வந்தீங்க? ரொம்பப் பசி வந்துடுச்சோ?" என்றேன் கேலியாக.
"இவ்வளவு அருமையான பேச்சுக்கள் காது வழியே உள்ளே போய்க்கிட்டிருக்கச்சே, பசி எப்படி வரும்?"
"பின்னே, இப்ப மட்டும் எப்படி வந்தீங்க?'
"இந்தப் பேச்சாளர் பேச்சை நான் முன்னால கேட்டிருக்கேன். அவர் அவ்வளவு நல்லாப் பேச மாட்டார். அதனாலதான் இந்த சமயத்தில வயத்தையும் கொஞ்சம் கவனிச்சுக்கலாம்னு வந்தேன். இவர் இருபது முப்பது நிமிஷம் பேசுவார்னு நினைக்கிறேன். இவர் பேசி முடிச்சு அடுத்த பேச்சாளர் வரத்துக்குள்ள நாம சாப்பிட்டு முடிச்சுட்டு உள்ள போயிடணும். சீக்கிரமா ஆர்டர் பண்ணு. இப்ப கான்ட்டீன்ல கூட்டம் இல்ல. ஆனா இவர் பேச ஆரம்பிச்சதும் கொஞ்சம் கொஞ்சமா எல்லாரும் எழுந்து கான்ட்டீனுக்கு வர ஆரம்பிச்சுடுவாங்க! அப்புறம் நாம ஆர்டர் பண்ணினது வர லேட் ஆயிடும்!" என்றார் விட்டல்.
அவர் சொல்லி முடித்தபோதே, ஒரு சிலர் கான்ட்டீனுக்குள் நுழைந்து கொண்டிருந்தனர்.
அரசியல் இயல்
அதிகாரம் 42
கேள்வி
குறள் 412:செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.
பொருள்:
செவிக்கு கேள்வி என்ற உணவு இல்லாதபோது, வயிற்றுக்குச் சிறிது உணவு அளிக்கப்படும்.
No comments:
Post a Comment