Friday, June 5, 2020

410. புலன் விசாரணை!

தேவராஜனுக்குத் திரைப்படங்கள் பார்ப்பதில் அதிக ஆர்வம் இல்லை. அவன் மகன் குரு தொலைக்காட்சியில் ஏதோ திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தான்.

"என்னடா படம் அது?" என்றான் தேவராஜன்.

"ஏழாம் அறிவு. நல்ல படம்ப்பா இது" என்றான் குரு, தான் அந்தப் படத்தைப் பார்ப்பதை நியாயப்படுத்தும் விதமாக. 

"ஏழாம் அறிவா? அறிவுங்கறது ஒண்ணுதானே? அதில ஏது ஏழாம் அறிவு , எட்டாம் அறிவெல்லாம்?"

"இல்லப்பா. நமக்கெல்லாம் ஆறறிவு இருக்குல்ல?"

"ஆறு அறிவா? எல்லாருக்கும் மண்டைக்குள்ள மூளைன்னு ஒண்ணுதானே இருக்கு?"

"கொஞ்சம் இருப்பா. படம் ஓடிக்கிட்டிருக்கு. நடுவில விளம்பரம் வரும் இல்ல, அப்ப சொல்றேன்" என்று குரு சொல்லிக் கொண்டிருக்கும்போதே விளம்பர இடைவேளை வந்து விட்டது.

"சொல்லு. தெரிஞ்சுக்கறேன். நான்தான் படிக்கலியே!" என்றான் தேவராஜன்.

"அப்பா! மூளைங்கறது ஒரு உறுப்பு. அறிவுன்னு சொல்றது நமக்கு இருக்கற... சக்திகளை, அதாவது... இப்ப ஐம்புலன்கள்னு சொல்றோம் இல்ல?"

"ஐம்புலன்னா?"

"கண், காது, மூக்கு, நாக்கு, தோல் இதைத்தான் புலன்கள்னு சொல்றோம்."

"அதுதான் எல்லோருக்கும் இருக்கே. ஆடுமாடு, பூச்சி, புழுக்கெல்லாம் கூட இருக்கே?"

"இல்லப்பா. புழு பூச்சிக்கெல்லாம் ஐம்புலன்கள் இருக்கறதா சொல்ல முடியாது."

"ஏன் அதுங்களும்தான் பாக்குது, சாப்பிடுது."

"அப்படி இல்லப்பா. சில உயிரினங்களுக்கு ஒரு அறிவு அதாவது தொடு உணர்ச்சி மட்டும்தான் இருக்கும் - உதாரணமா மரம், செடி, கொடி, புல், பூண்டு மாதிரி உயிர்கள்."

"சரி."

"மீன், நத்தை, சங்கு மாதிரி உயிர்களுக்குத் தொடு உணர்ச்சி, சுவை உணர்ச்சின்னு ரெண்டு அறிவுகள்தான் இருக்கு."

"அட, ஆச்சரியமா இருக்கே!" என்றான் தேவராஜன்.

தந்தையின் ஆர்வத்தால் உந்தப்பட்டு குரு உற்சாகமாகத் தொடர்ந்தான்.

"அப்புறம், எறும்பு, கரையான், அட்டை மாதிரி உயிர்களுக்கு சுவை, மணம், தொடு உணர்ச்சிங்கற மூணு புலனைறிவுகள் உண்டு. அடுத்த நிலையில, நண்டு, தும்பி, வண்டு மாதிரி உயிர்களுக்கு பார்வையையும் சேர்த்து நான்கு புலனறிவுகள். மிருகங்கள், பறவைகளுக்கு கேட்கும் சக்தியையும் சேர்த்து ஐம்புலன்கள்."

"சரி. ஆறாவது அறிவுங்கறது?"

"அதுதான் சிந்திக்கிற சக்தி. அது மனுஷங்களுக்கு மட்டும்தான் இருக்கு."

"ஓ, அறிவுங்கறதில இவ்வளவு விதம் இருக்கா? எனக்குத் தெரியலியே!"

"ஆமாம்ப்பா. அப்புறம் ஏழாவது அறிவுன்னா.."

"வேண்டாம். நான் படிக்காததவன். எனக்கு ஆறாவது அறிவு இருக்கான்னே எனக்குத் தெரியல. மிருகங்களுக்கு இருக்கற அஞ்சு அறிவுதான் எனக்கும் இருக்கும் போலருக்கு. இப்ப ஏழாவது அறிவு எதுக்கு? படம் ஆரம்பிச்சுடுச்சு. நீ பாரு!" என்று சொல்லி எழுந்து சென்றான் தேவராஜன். 

பொருட்பால் 
அரசியல் இயல் 
அதிகாரம் 41
கல்லாமை 
குறள் 410:
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.

பொருள்:
அறிவு விளங்குவதற்குக் காரணமான நூல்களைக் கற்றவர்களுக்கும், கல்லாதவர்களுக்கும் உள்ள ஒப்புமை மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் உள்ள ஒப்புமையைப் போன்றது.
அறத்துப்பால்                                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1056. உள்ளிருந்து வந்த உதவி!

"வாங்க. எங்கே இவ்வளவு நாள் கழிச்சு?" என்று வரவேற்றார்பரமசிவம். தயங்கிக் கொண்டே பரமசிவத்தின் வீட்டுக்குள் நுழைந்த பாலன் "சும்ம...