Wednesday, May 20, 2020

406. செல்வத்தின் வருத்தம்

ரங்கதுரையின் குடும்பம் அந்த ஊரிலேயே மிகவும் செல்வம் மிகுந்த குடும்பம். செழிப்பான நிலம், தோட்டம், தென்னந்தோப்பு, அரண்மனை போன்ற வீடு என்று ரங்கதுரை ஒரு ஜமீன்தாரைப் போல் வாழ்ந்தவர்.

அவருடைய செல்வம் அவருக்கு செல்வாக்கையும் பெற்றுத் தந்தது. அவரைக் கலந்து பேசாமல் ஊரில் எந்த ஒரு பொதுக் காரியமும் நடந்ததில்லை.  

ஆனால் அவர் காலத்துக்குப் பின் நிலைமை மாறி விட்டது. அவருடைய நான்கு பிள்ளைகளில் மூவர் படித்து வெளியூருக்கு வேலைக்குச் சென்று விட்டனர். 

அவருடைய இரண்டாவது மகன் செல்வம் மட்டும் பள்ளிப் படிப்பையே முடிக்காததால் அந்த ஊரிலேயே இருந்தான். 

ரங்கதுரையின் மறைவுக்குப்பிறகு நான்கு சகோதரர்களும் பங்கு பிரித்துக் கொண்டனர். நிலங்களைப் பங்கு பிரித்துக் கொண்ட பின், வீட்டை விற்று வந்த பணத்தை நால்வரும் பிரித்துக் கொள்ள, செல்வம் தன் பங்குக்குக் கிடைத்த பணத்தில் ஒரு சிறிய வீட்டை வாங்கிக் கொண்டு அதில் இருந்தான். தன் பங்குக்குக் கிடைத்த நிலத்தில் கிடைத்த வருமானத்தில் சுமாரான வசதியுடன் வாழ்க்கையை ஓட்டி வந்தான்.

அந்த ஊரில் செல்வத்துக்கு நெருக்கமானவன் அவன் நண்பன் முத்து மட்டும்தான். 

செல்வம் முத்துவின் வீட்டுக்குப் போனபோது முத்து வெளியே கிளம்பிக் கொண்டிருந்தான்.

"எங்கேயோ கிளம்பிக்கிட்டிருக்கே போலருக்கே!" என்றான் செல்வம் .

"வேற எங்கே போவேன்? வயக்காட்டுக்குத்தான். நடவு வேலை நடக்குது இல்ல? நான் அங்க போய் நின்னாத்தான் வேலை நடக்கும்!" என்றான் முத்து. 

"எனக்கு இந்த வேலை இல்ல. எங்கப்பா காலத்திலேந்தே குத்தகைக்காரங்கதான் பாத்துக்கறாங்க!"

"உன் வழி வேறப்பா.நீ பணக்கார வீட்டுப் பிள்ளை!" என்றான் முத்து சிரித்தபடி.

"இந்தக் கிண்டல்தானே வேணாங்கறது. என் நிலைமை என்னன்னு உனக்குத் தெரியாதா?" என்ற செல்வம், "சரி வா. நானும் உன் கூட வரேன். பேசிக்கிட்டே போகலாம்" என்று அவனுடன் நடந்தான்.

"முத்து. நீ என் நண்பன். உன்கிட்டத்தான் நான் மனம் விட்டுப் பேச முடியும். எங்கப்பா காலத்தில எங்க குடும்பத்துக்கு எவ்வளவு மதிப்பு இருந்தது! இப்ப ஊர்ல ஒரு பய என்னை மதிக்கறதில்ல. ஒருபொதுக் காரியத்துக்கும் என்னைக் கூப்பிடறதில்ல. ஊர்ப் பொதுக் கூட்டத்தில நான் ஏதாவது யோசனை சொன்னா கூட அதை யாரும் காதுல போட்டுக்கறதில்ல."

"என்ன செய்யறது? உலகம் பணம் இருந்தாத்தான் மதிக்குது. உன் அப்பா காலத்தில உன் குடும்பம் ஊரிலேயே ரொம்ப பணக்காரக் குடும்பம். இப்ப உங்க குடும்பத்தில எல்லாரும் பங்கு பிரிச்சுக்கிட்டப் பறம் உன் நிலைமை கொஞ்சம் இறங்கிடுச்சே! அதான் அப்படி நடந்துக்கறாங்க போலருக்கு, விடு!" என்றான் முத்து.

"அது இல்லடா காரணம். நானும் முதல்ல அப்படித்தான் நினைச்சேன். ஆனா ஊர்லேந்து என் அண்ணன் தம்பிங்கல்லாம் அப்பப்ப இங்கே வராங்க இல்ல, அவங்களுக்கு ஊர்ல எல்லாரும் மதிப்புக் கொடுத்துப் பேசறாங்களே!"

"வெளியூர்லேந்து வந்திருக்காங்களேங்கற மரியாதைக்காக இருக்கும்."

"இல்ல. அவங்க படிச்சிருக்காங்க. அதனாலதான் அவங்களை மதிக்கிறாங்க. நான் படிக்காதவங்கறதால நான் எதுக்கும் லாயக்கு இல்லாதவன்னு நினைக்கறாங்க போலருக்கு!" என்றான் செல்வம். 

"நான் அப்படி நினைக்கலேடா!" என்றான் முத்து செல்வத்தின் தோளில் கை  வைத்து அழுத்தி. 

"நீ அப்படி நினைக்காட்டாலும், உண்மை அதுதானே!" 

முத்து தன் வயலில் நடக்கும் வேலைகளை கவனித்து வேலை செய்பபவர்களுக்கு அவர்கள் செய்ய வேண்டிய வேலை விவரங்களைச்  சொல்லிக் கொண்டிருந்தபோது, செல்வம் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தான்.

சிறிது நேரம் கழித்து செல்வம் இருக்குமிடத்துக்கு வந்த முத்து, "வா, போகலாம்!" என்றான்.

"ஆமாம் அந்தப் பக்கமா ஒரு நிலம் இருக்கே, அதுவும் உன்னோடதுதானே? ஏன் அது மட்டும் காய்ஞ்சு கிடக்கு?" என்றான் முத்து.

"அதில எதுவும் வளராது. நான் முயற்சி பண்ணிப் பாத்துட்டு விட்டுட்டேன். அது களர் நிலம்" என்றான் முத்து.

"என்னை மாதிரி போலருக்கு!" என்றான் செல்வம் சிரித்தபடி.

பொருட்பால் 
அரசியல் இயல் 
அதிகாரம் 41
கல்லாமை 
குறள் 406:
உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.

பொருள்:
கல்லாதவர் உயிரோடு இருக்கின்றனர் என்று சொல்லப்படும் அளவினரேயன்றி, அவர் எதுவும் விளையாத களர் நிலத்துக்கு ஒப்பானவர்.
         அறத்துப்பால்                                                                          காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...