ரெண்டு ப்ரொஃபஸர்கள் நமக்கு கிளாஸ் எடுக்கறாங்களே, அதில யாரை உனக்குப் பிடிச்சிருக்கு?'' என்று கேட்டாள் கலா.
''இதில என்ன சந்தேகம்? பாஸ்கர்தான்னு நம்ம கிளஸ்ஸ்ல எல்லாரும் சொல்லுவாங்களேடி!'' என்றாள் அனு.
''நானும் முதல்ல அப்படித்தான் நினைச்சேன். ஆனா இப்ப எனக்கு வேற மாதிரி தோணுது'' என்றாள் கலா.
''என்ன தோணுது?''
''வெளிப்படையா சொல்லணும்னா, பாஸ்கர்கிட்ட கவர்ச்சியான தோற்றம் இருக்கு. அவர் நல்லா உடை உடுத்திக்கறார். கண்ணாடி போட்டிருந்தா கூட அழகான ஃபிரேமை செலக்ட் பண்ணி கண்ணாடி அவருக்குக் கூடுதல் அழகு கொடுக்கற மாதிரி செஞ்சிக்கிட்டிருக்காரு. சுந்தர் இதுக்கு நேர்மாறா இருக்காரு.''
'ஆமாம். பேருதான் சுந்தர். ஆனா சுண்டெலி மாதிரி மூஞ்சி!'' என்றாள் அனு சிரிப்புடன்.
''அதைத்தான் நான் சொல்ல வரேன். நாம தோற்றத்தை வச்சு எடை போடறோம். எனக்கென்னவோ பாஸ்கர்கிட்ட அந்த அளவுக்கு விஷயம் இல்லேன்னு தோணுது'' என்றாள் கலா.
''போடி. தோற்றம், நடை, உடை, பாவனை, பேச்சு எல்லாம்தான் முக்கியம். பாஸ்கரோட வகுப்பு கலகலப்பா இருக்கும், நிறைய ஜோக் எல்லாம் சொல்லுவாரு. சுந்தரோட வகுப்பு போரா இருக்கும். மனுஷன் சப்ஜெக்டை விட்டு அந்தண்டை இந்தண்டை போக மாட்டாரு. நல்லா உடை உடுத்திக்கவும் மாட்டாரு. ஒத்தரோட தோற்றமும் போர், பேச்சும் போர்னா, அவரை நமக்கு எப்படிப் பிடிக்கும்?' என்றாள் அனு.
''நான் சொல்றதும் நீ சொல்றதும் ஒண்ணுதான்!" என்றாள் கலா.
''அது சரி. எதுக்கு இந்த ஒப்பீடு இப்ப?'' என்றாள் அனு.
"நம்ம ப்ராஜக்டுக்கு கைட் யார்னு நாம தேர்ந்தெடுக்கணுமே, அதுக்காகத்தான் கேட்டேன்.''
''நல்ல வேளை! நம்ம கல்லுரியில நம் விருப்பத்தைக் கேக்கறாங்க. நான் பாஸ்கரைத்தான் தேர்ந்தெடுக்கப் போறேன். நிறைய பேர் பாஸ்கரைத்தான் தேர்ந்தெடுப்பாங்க. அதனால அவர் எனக்கு கைடா கிடைப்பாரான்னு தெரியல!'' என்றாள் அனு.
''எனக்கு அந்த பிரச்னை இல்லை. நான் சுந்தரைத்தான் தேர்ந்தெடுக்கப் போறேன்!'' என்றாள் கலா.
'நல்ல வேளை! நீ ப்ராஜக்டுக்கு வழிகாட்டியைத்தான் தேர்ந்தெடுக்கற, வாழ்க்கைத் துணைவரை இல்லை!" என்றாள் அனு, குறும்பாகச் சிரித்தபடி.
''ப்ரிசைஸ்லி, தட்ஸ் மை பாயின்ட்!'' என்றாள் கலா சிரித்துக்கொண்டே.
''என்னடி இது. ப்ராஜக்ட் கொஞ்சம் கூட நகர மாட்டேங்குது! அடுத்ததா என்ன செய்யணும்னே புரியல'' என்றாள் அனு.
''உன் ப்ராஜக்ட் கைட் பாஸ்கர் கிட்ட உதவி கேக்க வேண்டியதுதானே?'' என்றாள் கலா.
"எத்தனையோ தடவை கேட்டுட்டேன். ஏதோ சொல்லி மழுப்பறாரு. தெளிவா சொல்ல மாட்டேங்கறாரு. அவருக்கே நிறைய விஷயம் தெரியலேன்னு நினைக்கிறேன்'' என்ற அனு, சற்றுத் தயங்கிவிட்டு, ''அவரைப் பத்தின உன்னோட மதிப்பீடு சரிதான்னு நினைக்கறேன், அவர் நுனிப்புல் மேயற ஆள்தான்!'' என்றாள்.
அரசியல் இயல்
அதிகாரம் 41
கல்லாமை
குறள் 407:நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று.
பொருள்:
நுட்பமானதான, மாட்சி உடைய, ஆராயும் திறமை பெற்ற அறிவு இல்லாதவனுடைய அழகான தோற்றம் மண்ணால் அழகாகச் செய்யப்பட்ட பாவை போன்றது.
No comments:
Post a Comment