"யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம் கட்டலேன்னா, நகைகள் ஏலத்துக்குப் போயிடுமே!" என்றாள் அவன் மனைவி மல்லிகா, கவலையுடன்.
"நம்ம சொந்தக்காரங்க யாரும் நமக்கு உதவற நிலையில இல்ல. என் நண்பர்களும் அப்படித்தான்!"
சற்று நேரம் மௌனமாக இருந்த மல்லிகா, "உங்க மூர்த்தி சித்தப்பாகிட்ட கேட்டுப் பாக்கலாமா?" என்றாள், தயக்கத்துடன்.
"அவர் என்னோட சொந்த சித்தப்பா கூட இல்ல, ஒண்ணு விட்ட சித்தப்பாதான். அவர்கிட்ட எப்படிப் போய்க் கேக்கறது?"
"ஒண்ணு விட்ட சித்தப்பாவா இருந்தா என்ன? உங்க அப்பாகிட்ட நெருக்கமா இருந்தவர்தானே?"
"அப்பா போய் மூணு வருஷம் ஆச்சு. அதுக்கப்பறம், மூர்த்தி சித்தப்பாவோட நமக்குத் தொடர்பே இல்லையே! போன வருஷம் ஒரு கல்யாணத்தில பாத்தப்ப, 'எப்படி இருக்கே?'ன்னு விசாரிச்சாரு. அதோட சரி!"
"இருந்தா என்ன? இப்ப நமக்கு உதவறதுக்கு வேற யாரும் இல்லேங்கறப்ப, அவர்கிட்ட உதவி கேக்கறதில தப்பு இல்லையே!"
சற்று நேரம் யோசித்த பரந்தாமன், "சரி. நீ சொல்றதுக்காக, அவரைப் போய்ப் பார்த்துட்டு வரேன்" என்று சொல்லி விட்டுக் கிளம்பினான்.
வீட்டுக்குத் திரும்பிய பரந்தாமனின் முகத்தைப் பார்த்தே, அவன் முயற்சி பயனளிக்கவில்லை என்று புரிந்து கொண்ட மல்லிகா, அவனிடம் எதுவும் கேட்காமல் மௌனமாக இருந்தாள்.
உள்ளே வந்து அமர்ந்து கொண்ட பரந்தாமன், "அவர்கிட்ட உதவி கேக்கக் கூடாதுன்னு நான் முதல்லேயே நினைச்சேன். நீ சொன்னதைக் கேட்டு, அவரைப் போய்ப் பார்த்துட்டு வந்தேன். கையை விரிச்சுட்டாரு!" என்றான், ஏமாற்றத்துடன்.
"காரணம் ஏதாவது சொன்னாரா?"
"காரணம் என்ன காரணம்? இல்லேன்னு சொல்றவங்க 'உனக்கு உதவ எனக்கு இஷ்டமில்லை'ன்னா சொல்லுவாங்க? அவர்கிட்ட பணம் இல்லையாம். "
மல்லிகா ஏதும் கூறாமல் மௌனமாக இருந்தாள்.
"'நகையை மீட்டு உங்ககிட்ட கொடுத்துடறேன். பணத்தைத் திருப்பிக் கொடுத்துட்டு நகையை வாங்கிக்கறேன்'னு கூட சொன்னேன். 'என்னப்பா இப்படி சொல்ற? எங்கிட்ட பணம் இருந்தா நான் கொடுத்திருக்க மாட்டேனா?'ன்னு வருத்தப்பட்டுப் பேசற மாதிரி பேசினாரு."
"ஒருவேளை, உண்மையாகவே அவர்கிட்ட பணம் இல்லையோ, என்னவோ!" என்றாள் மல்லிகா.
"என்ன பேசற நீ? ஒரு லட்சம் ருபாயெல்லாம் அவருக்கு ஒரு தொகையே இல்லை. அவருக்குக் கொடுக்க இஷ்டம் இல்லை. அவ்வளவுதான்!"
"அப்படி இல்லைங்க. நம்மையே எடுத்துக்கங்க. நாம எவ்வளவோ வசதியா இருந்தவங்கதான். உங்களுக்கு திடீர்னு தொழில்ல நெருக்கடி ஏற்பட்டு, நமக்குப் பணத் தட்டுப்பாடு வந்துடுச்சு. நம்ம சொந்தக்காரங்க யாராவது இப்ப உங்ககிட்ட வந்து பத்தாயிரம் ரூபா கடன் கேட்டா, உங்களால கொடுக்க முடியாது இல்ல? அது மாதிரி, அவருக்கும் இப்ப ஏதாவது கஷ்டமான நிலைமை இருக்கலாம். அதனால, அவரால உண்மையாகவே நமக்கு உதவ முடியாம இருக்கலாம் இல்ல?" என்றாள் மல்லிகா.
வியப்புடன் மல்லிகாவைப் பார்த்த பரந்தாமன், "நீ சொல்றது உண்மையா இருக்கலாம். நீ இப்படி சொன்னப்பறம்தான், நான் கவனிச்ச ஒரு விஷயம் புரியுது. அவர் எப்பவும் ரொம்ப உற்சாகமா இருப்பாரு. நான் போனப்ப, அவர்கிட்ட அந்த உற்சாகம் இல்லை. அதைப் பத்தி, அப்ப நான் யோசிக்கல. பாவம், அவருக்கும் ஏதோ பணக் கஷ்டம் இருக்கும் போல இருக்கு!" என்றான் பரந்தாமன்.
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 106
இரவு (யாசித்தல்)
குறள் 1060:
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி.