Sunday, April 7, 2024

1059. உதவி கிடைத்தது!

"நம்ம பையனை காலேஜில சேக்கணுமே, என்ன செய்யப் போறீங்க?" என்றாள் நிர்மலா.

"அதான் நல்ல மார்க் வாங்கி இருக்கானே, நல்ல காலேஜ் எதிலேயாவது அவனுக்கு சீட் கிடைச்சுடும்" என்றான் பார்த்திபன்.

"நான் சீட் கிடைக்கறதைப் பத்திக் கேக்கல. அட்மிஷன் கிடைச்சா ஃபீஸ் கட்டணுமே, அதுக்கு என்ன செய்யப் போறீங்க?"

"அதைப் பத்தித்தான் விசாரிச்சுக்கிட்டிருக்கேன்!"

"விசாரிக்கிறீங்களா? என்ன விசாரிக்கறீங்க? "

"கொஞ்ச நாள் வெயிட் பண்ணு.சொல்றேன்!" என்று பேச்சை முடித்தான் பார்த்திபன்.

"குமாரோட காலேஜ் ஃபீசைப் பத்திக் கவலைப்பட்டியே, ஏற்பாடு பண்ணிட்டேன்" என்றான் பார்த்திபன்.

"என்ன ஏற்பாடு? பாங்க்ல எஜுகேஷன் லோன் தரேன்னுட்டாங்களா என்ன?" என்றாள் நிர்மலா.

"நமக்கு அது மாதிரி லோன் எல்லாம் கிடைக்காது. நம்மை மாதிரி வசதி இல்லாதவங்களுக்கு உதவறதுக்குன்னே சில நல்ல மனுஷங்க டிரஸ்ட் வச்சு அதன் மூலமா உதவி செய்யறாங்க. அது மாதிரி டிரஸ்ட்களைப் பத்தித்தான் விசாரிச்சுக்கிட்டிருந்தேன். அப்படி ஒரு டிரஸ்டில அப்ளிகேஷன் போட்டேன். அவங்க உதவி செய்யறதா சொல்லிட்டாங்க. குமார் காலேஜ்ல படிக்கற நாலு வருஷமும் காலேஜ் ஃபீஸ், புத்தகச் செலவு எல்லாத்துக்கும் அவங்க பணம் கொடுத்துடுவாங்க!"

"ஆச்சரியமா இருக்கே! இப்படி எல்லாம் உதவி செய்யறவங்க உலகத்தில இருக்காங்களா என்ன?" என்றாள் நிர்மலா வியப்புடன்.

"இருக்காங்களே!"

"நல்ல வேளை! இப்படி சில பேர் இருக்கறதாலதான் நம்மளை மாதிரி இருக்கறவங்களால சமாளிக்க முடியுது!"

சற்று யோசித்த பார்த்திபன், "நீ சொல்றது சரிதான். ஆனா இதை இப்படியும் பாக்கலாம். நம்மளை மாதிரி உதவி கேக்கறவங்க இருக்கறதாலதான் இது மாதிரி பெரிய மனுஷங்களால நமக்கு உதவி செஞ்சு நல்ல பேர் வாங்க முடியுது! அவங்க நமக்குப் பணம் கொடுத்து உதவறாங்க. நாம அவங்களுக்குப் பெருமை வாங்கிக் கொடுக்கிறோம்! நாம இல்லேன்னா அவங்களுக்கு இந்தப் பெருமை எப்படிக் கிடைக்கும்?" என்றான் சிரித்துக் கொண்டே.

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 106
இரவு (யாசித்தல்)

குறள் 1059:
ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை.

பொருள்: 
இரந்து பொருள் பெறுபவர் இல்லாத நிலையில், பொருள் கொடுத்துப் புகழ் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமற் போய்விடும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...