Sunday, April 7, 2024

1057. இருவரின் அனுபவங்கள்

"நம்ம ரெண்டு பேரோட நிலைமையுமே இப்படி மோசமா ஆயிடுச்சே!" என்றார் கதிரேசன்.

"ஆமாம். ஒண்ணா சேர்ந்து தொழில் ஆரம்பிச்சோம். இப்ப ஒரே நேரத்தில பிரச்னையை சந்திச்சுக்கிட்டிருக்கும். இந்த ஒற்றுமையை நினைச்சா ஆச்சரியமாத்தான் இருக்கு. ஆமாம். உன்னோட திட்டம் என்ன?" என்றார் மணிவண்ணன்.

"இது மாதிரி நிலைமைகள்ள வங்கிகள்தான் உதவணும். ஆனா அவங்க ஏற்கெனவே கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டு கெடுபிடிதான் பண்றாங்க. எனக்குத் தெரிஞ்ச ஒரு பெரிய மனுஷன் இருக்காரு. அவர்கிட்ட ஐம்பது லட்சம் ரூபாய் கேக்கப் போறேன். அவர் கொடுத்து உதவினா நிலைமையை சமாளிச்சு அஞ்சாறு மாசத்துக்குள்ள இயல்புநிலைக்கு வந்துடலாம்னு நினைக்கிறேன்."

"நீ சொல்றது சரிதான். இந்த மாதிரி சமயத்தில உதவி கிடைச்சா நம்மால மீண்டு வர முடியும். ஆனா உதவி கிடைக்கிறது கஷ்டம்தான். நான் உதவி கேக்கறதுக்குக் கூட ஒத்தர் இருக்காரு. ஆனா அவர்கிட்ட உதவி கேட்க எனக்குத் தயக்கமா இருக்கு" என்றார் மணிவண்ணன்.

"நம்ம நிலைமை மோசமா இருக்கறப்ப தயக்கத்தை எல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டுக் கேக்க வேண்டியதுதான். இது நமக்கு வாழ்வா சாவாங்கற பிரச்னையாச்சே!" என்றார் கதிரேசன்.

ரு வாரம் கழித்து கதிரேசன் மணிவண்ணனுக்கு ஃபோன் செய்தார். "என்ன கதிரேசா, ஏதேனும் செய்தி உண்டா?" என்றார்.

"நான் சொன்னேனே, எனகுத் தெரிஞ்ச ஒத்தர் இருக்காருன்னு, அவர் எனக்கு உதவி செய்யறதா சொல்லிட்டாரு. இன்னும் ரெண்டு நாள்ள பணம் கிடைச்சுடும்!" என்றார் மணிவண்ணன் உற்சாகமாக.

"அவர்கிட்ட உதவி கேக்கறதுக்குத் தயக்கமா இருக்குன், இப்ப இவ்வளவு உற்சாகமாப் பேசற!"

"தயக்கமாத்தான் இருந்தது. அவர் என்னோட தூரத்து உறவினர். அவர்கிட்ட கடன் கேட்டா என்னை இளப்பமா நினைப்பாரோன்னு தயங்கினேன். ஆனா அவர் ரொம்பப் பெருந்தன்மையா நடந்துக்கிட்டாரு. வியாபாரத்தில இது மாதிரி நிலைமைகள் வரது இயல்புதான்னு சொல்லி உடனே கடன் கொடுக்க ஒதுக்கிட்டாரு. நீ இப்படி இருக்கணும், அப்படி இருக்கணுங்கற உபதேசம் எதுவும் செய்யல. என்னை நம்பி நான் கேட்ட உதவியைச் செய்யறதாதான் காட்டிக்கிட்டாரு. போகும்போது தயக்கத்தோட போனவன், வரும்போது சந்தோஷமா வந்தேன். ஆமாம். உன் விஷயம் என்ன? உனக்குத் தெரிஞ்சவர் ஒத்தர் இருக்கார்னு சொன்னியே! அவர்கிட்ட கேட்டியா?"

"கேட்டேன், கொடுத்துட்டாரு!"

"கொடுத்துட்டாரா? ரொம்ப நல்லது. ஆனா இதை ஏன் இவ்வளவு உற்சாகம் இல்லாம சொல்ற?"

"என்ன செய்யறது? உனக்குக் கடன் கொடுத்தவர் நடந்துக்கிட்ட மாதிரி எனக்குக் கொடுத்தவர் நடந்துக்கலையே! முதல்ல என்னோட அலட்சியத்தாலதான் இந்த நிலைமை வந்துச்சுங்கற மாதிரி பேசினாரு. அப்புறம் பணம் கொடுக்கறேன்னு சொல்லிட்டு சின்னக் குழந்தைக்கு செய்யற மாதிரி ஏகப்பட்ட உபதேசம்! வெளியில வரப்ப, கடன் கிடைச்சதேங்கற சந்தோஷத்தை விட  அவர் பேசின பேச்சினால ஏற்பட்ட எரிச்சலும் அவமானமும்தான் அதிகமா இருந்தது" என்றார் கதிரேசன்.

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 106
இரவு (யாசித்தல்)

குறள் 1057:
இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து.

பொருள்: 
இழித்துப் பேசாமலும், ஏளனம் புரியாமலும் வழங்கிடும் வள்ளல் தன்மை உடையவர்களைக் காணும்போது, இரப்போர் உள்ளம் மகிழ்ச்சியால் இன்பமுறும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...