Sunday, April 7, 2024

1058. மகேஷின் விளக்கம்!

"இந்த மாசம் கிரடிட் கார்ட் பில் தொகை அதிகமா வந்திருக்கு போல இருக்கே!" என்றாள் கிரிஜா.

"பாக்கலாம். டியூ டேட்டுக்கு இன்னும் 10 நாள் இருக்குல்ல, கட்டிடலாம்!" என்றான் மகேஷ்.

"எங்கேந்து கட்டுவீங்க? சம்பளப் பணம் முழுக்க செலவழிஞ்சு போயிடுச்சு. மாசம் முடியற வரைக்கும் மீதிச் செலவுக்கே பணம் இல்ல. இதில கிரடிட் கார்ட் பில் கட்டப் பணம் எங்கேந்து வரும்?"

மகேஷ் மௌனமாக இருந்தான்.

"இந்தா. ஐயாயிரம் ரூபா. வீட்டுச் செலவுக்கு வச்சுக்க!" என்றான் மகேஷ்.

பணத்தை வாங்கிக் கொண்ட கிரிஜா, "கிரடிட் கார்ட் பில் கட்டணுமே!" என்றாள்.

"கட்டியாச்சு!"

ஒரு நிமிடம் மௌனமாக இருந்த கிரிஜா, "யார்கிட்ட கடன் வாங்கினீங்க?" என்றாள்.

"யார்கிட்டேந்து வாங்கினா என்ன? கடன் கிடைச்சது. கிரடிட் கார்ட் பில் கட்டியாச்சு. வீட்டுச் செலவுக்கும் கொஞ்சம் பணம் கொடுத்துட்டேன். அவ்வளவுதான்!" 

"கேக்கறேனேன்னு தப்பா நினைக்காதீங்க. இப்படி அடிக்கடி யார்கிட்டேயாவது கடன் வாங்கிக்கிட்டே இருக்கீங்களே, உங்களுக்கு இது அவமானமாத் தெரியலையா?" என்றாள் கிரிஜா, சற்றுத் தயக்கத்துடன்.

"அவமானமோ, இல்லையோ, உலகத்தில சில பேர் மத்தவங்ககிட்ட உதவி கேக்கத்தான் வேண்டி இருக்கு. உதவி செய்யறவங்களுக்கும் அதனால திருப்தியும், சந்தோஷமும் கிடைக்குது. உதவி கேக்கறவங்க இல்லைன்னா, உதவி செய்யறவங்களுக்கு வாழ்க்கையில சுவாரசியம் இருக்காது. உதவி கேக்கறவங்களுக்கும்தான்! வாழ்க்கையில சுவாரசியம் இல்லேன்னா மனுஷங்க பொம்மைகள் மாதிரிதான் வாழ வேண்டி இருக்கும்!" என்றான் மகேஷ்.

"நல்லா இருக்கு, மத்தவங்ககிட்ட உதவி கேட்டுக்கிட்டே இருக்கறதை  நீங்க நியாயப்படுத்தறது!" என்றாள் கிரிஜா

பொருட்பால் 
குடியியல்
அதிகாரம் 106
இரவு (யாசித்தல்)

குறள் 1058:
இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று.

பொருள்: 
இரப்பவர் இல்லையானால், இப்பெரிய உலகின் இயக்கம் மரத்தால் செய்த பாவை கயிற்றினால் ஆட்டப்பட்டுச் சென்று வந்தாற் போன்றதாகும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...