Sunday, March 24, 2024

1056. உள்ளிருந்து வந்த உதவி!

"வாங்க. எங்கே இவ்வளவு நாள் கழிச்சு?" என்று வரவேற்றார்பரமசிவம்.

தயங்கிக் கொண்டே பரமசிவத்தின் வீட்டுக்குள் நுழைந்த பாலன் "சும்மாதான். பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன்" என்றார். 

பரமசிவம் பாலனுடன் ஒரே கிராமத்தில் வசித்தவர். பாலன் ஒரு விவசாயி. பரமசிவம் ஒரு நெல் வியாபாரி. 

கிராமத்தில் இருந்து கொண்டு நெல் வியாபாரம் செய்தது அவ்வளவு லாபகரமாக இல்லை என்பதால் பரமசிவம் அருகிலிருந்த நகரத்துக்குக் குடி பெயர்ந்து விட்டார். நகரத்துக்கு வந்த பிறகு தன் வியாபாரத்தை விரிவாக்கி ஓரளவு வருமானம் பெற்று வந்தார்.

பாலன் நகரத்துக்கு வரும்போதெல்லாம் பரமசிவத்தை வந்து பார்த்து விட்டுப் போவார்.

சிறிது நேர உரையாடலுக்குப் பிறகு, "ஆமாம். இது விதைக்கிற பருவமாச்சே! உங்க நிலத்தில விதை போட்டுட்டீங்களா?" என்றார் பரமசிவம்.

"இல்லை. போன வருஷம் விளைச்சல் குறைவா இருந்ததால விதை நெல்லைக் கூட சேமிச்சு வைக்க முடியல. இப்ப பணம் கொடுத்துத்தான் விதை நெல் வாங்கணும். எங்கிட்ட இப்ப பணம் இல்லை. நான் உங்களைப் பார்க்க வந்ததுக்கு அதுவும் ஒரு காரணம்" என்றார் பாலன் தயக்கத்துடன். 

"எவ்வளவு வேணும்?"

"முப்பதாயிரம் இருந்தா நல்லா இருக்கும்."

"இப்ப எங்கிட்ட அவ்வளவு பணம் இல்லையே!" என்றார் பரமசிவம் யோசித்தபடியே.

அதற்குள் உள்ளிருந்து பரமசிவத்தின் மனைவி தங்கம் அவரை உள்ளே வருமாறு அழைக்க, பரமசிவம் உள்ளே சென்றார்.

ஓரிரு நிமிடங்கள் கழித்துத் திரும்பி வந்த பரமசிவத்தின் கை நிறைய ரூபாய் நோட்டுகளும், முகம் நிறைய மகிழ்ச்சியும் இருந்தன.

"இந்தாங்க, முப்பதாயிரம் ரூபாய்!" என்றுபடியே நோட்டுகளை பாலனின் கையில் கொடுத்தார் பரமசிவம்.

'இப்போதுதானே பணம் இல்லையென்று சொன்னார்? அதற்குள் எப்படிப் பணம் வந்தது?' என்ற பாலனின் கேள்வியை அவருடைய முகக்குறிப்பிலிருந்து புரிந்து கொண்ட பரமசிவம், "எங்க பொண்ணு வயசுக்கு வந்தா அவளுக்கு சடங்கு செய்யணுங்கறதுக்காக எனக்கே தெரியாம என் மனைவி கொஞ்சம் பணம் சேர்த்து வச்சிருக்கா. நான் பணம் இல்லேன்னு சொன்னதும் என்னை உள்ளே கூப்பிட்டு இந்தப் பணத்தைக் கொடுத்தா!" என்றார் பெருமையுடன்.

திகைத்து நின்ற பாலன், "யாராவது உதவி கேட்டா, நிறைய பேர் கையில் பணம் இருந்தா கூட இல்லேன்னு சொல்லுவாங்க. உங்க மனைவி உங்களுக்கே தெரியாம தான் சேர்த்து வச்சிருக்கற பணத்தைக் கொடுத்து உதவி செய்யறாங்க. இந்தாங்க இந்தப் பணத்தை அவங்ககிட்ட கொடுத்துடுங்க. அவங்க அதை ஒரு நோக்கத்துக்காக வச்சிருக்காங்க. அதை நான் வாங்கிக்க் கூடாது!" என்று தான் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்தார். 

அதற்குள் உள்ளிருந்து வந்த தங்கம், "உங்களுக்கு விதைநெல்லு வாங்கப் பணம் வேணும்னு கேட்டீங்களே! அது முக்கியம் இல்லையா? பணத்தை வாங்கிக்கங்க!" என்றாள்.

"இல்லம்மா! உங்களை மாதிரி நல்ல மனசு உள்ளவங்க இருக்கறப்ப என்னோட பிரச்னை தானே சரியாயிடும்னு எனக்கு நம்பிக்கை வந்துடுச்சு. எனக்கு வேற விதத்தில பணம் கிடைக்கும். உங்க நல்ல மனசை நான் எப்பவுமே மறக்க மாட்டேன்!" என்று இருவரிடமும் கைகூப்பி விடைபெற்றார் பாலன்.

பொருட்பால் 
குடியியல்தான்
அதிகாரம் 106
இரவு (யாசித்தல்)

குறள் 1056:
கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்.

பொருள்: 
இருப்பதை மறைப்பதாகிய நோய் இல்லாதவரைக் கண்டால், இல்லாமையாகிய நோய் எல்லாம் மொத்தமாக அழியும்.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1060. ஏன் உதவவில்லை?

"யார்கிட்ட உதவி கேக்கறதுன்னே தெரியல!" என்றான் பரந்தாமன். "யார்கிட்டயாவது கேட்டுத்தானே ஆகணும்? இன்னும் ரெண்டு நாளைக்குள்ள பணம்...