"போய்ப் பாத்துக்கிட்டுத்தான் இருக்கேன். நல்லாத்தான் இருக்கு" என்றான் அவர் மகன் முருகன், எரிச்சலுடன்.
"நான் கேட்டா உனக்கு எரிச்சலாத்தான் இருக்கும். நிலத்தில விதை விதைச்சுத் தண்ணி ஊத்திட்டு வந்துட்டா, பயிர் தானா வளராது. நிலத்தை அடிக்கடி போய்ப் பார்த்து, செய்ய வேண்டியதை செஞ்சுட்டு வரணும். எனக்கு உடம்பு முடியாம படுத்திருக்கறதால, உங்கிட்ட சொல்ல வேண்டி இருக்கு!" என்றார் செல்லப்பா.
"யார்கிட்ட சொல்லிக்கிட்டிருக்கீங்க? அவன் போய்ப் பத்து நிமிஷம் ஆச்சு!" என்றார் செல்லப்பாவின் மனைவி தையல்நாயகி.
"கட்டின பொண்டாட்டியைப் பாத்துக்கற மாதிரி நிலத்தைப் பாத்துக்கணும். இவன்தான் கட்டின பொண்டாட்டியை சரியா கவனிக்காம, அவ கோவிச்சுக்கிட்டுப் போயிட்டாளே! நிலத்தை எங்கே பாத்துக்கப் போறான்? சம்பந்திகிட்டேந்து தகவல் ஏதும் வந்ததா?"
"ஒண்ணும் வரலை. மருமவ கோவிச்சுக்கிட்டுப் போய், அவ அம்மா வீட்டில உக்காந்திருக்கா. அவளோட அப்பா அம்மாவும் அவளுக்கு புத்தி சொல்லி, இங்கே அனுப்பி வைக்கற மாதிரி தெரியல!" என்றாள் தையல்நாயகி, சலிப்புடன்.
"எனக்கு உடம்பு நல்லா இருந்தா, நானே போய் அவளைச் சமாதானப்படுத்தி அழைச்சுக்கிட்டு வந்துடுவேன். அவ பொறந்த வீட்டுக்குப் போய் அவளை அழைச்சுக்கிட்டு வரச் சொல்லி முருகன்கிட்ட சொன்னியா?"
"சொல்லாமயா இருப்பேன்? எத்தனையோ தடவை சொல்லியாச்சு. அவன் காதில போட்டுக்கிட்டாத்தானே!" என்ற தையல்நாயகி, "இருங்க. யாரோ கூப்பிடறாங்க. போய்ப் பாத்துட்டு வரேன்" என்று கூறி விட்டு, வாயிற்புறம் சென்றாள்.
சில விநாடிகளில் அவள் உள்ளே வந்தபோது, அவளுடன் செல்லப்பாவின் நண்பர் அம்மையப்பனும் வந்தார்.
"என்ன செல்லப்பா, உடம்பு எப்படி இருக்கு?" என்றார் அம்மையப்பன்.
"இருக்கு. எழுந்து நடமாட முடியலியே!"
"உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். உன்னோட வயல்ல பூச்சி வந்திருக்கு. உன் பையன் பாக்கல போலருக்கு. முன்னாலேயே பாத்திருந்தா, கட்டுப்படுத்தி இருக்கலாம். இன்னிக்கு உன் வயல் பக்கம் போறப்பதான் பாத்தேன். பயிர்ல பெரும்பகுதி பூச்சி அரிச்சிருக்கும் போலருக்கே!" என்றார் அம்மையப்பன்.
"என்னத்தைச் சொல்றது? அடிக்கடி வயலுக்குப் போய்ப் பாத்துட்டு வான்னு அவன்கிட்ட எவ்வளவோ தடவை சொல்லிட்டேன். பாத்துட்டுத்தான் வரேன்னு எங்கிட்ட பொய் சொல்லிட்டு, ஊரைச் சுத்திக்கிட்டிருக்கான் போல இருக்கு. கஷ்டப்பட்டு வளர்த்த பயிர் எல்லாம் பாழாயிடுச்சு. எல்லாம் என் தலை விதி" என்றார் செல்லப்பா, பொங்கி வந்த துக்கத்தை அடக்கிக் கொண்டு.
பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 104
உழவு
குறள் 1039:
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்.