Friday, December 1, 2023

1036. மௌன விரதம் முறிந்தது!

காட்டுக்கு வேட்டையாடச் சென்றபோது, அரசன் அந்தத் துறவியைப் பார்த்தான். ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்த அந்தத் துறவியைச் சுற்றிச் சில சீடர்கள் அமர்ந்திருந்தனர்.

துறவியை வணங்கி விட்டுக் கிளம்பிய அரசன், சற்றுத் தொலைவு சென்றதும், சட்டென்று நின்றான்.

ஏதோ ஒரு முடிவுடன் துறவி இருந்த இடத்துக்குத் திரும்பச் சென்ற அரசன், துறவியின் அருகில் சென்று, "முனிவரே! தாங்கள் இந்த மரத்தடியில் அமர்ந்திருப்பதைப் பார்த்து என் மனம் வேதனைப்படுகிறது. அருகிலேயே உங்களுக்கு ஒரு ஆசிரமம் கட்டித் தர விரும்புகிறேன். அதற்குத் தாங்கள் அனுமதிக்க வேண்டும்" என்றான்.

முனிவர் சைகையினால் தன் அருகிலிருந்த சீடரிடம் ஏதோ சொல்ல, அந்தச் சீடர் அரசனிடம் வந்து, "அரசே! முனிவர் ஒரு மண்டலம் மௌன விரதம் அனுஷ்டித்து வருகிறார். அவர் சைகையில் என்னிடம் தெரிவித்ததைத் தங்களிடம் சொல்கிறேன். இந்தக் காட்டுக்குள் ஆசிரமம் கட்டுவது இயலாது. அவருக்கு ஆசிரமம் தேவையும் இல்லை. ஆயினும், அவருடைய சீடர்களின் வசதிக்காக ஆசிரமம் அமைப்பது நல்லதுதான். அதை இந்தக் காட்டுக்கு அருகில் உள்ள ஒரு நிலப்பகுதியில் அமைத்துக் கொடுத்தால் நலம் என்று அவர் கருதுகிறார்" என்றார்.

சீடர் கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்த முனிவர், அவர் சொன்னது சரிதான் எனபது போல் தலையசைத்தார்.

"அப்படியே செய்கிறேன், முனிவரே!" என்று முனிவரிடம் கூறிய அரசன், ஒரு வீரனை அருகில் அழைத்து, அவனிடம் சில உத்தரவுகளைப் பிறப்பித்தான்.

"அரசே! தங்கள் கட்டளைப்படி, நாங்கள் ஆசிரமம் அமைக்க இடத்தைத் தேர்ந்தெடுத்தோம். ஆனால், அங்கே ஆசிரமம் அமைக்கும் பணிகளைத் துவங்குமுன், முனிவரின் சீடர்கள் அங்கே வந்து எங்களைத் தடுத்து விட்டனர். முனிவர் தங்களைக் காண வேண்டும் என்று விரும்புவதாவும், அவர்கள் எங்களிடம் கூறினர்" என்றான் படைவீரன்.

அரசன் முனிவர் இருந்த இடத்துக்குச் சென்றான்.

அரசனைக் கண்டதும், முனிவர், "வாருங்கள், அரசே! எனக்காக நீங்கள் ஆசிரமம் அமைத்துக் கொடுக்க முயல்வது பாராட்டுக்குரியதுதான். ஆனால், அதற்காக ஒரு விவசாயியின் நிலத்தையா தேர்ந்தெடுப்பது?" என்றார். 

"முனிவரே! என் வீரர்கள் எந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பது எனக்குத் தெரியாது. அது விவசாய நிலமாக இருந்தால், அந்த நிலத்தின் மதிப்புக்கு அதிகமாகவே அந்த விவசாயிக்குப் பொற்காசுகளை வழங்கி விடுவோம்" என்றான் அரசன்.

"வேண்டாம், அரசே! விவசாயி தன் பணியைச் செய்யாவிட்டால், என் போன்ற முற்றும் துறந்த முனிவர்களால் கூட இயங்க முடியாது. எனவே, அந்த இடம் வேண்டாம். வேறு ஏதாவது தரிசு நிலம் இருந்தால் பாருங்கள். அப்படி இல்லாவிட்டால், எனக்கு ஆசிரமமே வேண்டாம். நான் இங்கேயே இருந்து கொள்கிறேன்."

"தங்கள் விருப்பப்படியே வேறு இடம் பார்க்கச் சொல்கிறேன்" என்ற அரசன், சற்றுத் தயங்கி விட்டு, "தங்கள் மௌன விரதம் முடிந்து விட்டதா?" என்றான்.

"முடியவில்லை, அரசே! முறிந்து விட்டது. அதை முறித்தவன் நான்தான். உங்கள் வீரர்கள் ஆசிரமம் கட்டத் தேர்ந்தெடுத்த நிலத்தின் சொந்தக்காரரான விவசாயி என்னிடம் வந்து முறையிட்டபோது, அவருடைய நிலம் பறி போகாது என்று அவருக்கு உறுதி அளிப்பதற்காக, என் மௌன விரதத்தை முறித்துக் கொண்டு அவரிடம் பேசினேன்" என்றார் முனிவர்.

பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 104
உழவு

குறள் 1036:
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை

பொருள்: 
உழவருடைய கை, தொழில் செய்யாமல் மடங்கியிருக்குமானால், விரும்புகின்ற எந்தப் பற்றையும் விட்டு விட்டோம் என்று கூறும் துறவிகளுக்கும் வாழ்வு இல்லை.
அறத்துப்பால்                                                           காமத்துப்பால்

No comments:

Post a Comment

1080. 'தன்மானத் தலைவரி'ன் திடீர் முடிவு!

தன் அரசியல் வாழ்க்கையின் துவக்கத்தில் இரண்டு மூன்று கட்சிகளில் இருந்து விட்டு, அங்கு தனக்கு உரிய மதிப்புக் கிடைக்கவில்லை என்பதால், 'மக்க...